சிரிய தலைநகரில் கிளர்ச்சியாளர் திடீர் தாக்குதல்: உக்கிர மோதல் | தினகரன்

சிரிய தலைநகரில் கிளர்ச்சியாளர் திடீர் தாக்குதல்: உக்கிர மோதல்

டமஸ்கஸின் கிழக்கு புறநகர் பகுதியில் சிரிய இராணுவம் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து கடும் தாக்குதலுக்கு முகம்கொடுத்துள்ளது.

ஜொபார் மாவட்டத்தில் இருந்து கிளர்ச்சியாளர்கள் நடத்திய எதிர்பாராத தாக்குதலால் தலைநகரின் இதயப்பகுதியில் பீரெங்கி குண்டுகள் மற்றும் ரொக்கெட்டுகள் விழுந்துள்ளன.

கடந்த ஞாயிறு காலையில் கார் குண்டுடன் இந்த தாக்குதல் ஆரம்பமானதாக செயற்பாட்டளர்கள் தகவல் அளித்துள்ளனர். இரகசியம சுரங்கப் பாதை ஒன்றும் பயன்படுத்தப்பட்டதாக அரச ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் கிளர்ச்சியாளர்களை பின்வாங்கச் செய்ய முடிந்ததாக இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது அரச போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்களின் நிலை மீது 30க்கும் அதிகமான வான் தாக்குதல்களை நடத்தியதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

டமஸ்கஸின் சில பகுதிகள் மாத்திரமே அரச எதிர்ப்பாளர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதோடு அதில் ஜொபார் மாவட்டம் தலைநகரின் மத்திய பகுதிக்கு நெருங்கிய பிரதேசமாகும். இங்கு அரச எதிர்ப்பாளர்கள் ஜிஹாதிக்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் என பிரிந்திருப்பதோடு அரச படையும் மோதலில் ஈடுபட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் யுத்தத்தில் இந்த பிரதேசம் முற்றாக அழிந்துள்ளது.

இராணுவம் மூலோபாயம் கொண்ட அப்பாஸித் சதுக்கத்தை நெருங்கியதை அடுத்து நகரம் எங்கும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக டமஸ்கஸில் உள்ள செய்தியாளர்கள் விபரித்துள்ளனர்.

ஜொபார் சுற்றுப்புறத்தில் இரு பாரிய கார் குண்டு தாக்குதல்களை நடத்திய கிளர்ச்சியாளர்கள் அருகில் உள்ள அப்பாசித் சதுக்கத்தை நோக்கி முன்னேறியுள்ளனர். இதன்போது பல கட்டடங்களையும் கைப்பற்றிய அவர்கள் டமஸ்கஸின் சுற்றுப்புறங்களை நோக்கி ரொக்கெட் குண்டுகளை வீசியுள்ளனர்.

இதனை அடுத்து பதிலடியாக அரச படை வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அல் கொய்தாவின் முன்னாள் கிளை அமைப்பாக இயங்கி வந்த ஜபத் பதாஹ் அல் ஷாம் இந்த திடீர் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

எனினும் பர்சாஹ், டிஷ்ரீ மற்றும் கபூன் மாவட்டங்களில் அரச படையுடனான மோதலை தளர்த்தும் நோக்கத்திலேயே கிளர்ச்சியாளர்கள் இந்த அதிரடி தாக்குதலை நடத்தி இருப்பதாக அவதானிகள் நம்புகின்றனர்.

மத்திய டமஸ்கஸ் நீதிமன்ற வளாகத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் மேற்கு மாவட்டமான ரப்வேயில் இடம்பெற்ற மற்றொரு தற்கொலை தாக்குதலில் 20 க்கும் அதிகமானோர் பலியாகினர். 


Add new comment

Or log in with...