Thursday, March 28, 2024
Home » 3 மெய்வல்லுனர் இறுதிப் போட்டிகளில் இலங்கைக்கு இன்று பதக்க எதிர்பார்ப்பு
ஆசிய விளையாட்டுப் போட்டி:

3 மெய்வல்லுனர் இறுதிப் போட்டிகளில் இலங்கைக்கு இன்று பதக்க எதிர்பார்ப்பு

by mahesh
October 4, 2023 6:53 am 0 comment

சீனாவின் ஹான்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் பதக்க எதிர்பார்ப்பு கொண்ட பெண்களுக்கான 800 மீற்றர் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டிகள் இன்று (04) நடைபெறவுள்ளன.

இதில் பெண்களுக்கான 800 மீற்றர் இறுதிப் போட்டி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 4.55 மணிக்கு இடம்பெறவிருப்பதோடு ஆண்களுக்கான 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டி மாலை 6.05 மணிக்கும் அதற்கு முன்னர் பெண்களுக்கான 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டி பிற்பகல் 5.45 மணிக்கும் இடம்பெறவுள்ளது.

நேற்று காலை நடைபெற்ற 800 மீற்றர் ஆரம்ப சுற்று போட்டிகளில் பங்கேற்ற தருஷி கருணாரத்ன மற்றும் கயந்திகா அபேரத்ன முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பெற்ற நிலையில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

அதேபோன்று நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் ஆரம்ப சுற்றில் பங்கேற்ற இலங்கை அணி 3:06.60 நிமிடங்களில் போட்டியை நிறைவு செய்து இரண்டாவது இடத்தை பெற்றது. இதன் முதல் இடத்தைப் பிடித்த பிலிப்பைன்ஸ் அணி 3:06:15 நிமிடங்களில் போட்டியை நிறைவு செய்தது.

இதில் இலங்கை அணியில் தினுக்க தேஷான், பபசர நிகு, ராஜித்த ராஜகருணா மற்றும் பசிந்து கொடிகார ஆகியோர் இடம்பெற்றனர். எனினும் இன்றைய இறுதிப் போட்டியில் காலிங்க குமார மற்றும் அருண தர்ஷன இலங்கை அணியுடன் இணையவுள்ளனர். இதன் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய 9 அணிகளில் இலங்கை ஆரம்ப சுற்றில் 4 ஆவது இடத்தை பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்று முன்தினம் (02) நடைபெற்ற 400 மீற்றர் கலப்பு அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணி இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றபோதும் போட்டி விதியை மீறியதால் இலங்கை அணி தகுதி இழப்புச் செய்யப்பட்டது.

இலங்கை அணியினர் ஓடு தள விதியை மீறியதாலேயே தகுதி இழப்புச் செய்யப்பட்டனர். இதனால் 17 ஆண்டுகளின் பின்னர் மெய்வல்லுனர் போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கத்தை இலங்கை இழக்க வேண்டி ஏற்பட்டது. இதில் போட்டியை ஆரம்பித்த அருண தர்ஷன ஓடு தளத்திற்கு வந்த நதீஷா ராமநாயக்கவுக்கு தடியை வழங்கும் சந்தர்ப்பத்தில் அருணவின் ஒரு கால் ஓடு தளத்தில் இருந்து விலகி இருந்தது விதி மீறலாக கூறப்பட்டது.

தவிர பெண்களுக்கான தூரம் பாய்தல் போட்டியில் பங்கேற்ற சாரங்கி சில்வா 6.14 மீற்றர் தூரம் பாய்ந்து 7ஆவது இடத்தை பெற்றதோடு இதன்போது அவர் தனது தனிப்பட்ட திறமையைக் கூட (6.65) நெருங்கவில்லை.

இம்முறை மெய்வல்லுனர் போட்டியில் குறிப்பிடத்தக்க அம்சமாக ஆண்களுக்கான 110 மீற்றர் தடை தாண்டி ஓட்டப்போட்டியில் இரு தங்கப் பதக்கங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த போட்டியில் குவைட்டின் யாகூப் அல்யோஹா உடன் ஜப்பானின் ஷுன்யா டகாயாமா இருவரும் சரியாக 13.41 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்தனர். இதன் காரணமாக அவர்கள் இருவருக்கும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை அணியின் பதக்க எதிர்பார்ப்பான கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் சஹன் ஆரச்சிகே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி இன்று களமிறங்கவுள்ளது. இலங்கை அணி இன்று ஆப்கானிஸ்தானுடன் நேரடியாக காலிறுதிப் போட்டியில் ஆடவுள்ளது.

இதேவேளை நேற்று நடைபெற்ற முதல் காலிறுதிப் போட்டியில் இந்திய அணி நேபாளத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியதோடு பாகிஸ்தான் அணி ஹொங்கொங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

ஸ்குவஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சீன அணிக்கு எதிராக நேற்று பி குழு போட்டியில் பங்கேற்ற இலங்கை 2–0 என வெற்றியீட்டியது. ஷமீல் வகீல் மற்றும் சனித்மா சினாலே இருவரும் இரண்டு சுற்றுகளையும் 11–6 என வெற்றி பெற்றனர்.

எனினும் ஆரம்ப சுற்றில் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்ததால் இலங்கை ஜோடி மூன்றாவது இடத்தை பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

இம்முறை விளையாட்டுப் போட்டியில் பட்மின்டன் போட்டியில் பங்கேற்றிருக்கும் ஒரே வீரரான விரேன் நெத்தசிங்க நேற்று ஆண்களுக்கான ஒற்றையர் போட்டியில் 16 பேர் சுற்றுக்கு தகுதி பெற்றார். 32 பேர் சுற்றில் மங்கோலிய வீரர் சுமியாசுரேன் எனக்பட்டுக்கு எதிராக போட்டியிட்ட அவர் முதல் சுற்றை 21-8 எனவும் இரண்டாவது சுற்றை 21-16 எனவும் கைப்பற்றினார். 16 பேர் சுற்று போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன.

பாரம் தூக்குதல் போட்டியில் இலங்கையின் கடைசி பிரதிநிதித்துவமாக இந்திக திசாநாயக்க நேற்று 73 கிலோகிராம் எடைப் பிரிவில் பி குழு போட்டியில் பங்கேற்றதோடு அதில் அவர் ஒட்டுமொத்தமாக 285 கிலோ கிராம் எடையை தூக்கி இருந்தார். இதன்மூலம் அவர் நான்கு வீரர்களில் இரண்டாவது இடத்தை பெற்றபோதும் பதக்கம் வாய்ப்பை பெறத் தவறினார்.

போட்டிக்கு பின்னர் தினகரன் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த இந்திக்க, குறைந்தது 300 கிலோகிராம் வரை எட்ட முயன்றதாகவும் அது வெற்றி அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

சீனாவிலிருந்து நிரோஷான் பிரியங்கர

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT