உலகிலிருந்து சிட்டுக்குருவிகள் விடைபெறும் நாள் நெருங்குகிறது | தினகரன்

உலகிலிருந்து சிட்டுக்குருவிகள் விடைபெறும் நாள் நெருங்குகிறது

மனிதர்களின் கைகளில் விளையாடும் தொலைபேசியால் சிட்டுக்குருவிகளின் வாழ்க்கை சிதையும் நிலை உருவாகியுள்ளது. நேற்று சிட்டுக்குருவிகள் தினமாகும். அழிந்து வரும் சிட்டுக்குருவிகள் இனத்தைக் காப்பாற்றவும், அவற்றைப் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 20ம் திகதி முதல் ஆண்டுதோறும் உலக சிட்டுக்குருவிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தற்போது சிட்டுக்குருவிகள் இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வருகின்றது. அதுவும் கிராமப்புறங்களில்தான் சிட்டுக்குருவிகள் சிலவற்றைக் காண முடிகிறது.

நகர்ப்புறங்களில் சிட்டுக்குருவிகளை பார்க்க முடியாத நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. சுமார் 20 ஆண்டுக்கு முன்பு கிராமப்புறங்களில் கூரைவீடுகள் அதிகமாக காணப்படும். அந்தக் கூரை வீடுகளிலே சிட்டுக்குருவிகள் கூடுகட்டி “கீச் கீச்” என சத்தமிட்டவாறு சந்தோசமாக தனது இறக்கைகளை அசைத்துக் கொண்டு குடும்பம் நடத்தும் காட்சியைப் பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும்.

மேலும் அவரவர் தோட்டங்களில் விளைந்த நெல் மற்றும் தானிய வகைகளை வீட்டு வாசலில் உலர்த்தி காய வைப்பார்கள். அவற்றை கொத்தித் தின்ன கூட்டம் கூட்டமாக சிட்டுக்குருவிகள் பறந்து வரும். பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். கிராமப்புறங்களில் உள்ள காடுகள் மற்றும் வயல்களில் குருவிகள் கூட்டம் கூட்டமாக வந்து அமர்ந்து இரை தேடும் காட்சி காண்போர் மனதை கவரச் செய்யும்.

ஆனால் இப்போது ஒரு சில இடங்களில் மட்டுமே மிகக் குறைந்த எண்ணிக்கையிலே சிட்டுக்குருவிகளை காண முடிகிறது. இதற்குக் காரணம் என்னவென்று சற்று ஆராய்ந்தால் பின்வரும் காரணங்கள் நமது சிந்தைக்கு தெளிவாகின்றது.

மனிதனின் நடைமுறைப் பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மாறுதல்கள், இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்றுச்சூழல் சார்ந்த சில நடவடிக்கைகள், நவீனமயமாக்கப்படும் தொழில்நுட்பப் புரட்சி ஆகியன சிட்டுக்குருவிகள் அழியக் காரணமாகின்றன. காற்று புகமுடியாத அளவிற்கு குளிரூட்டி பொருத்தப்பட்ட வீடுகளில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டி வாழ முடியாத நிலை உருவாகியுள்ளது.

நகர்ப்புறங்களில் எரிவாயுக்களினால் வெளியேறும் நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுப்புகை மற்றும் நகரங்களின் பெருக்கத்தினாலும், நவீன முறையிலான பல்பொருள் அங்காடி கடைகள் வளர்ந்ததாலும், பலசரக்கு கடைகள் மூடப்பட்ட நிலையில் வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லாத காரணத்தால், நகரங்களில் குருவிகள் பட்டினி கிடந்து இறக்கின்றன.

வயல்களில் செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகள் தெளிப்பதால் பூச்சிகள் மற்றும் வெட்டுக்கிளிகள் கொல்லப்படுவதால் குருவிகளுக்கு உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தொலைபேசிக் கோபுரங்களின் கதிர்வீச்சு, குருவிகளின் கருவை சிதைக்கின்றது. முட்டையிட்டாலும், அந்தக் கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சிட்டுக்குருவிகள் நுளம்புகளின் முட்டைகளை விரும்பி உண்ணும். சிட்டுக்குருவிகள் இல்லாததால் நுளம்புகள் பெருகி நோயைப் பரப்புகின்றன.

சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் வகையில் நம் வீட்டில் அட்டைப் பெட்டிகள் வைத்து அதனை வரவேற்கலாம். அதில் சிறிய ஓட்டை இட வேண்டும். உள்ளே வைக்கோல், தேங்காய் நார்கள், வைத்து அரிசி, தானிய வகைகள் போட்டு வைக்க வேண்டும். மேலும் வீட்டுத் தோட்டங்களில் செடிகளை வைத்து பராமரித்தால் விரைவில் சிட்டுக்குருவிகள் குடியேறி, “கீச் கீச்”என்ற இனிய ஓசையுடன் விளையாடி மகிழ்வதைக் கண்டுகளிக்கலாம்.

உலகில் பல்வேறு பறவையினங்கள் இருந்தாலும் சிட்டுக்குருவிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இந்த சிட்டுக்குருவிகளின் ரீங்காரம் தனித்துவம் வாய்ந்தது. விவசாயிகளின் உற்ற நண்பனாக திகழும் இக்குருவிகள் அறுவடை சமயத்தில், நெற்பயிர்களை அழிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவை.

விஞ்ஞான உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள் அமைக்க பல இடங்களில் மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மரங்களில் வசித்து வரும் சிட்டுக்குருவிகள் அழிகின்றன.

இத்தனை இன்னல்களுக்கும் இடையில் இன்னமும் அவை வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றைக் காக்க வேண்டிய நமது சமூகக் கடமை. முதலில் நமது குழந்தைகளுக்குக் குருவிகளை அறிமுகம் செய்து வையுங்கள்.

கெங்கவல்லி...


Add new comment

Or log in with...