அமைதியுடன் அரும்பணியாற்றிய மனிதநேயன் அமரர் கைலாசபிள்ளை | தினகரன்

அமைதியுடன் அரும்பணியாற்றிய மனிதநேயன் அமரர் கைலாசபிள்ளை

 

மக்கள் மீது, மனித இனத்தின் மீது அபிமானம் கொண்டவராகவும், மனித இன நலன்சார்ந்த விடயங்களில் அக்கறையுள்ளவராகவும், மனித இனத்தின் நன்மைக்காக உழைப்பவராகவும், திகழும் ஒருவரே மனிதநேயராகப் போற்றப்படுகிறார். அசாதாரண சூழ்நிலைகளினால் மக்கள் பாதிக்கப்படும் வேளைகளில்,அவர்களுக்குப் பல வழிகளிலும், உதவுவதே மனித நேயப் பண்பாகும். இதற்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்தவரே வி. கயிலாசபிள்ளை.

இவர் யாழ். மாவட்டத்திலுள்ள அராலி கிராமத்தில் 1934 மார்ச் 31 ஆம் திகதியன்று பிறந்தார். ஆரம்பக் கல்வியை அராலி சரஸ்வதி வித்தியாலயத்திலும், உயர் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும் கற்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி, கொழும்பு வளாகத்தில் பயின்று கணக்குத் துறையில் சிறப்புப் பட்டதாரியானார். அதன் பின் பட்டயக்கணக்காளர் என்ற உயர்நிலை பெற்றார்.

இவர் இலங்கையிலுள்ள பிரபலமான வர்த்தக மற்றும் நிதி நிறுவனங்களில் நிதி முகாமைத்துவம் சார்ந்த உயர் பதவிகளை வகித்துள்ளார். பின்னாளில் ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களுள் ஒருவராகவும், தொடர்ந்து ஜோன் கீல்ஸ் குழுமத்தின் பிரதித் தலைவராகவுமிருந்தார்.

அமரர் வி. கயிலாசபிள்ளை சமய, பொதுநல நிறுவனங்கள் யாவற்றில் இணைந்து ஆற்றிய பங்களிப்புகள் போற்றத்தக்கவை. ஏற்கனவே கொழும்பு விவேகானந்த சபை தலைவராகவும், பின்னர் காப்பாளராகவுமிருந்து ஆற்றிய சேவைகள், திருக்கேதீஸ்வர திருத்தல அறங்காவலர் சபையின் தலைவராகவும், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவராகவும், பின்னர் இந்து மாமன்ற அறங்காவலர் சபை தலைவராகவுமிருந்து செய்த பணிகள் வரலாற்றுப் பதிவாகியுள்ளன. சுவாமி சாந்தானந்தாவை குருவாகக் கொண்டிருந்த இவர், சுவாமிகளது ஆன்மிகப் பணியை பரப்பும் வகையில் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் கலாலயம் ஒன்றை நிறுவி, அதனூடாக ஆற்றிய கலைப் பணிகளும் காலத்தால் மறக்கப்பட முடியாதவை.

அமரர் கயிலாசபிள்ளையின் சமூகநலப் பணிகளுக்கு மகுடமாக சர்வதேச ரீதியில் இயங்கி வரும் மனிதநேய அமைப்புகளின் ஒன்றியத்தினதும், கொழும்பு மனித நேய நிதியத்தினதும், தலைவராகவிருந்து ஆற்றிய சேவைகளை குறிப்பிடலாம். இவரது மனித நேயப் பணிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்த பெருமைக்குரியதாக அகில இலங்கை இந்து மாமன்றம் விளங்குகிறது. இவர் இந்து மாமன்றம் ஊடாக ஆற்றிய பணிகளை தனியானதொரு வரலாற்றுப் பதிவாகச் செய்யலாம்.

1986 ஆம் ஆண்டு இந்து மாமன்றத்தின் தலைவராகவே பாலசுப்பிரமணியம் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து வி. கயிலாசபிள்ளை மாமன்ற பிரதித் தலைவராக இணைந்து கொண்டார். 1992 ஆம் ஆண்டில் வே. பாலசுப்பிரமணியம் காலமாகியதால், வி. கயிலாசபிள்ளை இந்து மாமன்றத் தலைவராக தெரிவானார். தொடர்ந்து இருதசாப்த காலம் அதாவது 2012 டிசெம்பர் மாதம் வரை மாமன்றத்தை சிறப்பாக வழிநடத்திச் சென்ற பெருமைக்குரியவர். இதன் பின் இந்து மாமன்ற நம்பிக்கை பொறுப்பாளர் சபை தலைவராக தெரிவாகி, மறையும் வரை பணியாற்றியிருக்கிறார்.

2009 ஆம் ஆண்டு வி. கயிலாசபிள்ளையின் பவளவிழாவையொட்டி இந்து மாமன்றம் ஏற்பாடு செய்து நடத்திய பாராட்டு நிகழ்வின் போது நல்லை ஆதீனம் ‘மனித நேயர்’ என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்திருப்பதை சிறப்பாகக் குறிப்பிடலாம்.

அமரர் வி. கயிலாசபிள்ளை மனித நேயம், மனிதாபிமானம் என்பதற்கும் மேலாக பரோபகாரப் பண்பையும் கொண்டிருந்தவர்.அவர் பரோபகாரப் பண்பை வெளிப்படுத்தி வந்தார். மென்மையாகவும் பண்பாகவும் பேசும், இயல்பு, அனைவரையும் அன்பாக அரவணைக்கும் தன்மை என்பன இவரது மேலான குணாதியங்களாக திகழ்ந்திருக்கின்றன.

வி. கயிலாசபிள்ளை கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதியன்று தனது 83 ஆவது வயதில் காலமானார். இவர் அமைதியாகவிருந்து ஆற்றிய அரும்பணிகள் காலத்தால் மறக்கப்பட முடியாதவை. நெஞ்சிருக்கும் வரை இவர் நினைவிருக்கும் என்பது உண்மையாகும்.

அ.கனகசூரியர்

 


Add new comment

Or log in with...