கைகளை விரும்பும் உணவு | தினகரன்

கைகளை விரும்பும் உணவு

 
கையால் சாப்பிடுவதில் நிறைய நன்மைகள் இருக்கின்றன. அப்படியிருக்க, ஸ்பூனைப் பயன்படுத்தி உணவு சாப்பிடுவது இன்றைக்கு ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. பிடிக்கிறதோ, இல்லையோ ஸ்பூனில் சாப்பிடுவதுதான் நாகரிகம் என்றாகிவிட்டது. சில பன்னாட்டு நிறுவனங்களில்... உயர்தர உணவகங்களில்... தோசையை ஸ்பூனால் சாப்பிட முயன்று, தோசையோடு சண்டை போட்டுக்கொண்டிருப்பவர்களைப் பார்த்திருக்கலாம். கையால் சாப்பிட இயல்பாக, எளிதாக முடிகிறபோது ஏன் ஸ்பூனோடு மல்லுக்கட்ட வேண்டும்? கையால் சாப்பிட்டால் என்ன நன்மை, பார்ப்போமா?
 
நன்மை செய்யும் பாக்டீரியாக்கள்
உணவைத் தொட்டவுடன் அது சூடாக இருக்கிறதா? காரமாக இருக்கிறதா? என்று எளிதாக உணர்ந்து கொள்ள முடியும். அந்தத் தகவல் உடனடியாக மூளைக்குப் போகிறது. நாம் சாப்பிடப் போகிறோம் என்பதை மூளை உணர்ந்துகொண்டு வயிற்றுக்கு தகவல் அனுப்புகிறது. வயிறு, செரிமானத்துக்குத் தேவையான அமிலங்களைச் சுரக்கும் நிகழ்வை (உணவு வாய்க்கு வந்ததும்) தொடங்கிவிடுகிறது. மேலும், நமது கையில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. வாய், தொண்டை மற்றும் குடலுக்கு நன்மை செய்யும் இந்த பாக்டீரியாக்கள் செரிமானத்தை எளிதாக்குகிறது. ஆனால் கையைக் கழுவிவிட்டு சாப்பிடும்போதுதான் இந்த பலன் கிடைக்கும். கையைக் கழுவாமல் சாப்பிட்டால் கையில் உள்ள கிருமிகள் உடலுக்குள் சென்றுவிடும். 
 
 
ரசித்து... ருசிக்க!
கைக்குப் பதிலாக ஸ்பூனில் சாப்பிடும்போது மூளைக்கு தகவல் அனுப்புவது உள்ளிட்ட நிகழ்வுகள் தொடங்க தாமதமாகும். அதுவுமல்லாமல் உணவின் தன்மை நமக்குத் தெரியாது என்பதால் சூடான பொருளை ஸ்பூனில் எடுத்து வாயில் வைத்தால் நாக்கை சுட்டுக்கொள்ள நேரிடலாம். ஸ்பூனில் சாப்பிடும்போது நமது கவனம் முழுக்க நாம் எப்படி சாப்பிடுகிறோம் என்பதில்தான் இருக்கிறது. ஒரு விதமான எந்திரத்தன்மை வந்துவிடுகிறது. இதனால் உணவை ரசித்து, ருசித்துச் சாப்பிட முடிவதில்லை. கையால் சாப்பிடும்போது ஸ்பூனில் சாப்பிடுவதைவிட அதிக திருப்தி கிடைக்கிறது. 
 
 
சர்க்கரை நோயாளிகள்
நாம் சாப்பிடும்போது கையை வைத்திருக்கும் அமைப்பானது யோக முத்திரைகள் மட்டுமல்லாமல் பழைமையான நடன முறைகளின் முத்திரைகள் மற்றும் தியானத்தின்மூலம் நோயை குணப்படுத்தும்முறை போன்றவற்றைக் குறிக்கிறது. ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு விரலும் நீர், நிலம், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களைக் குறிக்கிறது. உணவில் உள்ள கெட்ட சக்திகளை இவை விரட்டுவதாக நம்பப்படுகிறது. இந்த பலன்கள் ஸ்பூனில் சாப்பிடும்போது கிடைப்பதில்லை. கடுமையான பசி ஏற்படுவது இரண்டாம் வகை சர்க்கரை நோயின் அறிகுறி. இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகள் ஸ்பூனில் சாப்பிடும்போது நிதானமின்றி, அவசர அவசரமாக சாப்பிடுவார்கள். இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். கையால் சாப்பிடும்போது ஸ்பூன் அளவுக்கு வேகமாக இல்லாமல் நிறுத்தி நிதானமாக சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். 
 
மன அழுத்தம்
ஸ்பூனில் சாப்பிடுபவர்கள் மிக வேகமாகச் சாப்பிடுவதோடு, அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு Binge Eating Disorder என்ற நோய் வரலாம். சீரற்ற மனநிலை, மன அழுத்தம் போன்றவையும் இந்த நோய் ஏற்படுவதற்கான பிற காரணங்களாக இருக்கின்றன. இந்தக் காரணங்களோடு ஸ்பூனில் வேகமாகச் சாப்பிடுவது சேர்ந்து கொள்ளும்போது பாதிப்பு அதிகமாகும். கையால் சாப்பிடும்போது அவ்வளவு வேகமாக சாப்பிட முடியாது என்பதால் பாதிப்புகள் குறையும். 
 
 
ஓர் உணவகத்தில்  தரப்படும் ஸ்பூனின் தரம் என்ன என்பது பற்றி நமக்குத் தெரியாது. தரம் பற்றிய பயத்துடன்தான் சாப்பிடவேண்டி இருக்கும். ஸ்பூனில் சாப்பிடும்போது உணவின் சுவையைவிட சாப்பிடும் முறையில்தான் நம் கவனம் அதிகம் செல்லும். கையைப் பயன்படுத்தும்போது இந்தக் கவலைகள் எல்லாம் இல்லை. ஸ்பூன் வைத்துச் சாப்பிடுவது மூன்றாவதாக ஒரு ஆளை வைத்து காதலிப்பதுபோல் உள்ளதாக ஒரு பழமொழி உண்டு. கைக்கும், உணவுக்குமான காதல் எப்போதும் நிலைத்திருந்து பல பயன்களைத் தரவேண்டுமென்றால் அதற்கு ஸ்பூன் போன்ற பொருட்கள் இடையில் வராமல் இருப்பதே சிறந்தது.
 
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...