பொர்னியோ கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை மகளிர் அணி | தினகரன்

பொர்னியோ கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை மகளிர் அணி

மலேசியாவில் நடைபெற்று முடிந்திருக்கும் அணிக்கு ஏழு பேர் கொண்ட பொர்னியோ ரக்பி தொடரின் மகளிர் பிரிவில் பொறி கலங்கவைக்கும் ஆட்டத்தினை வெளிப்படுத்திய இலங்கை மகளிர் அணி முதல் முறையாக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

சுதத் சம்பத்தின் பயிற்றுவிப்பின் கீழான இலங்கை மகளிர் அணி, இத்தொடரின் இறுதிப் போட்டியில் தாய்லாந்திற்கு 12--05 என்னும் புள்ளிகள் கணக்கில் அதிர்ச்சியளித்தே இத்தொடரின் வெற்றியாளராக மாறியிருக்கின்றது. போர்னியோ தொடருக்காக மலேசிய செல்லும் இலங்கை எழுவர் ரக்பி அணி

இத்தொடர் ஆரம்பித்த முதல் நாளில் ஆரம்ப கட்டத்திற்குரிய இரண்டு போட்டிகளில் முதற் தரமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த இலங்கை மகளிர் அணி, அந்நாளில் சபாஹ் ஈக்கிள்ஸ் அணியை 48--00 எனவும், தாய்லாந்தை 26--05 எனவும் அபாரமாக வீழ்த்தியிருந்தது.

அதனை அடுத்து, அரையிறுதிப் போட்டியில் மலேசிய மகளிர் அணிக்கு 29-05 என திகைப்பூட்டிய இலங்கை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. எனினும், இறுதிப் போட்டியில் இலங்கை மங்கைகள் வெளிப்படுத்திய ஆட்டமே அதி சிறப்பானதாகும். அயேஷா பெரேரா, தனுஜ வீரக்கொடி, அனுஷ அத்தநாயக்க, ரந்திக்க குமுதமலி மற்றும் தசுனி சில்வா ஆகிய அனைவரும் இலங்கை சார்பாக ட்ரை வைத்து புள்ளி பெற்ற வீராங்கனைகளில் வரவேற்கத்தக்க ஆட்டத்தினை வெளிக்காண்பித்தனர்.

“இத்தொடரினை வெற்றி கொண்டதில் உண்மையாகவே அதிகம் மகிழ்ச்சி அடைகிறேன். எமது வீராங்கனைகள் மலைக்க வைக்கும் ஆட்டத்தினை வெளிப்படுத்தி இருந்தனர். எமக்கு ஏனைய அணிகள் போன்று போதிய வசதிகள் இல்லாதிருந்த நிலையிலும் கூட பயிற்சி ஆட்டங்களில் கடந்த மூன்று மாதங்களாக எமது தரப்பினர் அதிக முனைப்புடன் செயற்பட்டிருந்தனர்.

இத்தொடர் வெற்றியானது எமக்கு வரும் தொடர்களில் எம் அணி மிடுக்குடன் விளையாடுவதற்கு ஒரு பயிற்சியாக அமைந்திருக்கின்றது. அத்துடன், எமக்கு அனுசரணை வழங்கிய SAGT நிறுவனத்தினருக்கும் நான் இத்தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்“ என்றார்.

முன்னதாக, தாய்லாந்து மகளிர் அணியினை எதிர்கொள்ள அயராது பாடு பட்ட இலங்கை மகளிர் அணி, இறுதியில் அவ்வணியினை இத்தொடரில் இரு தடவைகள் ஜெயித்துள்ளது. அத்துடன் இத்தொடரில் இலங்கை மகளிர் அணியின் விளையாட்டு முன்னேற்றம் அடைந்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

இலங்கை மகளிர் அணி போட்டிகளை விளையாடிய விதத்தில் இலங்கை ஆண்கள் அணியினர் காட்டியிராத சிறந்த பாங்குகளையும் காணக்கூடியதாக இருந்தது. 


Add new comment

Or log in with...