இலங்கையில் மேலும் காலூன்றும் இலக்கில் அமெரிக்கா | தினகரன்

இலங்கையில் மேலும் காலூன்றும் இலக்கில் அமெரிக்கா

இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா காலூன்றும் நோக்கத்திலேயே ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மேலும் இரண்டு வருடங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது.

2020ஆம் ஆண்டு தேர்தலை இலக்குவைத்து மேலும் இலங்கையை இறுக்குவதற்கு அமெரிக்கா திட்டமிட்டிருப்பதாகவும் ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

இதுவரை தீர்வொன்றை வழங்காத அரசாங்கம், நீடிக்கப்பட்டுள்ள இரண்டு வருடங்களிலா பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கப்போகிறது எனக் கேள்வியெழுப்பிய அவர், உண்மையில் பிரச்சினையை தீர்ப்பதற்கான திட்டமொன்று இருந்தால் சர்வதேசத்திடம் காலத்தை நீடிக்கவேண்டிய தேவை இருக்காது என்றும் கூறினார்.

யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த அவர் அங்குள்ள ஜே.வி.பி அலுவலகத்தில் நடத்தியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

அமெரிக்காவிடமோ அல்லது இலங்கை அரசாங்கத்திடமோ உண்மையான நோக்கம் எதுவும் இல்லை. புதிய அரசாங்கம் மனித உரிமைகள் பற்றிப் பேசியது, பாராளுமன்றத்தில் குழு அமைத்தது. எல்லாவற்றையும் அவசர அவசரமாக மேற்கொண்டது. 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற அமர்வில் காலத்தைப் பெறுவதற்காகவே இவற்றை அவசர அவசரமாகச் செய்தது.

அதன் பின்னர் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. உண்மையில் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவை செய்யப்படவில்லையென்பது தெற்கில் இடம்பெறும் சம்பவங்களைக் கொண்டே கணிப்பிட முடியும். இவ்வாறான நிலையில் வடக்குப் பிரச்சினையை அரசாங்கம் எவ்வாறு தீர்க்கும்?

தெற்கில் சிறைச்சாலையிலிருந்து கைதிகளை பாதுகாப்பாக நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல முடியாத அரசாங்கம், வடக்கிலுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கப்போவதாகக் கூறுவது வேடிக்கையானது. இதன்மூலம் அரசாங்கத்தின் முடியாமையே நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாம் தான் சர்வதேசத்தில் கூடுதலான காலத்தைப் பெற்றுள்ளோம் எனக் காண்பிப்பதற்கே அரசாங்கம் தற்பொழுது முயற்சிக்கிறது. கால அவகாசம் பெற்ற பின்னர் அதனை நடைமுறைப்படுத்த பணம் இல்லை எனக் கூறி மீண்டும் அரசாங்கம் கால அவகாசம் கோரியுள்ளது.

இதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்த யோசிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கைத்தேய நாடுகள், தேர்தல் இல்லாத காலத்தில் இலங்கையை இறுக்குவதைவிட, 2020ஆம் ஆண்டு நடைபெறக் கூடிய தேர்தலை இலக்குவத்து இலங்கையை இறுக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் அவர் மேலும் குற்றஞ்சாட்டினார்.

நமது நிருபர்


Add new comment

Or log in with...