Friday, March 29, 2024
Home » வெலிகம அறபாவில் வெகுவிமர்சையாக நடைபெற்ற “Back To School” நிகழ்வு

வெலிகம அறபாவில் வெகுவிமர்சையாக நடைபெற்ற “Back To School” நிகழ்வு

by mahesh
October 4, 2023 4:47 pm 0 comment

வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பிரமாண்ட நிகழ்வில் 1967 முதல் 2017 வரையில் கற்ற சுமார் 2000 ஆண், பெண் பழைய மாணவர்கள் மற்றும் முன்னாள் அதிபர், ஆசிரியர்கள் பங்கேற்பு

எத்தனை காலங்கடந்தாலும் எத்தனை வயது தாண்டினாலும் பாடசாலை அனுபவமும் அந்த பருவத்து நினைவுகளும் என்றும் மறவாதவை. பசுமையாக நெஞ்சில் குடிகொண்டிருப்பவை. பாடசாலை கால நட்புகள் ஆண்டாண்டு காலமாக தொடரும் உயர்வான உறவாகும்.

பாடசாலை வாழ்வு வெறும் 13-14 வருடங்களுடன் முற்றுப்பெற்று விடும். சிலர் அதிபராக, ஆசிரியராக அதே பாடசாலையுடன் தமது உறவை தொடரும் பாக்கியத்தை பெற்றாலும் அநேகருக்கு அவ்வாறு வாய்ப்பு கிட்டுவதில்லை. அதே பாடசாலையில் அவர்களுடைய பிள்ளை கற்கும் போது பாடசாலையுடன் தொடர்பு ஏற்படும். இவ்வாறான பிணைப்புகள் தவிர பலருக்கு பாடசாலையுடனான உறவு நீடிப்பதில்லை.

இந்த நிலையில் மீ்ண்டும் பள்ளிக்கு “Back To School” நிகழ்வுகள் பலருக்கும் தமது கடந்த காலத்தை திரும்பிப் பார்க்க ஒரு வரப்பிரசாதமாக அமைந்து விடுகிறது. எத்தனை உயர்பதவிகள் வகித்தாலும் தள்ளாடும் வயதானாலும் நாடு கடந்து வாழ்ந்தாலும் அறிவுப் பாலூட்டிய தாயைத் தேடி ஓடிவர எவரும் தயங்குவதில்லை. அவ்வாறான அரிய சந்தர்ப்பங்களை தவறவிடுவதும் இல்லை.

வெலிகம அறபா தேசிய பாடசாலை என்பது சுமார் 135 வருடங்களாக தென்பகுதியில் பல ஆயிரம் பிள்ளைகளின் அறிவுக் கண்ணைத் திறந்து விட்ட கலையகம். கல்வி, விளையாட்டு, கலை என பல்வேறு துறைகளிலும் மிளிர்ந்த இந்த கலையகம் காலத்துக்குக் காலம் ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் இன்றும் தலைநிமிர்ந்து மிடுக்கோடு வீருநடைபயின்று வருகிறது.

10 வருடங்களுக்கு முன்னர் சிறப்பாக தனது 125 வருட மைல்கல்லை எட்டி பெருவிழா கொண்டாடிய அறபா அண்மையில் மீண்டும் ஒருநாள் பள்ளிக்கு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தி தனது அன்புச் செல்வங்களை அரவணைத்துக் கொண்டது.

பாடசாலையின் கல்வி, விளையாட்டு மற்றும் ஏனைய இணைப்பாட விதான செயற்பாடுகளில் முன்னிலை வகிப்பதோடு ஒவ்வொரு வருடமும் பல மாணவர்கள் மருத்துவம், பொறியியல், வணிகம் மற்றும் கலைப்பிரிவுகளில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. இருந்த போதும் மாணவர்களின் தொகை அதிகரிப்பு, ஆசிரியர் பற்றாக்குறை , வகுப்பறை தட்டுப்பாடு, மாணவர்களின் கல்வி ஆர்வமின்மை , பெற்றோருக்கும் பாடசாலைகளுக்கும் இடையிலான தூரம் என பல்வேறு விடயங்கள் பாடசாலையில் முன்னேற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.

இதனை ஆராய்ந்து தீர்த்து வைப்பதில் பழைய மாணவர்களின் பங்கு பிரதானமாக இருந்தாலும் யார் இதனை ஆரம்பித்து வைப்பது என்ற கேள்வி நீடித்தது. இந்த நிலையில் தான் இளம் பழைய மாணவர் குழுவொன்று களத்தில் இறங்கியது.

பௌதீக வள குறைபாடுகள், கல்வி மற்றும் விளையாட்டுத் துறைசார்ந்த தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நோக்கில் “ uplift 2030” என்ற தொனிப் பொருளில் புதிய தெம்புடன் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் ஒரு எட்டாகத்தான் ‘மீண்டும் ஒருநாள் பள்ளிக்கு’ என்ற நிகழ்ச்சி பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் பூரண ஒத்துழைப்புடன் கடந்த 8 மாதங்களாக பழைய மாணவர் குழு இரவு பகல் பாராது உழைத்து ஏற்பாடுகளை முன்னெடுத்தது. அதன் பெறுபேறுகளை கடந்த செப்டம்பர் 30 ஆம் மற்றும் ஒக்டோபர் 1 ஆம் திகதிகளில் கண்கூடாகக் காணக்கிடைத்தது. ஆண்களுக்கான நிகழ்வு 30 ஆம் திகதியும் பெண்களுக்கான நிகழ்வு ஒக்டோபர் 1 ஆம் திகதியும் இடம்பெற்றது.

அறபா தேசிய பாடசாலையில் கல்வி கற்ற நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் வேலை செய்யும் வைத்தியர்கள், பொருளியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், பல்வேறு துறைசார் நிபுணர்கள், வர்த்தகர்கள் என பலதரப்பட்ட 2000 க்கும் மேற்பட்ட பழைய மாணவ மாணவிகள் தமது பங்களிப்பை வழங்கியிருந்தனர். 1967 முதல் 2017 வரையில் கற்ற பழைய மாணவர்கள் ஒன்று கூடலில் கலந்து கொண்டதுடன் பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் என பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தனர். தாம் கல்வி கற்ற பாடசாலை நாட்களின் நினைவுகளை மீட்டுவதாகவும் தமது பாடசாலைக்கு எதாவது ஒருவகையில் உதவ வேண்டும் என்ற நோக்கிலும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நீண்ட காலத்தின் பின்னர் கிடைத்த இந்த அரிய வாய்ப்பை தவறவிடக் கூடாதென்ற ஆசையில் வெளிநாடுகளில் இருந்தும் பல பழைய மாணவர்கள் வருகை தந்திருந்தனர். நாட்டின் பல இடங்களில் இருந்தும் இதில் கலந்து கொள்வதற்கு ஓடோடி வந்தவர்களின் எண்ணிக்கை பல நூறு. பழைய மாணவர்களைப் போலவே இங்கு கல்வி கற்பித்த முன்னாள் ஆசிரியர்கள் பலரும் தள்ளாத வயதிலும் ஆர்வமாக வந்து கலந்து கொண்டது பலரையும் வியப்பூட்டியது.

செப்டம்பர் 30 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் ஆண்களுக்கான நிகழ்வு வெலிகம முஸ்லிம் ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பமானது. பழைய மாணவர்கள் ஒன்றுசேர்ந்து நடைபவனியாக அறபா தேசியபாடசாலைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 6.00 மணி முதலே பழைய மாணவர்கள் வர ஆரம்பித்ததோடு பலரும் தான் கற்ற வகுப்பறைகளை தேடிச் சென்று பழைய நினைவுகளை மீட்கத் தவறவில்லை. கருப்பு காற்சட்டையும் வெள்ளை நிற சேர்டும் அணிந்து புத்தகப் பை , தண்ணீர் போத்தல், சாப்பாட்டுப் பெட்டி என வயது வித்தியாசமின்றி பலரும் நிறைந்திருந்தார்கள்.

ஊர்வலமாக வந்த பழைய மாணவர்களை கண்டு களிக்க வீதியின் இருபுறமும் ஊர்மக்கள் திரண்டிருந்தனர். பாடசாலை அதிபர் எம்.ரி.எம். முதஹ்ஹர் மற்றும் முன்னாள் அதிபர் ஏ.எம்.எம். ஆரிப் உள்ளிட்ட ஆசிரியர்கள் வாயிலுக்கு அருகில் இருந்து இன்முகத்துடன் பழைய மாணவர்களை வரவேற்றனர்.

அறபா மைதானத்தில் ஆண்டு அடிப்படையில் பழைய மாணவர்கள் நிறுத்தப்பட்ட பின்னர் தேசிய கீதம் மற்றும் பாடசாலை கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. தேசிய கொடியை முன்னாள் அதிபர் ஏ.எம்.எம். ஆரிபும் பாடசாலைக் கொடியை பாடசாலையின் அதிபர் எம்.ரி.எம். முதஹ்ஹரும் பழைய மாணவர் சங்க கொடியை பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் நுஸ்ரியும் ஏற்றி வைத்தனர்.

முன்னாள் அதிபர் ஏ.எம்.எம். ஆரிப், அன்றைய நாள் அதிபராக தலைமை தாங்கி அன்றைய பாடசாலைக்கான காலைக்கூட்ட நிகழ்வுகள் கிராத்துடன் இனிதே ஆரம்பமானது. அதன் பின்னர் அன்றைய நாள் அதிபரின் உரை இடம் பெற்றது.

மறக்காமல் உடற்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. தலைமை உரையின் போது தனது கடந்த கால அனுபவங்களை முன்னாள் அதிபர் ஆரிப் பகிர்ந்து கொள்ளத் தவறவில்லை.

மணி அடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வகுப்பறைகளுக்கு மாணவர்கள் வரிசையாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். அத்தோடு ஒவ்வொரு வகுப்பிற்கும் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு அவர்களும் வகுப்பறைகளுக்கு சமுகமளித்தார்கள். வகுப்பறைகளில் மாணவர் அறிமுகம்,பழைய நினைவுகளை மீட்டல், பழைய அனுபவப் பகிர்வு ,கூத்து கும்மாளம் என இனிமையாக கடந்து சென்றது. சில வகுப்புகளில் பாட்டுச்சத்தம் விசில் ஒலியுடன் களைகட்டியது. சில வகுப்பறைகள் அரட்டை அடிக்கும் சத்தத்தினால் அதிர்ந்தது.

அதனைத் தொடர்ந்து காலை உணவிற்கான இடைவேளை வழங்கப்பட்டதோடு மீண்டும் மணி அடிக்க மாணவர்கள் அனைவரும் மீண்டும் மைதானத்தில் ஒன்று கூடினார்கள்.

“அறபாவை மேலெழச் செய்வோம்” என்ற தொனிப் பொருளில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆரம்ப நிகழ்வாக பாடசாலையின் அதிபர் எம்.ரி.எம். முதஹ்ஹரின் உரையை தொடர்ந்து பழைய மாணவர் சங்க “uplift 2030” குழுத் தலைவர் அஷ்கர் uplift 2030 நிகழ்வை அறிமுகப்படுத்தினார். இதன்போது பாடசாலையின் எதிர்கால முப்பரிமாண வரைவுக் காணொளி காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் நாடறிந்த பேச்சாளர் பாதிர் முஹிதீன் அவர்களின் மிகச்சிறப்பான உரை இடம்பெற்றது. பல்வேறு மாணவர் குழுக்களும் 2030 கனவை நிறைவேற்றுவதற்கான தமது ஒத்துழைப்பை வெளியிட்டிருந்ததோடு பெருமளவு தொகை பணம் வழங்கவும் அவர்கள் முன்வந்திருந்தனர். சுமார் இரண்டரைக் கோடி அளவில் பெறுமதியான பல வேலைத்திட்டங்கள் பழைய மாணவர்களினால் பொறுப்பேற்கப்பட்டன.

அதேநேரம், பாடசாலையின் பழைய மாணவர்களான அஸ்ஹர் குடும்பத்தினரால் சுமார் எழுபது இலட்சம் பெறுமதியில் அல்ஹாஜ் எம். எம். அஸ்ஹர் ஞாபகார்த்த வாசிகசாலை புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கும் சிறப்பு வைபவம் நடைபெற்றது. ளுஹர் தொழுகையுடன் மதிய உணவு பாடசாலையில் வழங்கப்பட்டது.

பகல் போசனத்தின் பின்னர் கலாமன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் பழைய மாணவர்கள் பலரதும் பாடல்கள், மற்றும் நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. தமது பள்ளித் தோழர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விசில் சத்தம் ஒலித்ததோடு கரகோசம் எழுப்பவும் அவர்கள் தவறவில்லை.

நேரம் செல்வது தெரியாமல் பழைய மாணவர்கள் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களில் திரண்டிருந்து நிகழ்வுகளை ரசித்தார்கள்.

சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்த போதும் பலரதும் பிராத்தனையினால் அன்றைய தினம் மழை பெய்யாததினால் நிகழ்வுகள் இனிதாக நடந்து முடிந்தன. இளம் அறிவிப்பாளர் மொஹமட் சபர் நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கியிருந்தார்.

பசுமையான நினைவுகளுடன் பழைய மாணவர்களும் முன்னாள் ஆசிரியர்களும் கலைந்து சென்றதோடு தற்போதைய அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க செயற்பாட்டு உறுப்பினர்களின் முகங்களில் வெற்றிப் பெருமிதம் தெரிந்தது. அன்றுடன் அவர்களின் பணி நிறைவடையவில்லை.

* பெண்களின் ஒன்றுகூடல்

மறுநாள் நடைபெறும் பெண்களுக்கான நிகழ்வுகளின் முன்னேற்பாடுகள் அடுத்து ஆரம்பித்தன. மறுநாள் காலை மீண்டும் ஒருநாள் பள்ளிக்கு நிகழ்வு ஆரம்பமானது. இதில் பெண்கள் அதிக ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள். கருப்பு நிற ஹபாயாவும் இளஞ்சிவப்பு நிற பர்தாவும் அணிந்து அனைவரும் வயது வேறுபாடின்றி இதில் பங்கேற்றார்கள். பெண்களும் ஊர்வலமாக அறபா தேசிய பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டதோடு அங்கும் காலைக் கூட்டம், வகுப்பறை நிகழ்வுகள் கலாமன்றம் என அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடந்து முடிந்தன.

ஆண்களுக்கு தமது சகாக்களை சந்திக்கவும் அரட்டை அடிக்கவும் ஒன்றுகூடவும் வாய்ப்புகள் இருந்த போதும் பெண்களுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே இந்த மீண்டும் பள்ளிக்கு நிகழ்வை ஆண் பழைய மாணவர்களை விட பெண்கள் அணுஅணுவாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். சிலர் 35- 40 வருடங்களின் பின்னர் தமது பள்ளித்தோழிகளை சந்திக்க இந்த நிகழ்வு வழிகோலியது. பாடசாலை விட்டுச் சென்ற பின்னர் அன்று தான் மீண்டும் பாடசாலையில் காலடி எடுத்து வைத்தவர்களும் இருக்கவே செய்கின்றனர். அதனால் தான் போலும் வகுப்பறைகளில் பெண் பழைய மாணவிகள் ஆட்டம் பாட்டம் ,கொண்டாட்டம் ,அரட்டை என இன்பமாக கழித்தாக தெரிகிறது.

மீண்டும் ஒருநாள் பள்ளிக்கு நிகழ்வானது பாடசாலைக்கும் பழைய மாணவர்களுக்கும் இடையிலான நெருக்கத்தை அதிகரித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. விடுபட்ட உறவுகள் தமது உறவை புதுப்பித்துக் கொள்ளவும் புதிய நட்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் பழைய நினைவுகளை கண்முன் கொண்டுவரவும் வாய்ப்பை அளித்துள்ளது. 2030 இல் பாடசாலையை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவரும் கனவை நனவாக்க அனைவரும் ஒன்று பட வேண்டும். அது பாடசாலை நிர்வாகத்தினதும் பழைய மாணவர் அமைப்பினதும் ஊர் மக்களினதும் அவாவாகும்.

– ஷம்ஸ் பாஹிம் (வெலிகம அறபா பழைய மாணவன், 1991 சா/த குழு)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT