26 ஆவது நாளாக தொடரும் வவுனியா போராட்டம் | தினகரன்

26 ஆவது நாளாக தொடரும் வவுனியா போராட்டம்

 
வவுனியாவில் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வெயில், மழை போன்றவற்றைப் பொருட்படுத்தாது தொடர்ந்தும் 26ஆவது நாளாக இன்று (21) தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். 
 
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. 
 
 
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரால் வழங்கப்பட்ட உறுதி மொழிக்கு அமைவாக கடந்த  மாதம் கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் அவர்கள் மீண்டும் தமது போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
 
ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் ஆகியோரில் ஒருவர் நேரில் வந்து சாதகமான பதில் வழங்கும் பட்சத்தில் மட்டுமே தமது போராட்டத்தை நிறுத்துவதாகவும், அதுவரை தமது உறவுகளைத் தேடிய போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தம்மை பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தவிர மற்றைய எந்த தமிழ் அரசியல்வாதிகளும் வந்து பேசவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தபுரன்)
 
 

Add new comment

Or log in with...