முழுமையான அறிக்கை தயாரிப்பதில் இந்திய அரசின் ஒத்துழைப்பு தாமதம் | தினகரன்

முழுமையான அறிக்கை தயாரிப்பதில் இந்திய அரசின் ஒத்துழைப்பு தாமதம்

இந்திய மீனவர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டவிடயம் தொடர்பில் இலங்கை கடற்படை முழுமையான அறிக்கை தயாரிப்பதற்கு இந்திய அரசாங்கம் சார்பிலான ஒத்துழைப்புகள் தாமதிக்கப்படுவதாக கடற்படைப்பேச்சாளர் கமாண்டர் சமிந்த வலாக்குழுகே நேற்று தெரித்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவதினத்தன்று இந்திய மீனவர்கள்பயன்படுத்திய ஜீ.பி.எஸ்.உள்ளிட்ட தொழில்நுட்ப தகவல்களை இலங்கையின் கடற்படைக்கு பெற்றுத்தருமாறு இலங்கை இந்தியாவிடம் கோரிக்கை முன்வைத்திருந்தது. எனினும் இந்தியா இதுவரை அத்தகவல்களை இலங்கைக்கு வழங்காமையினால் விரிவான விசாரணையை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் இந்தியாவின் தொழில்நுட்ப தகவல்கள் கிடைக்கும்வரை காத்திராமல் இலங்கை கடற்படையினால் நிறைவேற்றப்பட்ட விசாரணை அறிக்கையை இவ்வாரத்திற்குள் கடற்படைத் தளபதியிடம் கையளிக்கவிருப்பதாகவும் பேச்சாளர் கூறினார்.

கடந்த 07 ஆம் திகதி இந்திய மினவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருந்தது. இதல் 22 வயதான மீனவ இளைஞன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருந்தார்.

மேலும் ஒரு இந்திய மீனவர் காயங்களுக்கு உள்ளாகியிருந்தார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அத்துடன் இச்சம்பவத்தை இலங்கை கடற்படையே முன்னெடுத்திருந்ததாகவும் இதற்காக இலங்கை அரசாங்கம் கவலை தெரிவிக்க வேண்டும் என்றும் இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு அறிவித்திருந்தது.

இந்தியாவின் குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்திருந்த அதேவேளை, இலங்கை மீன்பிடியமைச்சர் மஹிந்த அமரவீர இச்சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

அதற்கமைய விசேட குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்ததுடன் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை கடற்படைத் தளபதயிடம் கையளிக்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அறிக்கை சமர்ப்பிக்கப்படும் திகதி தொடர்பில் கடற்படைப் பேச்சாளர் தொடர்புகொண்டு கேட்டபோதே, விசாரணையை முன்னெடுப்பதில் இந்தியத் தரப்பு கடும் தாமதத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அதற்காக பொறுத்திராமல் இலங்கை கடற்படையை அடிப்படையாக வைத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கை கடற்படைத் தளபதியிடம் கையளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

லக்ஷ்மி பரசுராமன் 


Add new comment

Or log in with...