கிழக்கு மாகாண மரதன் ஓட்டத்தில் அசங்க தினுரங்க முதலிடம் | தினகரன்

கிழக்கு மாகாண மரதன் ஓட்டத்தில் அசங்க தினுரங்க முதலிடம்

43வது தேசிய விளையாட்டு விழாவுக்கு வீரர்களைத் தெரிவு செய்வதற்கான கிழக்கு மாகாண மரதன் ஓட்டப்போட்டியில் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த அசங்க தினுரங்க புதிய சாதனையுடன் முதலாமிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார். கடந்த சனிக்கிழமை திருகோணமலையில் அமைந்துள்ள மாகாண விளையாட்டுத்துறை திணைக்களத்தின் முன்னால் ஆரம்பிக்கப்பட்ட மரதன் ஓட்டப்போட்டி கும்புறுப்பிட்டிய பாலம் வரையான சுமார் 42 கிலோ மீற்றர் தூரம் வரை சென்றடைந்தது.

கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் என்.மதிவண்ணன் மரதன் ஓட்டப்போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

அம்பாரை,மட்டக்களப்பு,திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இருந்து கூடுதலான வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த அசங்க தினுரங்க இரண்டு மணித்தியாலயம் 43 நிமிடங்கள் 12 செக்கன்களில் ஓடி புதிய கிழக்கு மாகாண சாதனையுடன் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டார்.

அம்பாரை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்வரனின் மேற்பார்வையின் கீழ் அசங்க தினுரங்க இப்போட்டியில் கலந்து கொண்டார்.

அட்டாளைச்சேனைப் பிரதேசம் தீகவாபி கிராமத்தைச் சேர்ந்த அசங்க தினுரங்க இலங்கை இராணுவத்தின் விளையாட்டுப் பிரிவில் கடமையாற்றி வருகின்றார்.

சிறு வயது முதல் மரதன் ஓட்டப்போட்டியில் ஈடுபட்டு வரும் அசங்க பல போட்டி நிகழ்ச்சியிலும் முதலாமிடங்களைப் பெற்று தங்கப்பதங்களையும்,விருதுகளையும் பெற்றுள்ளார்.

10000 மீற்றர், 5000 மீற்றர், 1500மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியிலும் திறமை காட்டி வரும் அசங்க அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கும், அம்பாரை மாவட்டத்திற்கும் தொடர்ந்தும் பெருமைகளை பெற்றுக் கொடுத்து வருவதாக அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.றஸீன் தெரிவித்தார். 36 வயதான அசங்க தினுரங்க தேசிய ரீதியில் இன்னும் பல சாதனைகளைப் படைக்க வேண்டுமென வாழ்த்துவோம்.

(அட்டாளைச்சேனை விசேட நிருபர்) 


Add new comment

Or log in with...