எட்டு இலங்கையரின் பாதுகாப்பான மீட்பு இராஜதந்திர வெற்றி | தினகரன்

எட்டு இலங்கையரின் பாதுகாப்பான மீட்பு இராஜதந்திர வெற்றி

சோமாலியாவுக்கு அமெரிக்கா அழுத்தம்

இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று அமெரிக்கா சோமாலியாவுக்கு வழங்கிய அழுத்தம் காரணமாகவே கடற்கொள்ளையர்களிடமிருந்து எட்டு இலங்கையர்களையும் பாதுகாப்பாக மீட்க முடிந்ததாக வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா நேற்று (17) தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவர் அப்துல் கசாப், இலங்கை அரசாங்கத்தை அமெரிக்காவுடன் உடனுக்குடன் தொடர்புபடுத்துவதில் அளப்பரிய சேவையாற்றியதாகவும் அதற்காக அவருக்கும், அமெரிக்க அரசுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதியமைச்சர் கூறினார்.

சோமாலிய கடற்கொள்ளையர்களால் வழங்கப்பட்ட ஒரு மணிநேர கால அவகாசத்துக்குள் இலங்கையர்களை பாதுகாப்பாக மீட்டதன் மூலமாக இலங்கை அரசு இராஜதந்திர ரீதியில் வெற்றி கண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கடத்தப்பட்ட இலங்கையர்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

‘ஏரிஸ் 13’ எனும் கப்பலிலிருந்த எட்டு இலங்கையரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளோம். இது இலங்கைக்கு மட்டுமன்றி இந்து சமுத்திரத்துக்கு கிடைத்த வெற்றியாகும். இலங்கை கடற்படையினருடன் பிராந்திய கடற்படையினர், அமெரிக்க அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய கடற்படை ஆகியன ஒரு சில நிமிடங்களில் ஒன்றிணைந்து மிகப்பெரிய சாதனையை நிலைநாட்டியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கும் கப்பல் உரிமையாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் நாம் தலையிடவில்லை. எமக்கு வேண்டப்பட்டதெல்லாம் சோமாலிய கடற்படையினரால் 'ஏரிஸ் 13' கப்பல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சமரை நிறுத்தி இலங்கையரை உயிருடன் மீட்பது மட்டும்தான்.

அதனை நிறைவேற்றுவதற்கு சோமாலியாவின் புட்லன்ட் பிரதேசத்துக்குப் பொறுப்பான ஜனாதிபதி காஸ் எமக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினார். நேற்று அதிகாலை 1.14 மணியளவில் ஜனாதிபதி காஸ், “உங்கள் நாட்டவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்’ என எனக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பியிருந்தார் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும் ஜனாதிபதி காஸ் இணக்கம் தெரிவித்திருந்தார். கடத்தப்பட்ட எட்டு பேரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கின்றனர். இவர்கள் தற்போது பொசசோ துறைமுகத்தை நோக்கி கப்பலில் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

அங்கிருந்து ஜிபுட்டி துறைமுகம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். இவர்களது பயணத்துக்கு அவசியமான விடயங்களை நிறைவேற்ற அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். துப்பாக்கிச் சமரை நிறுத்தி இலங்கையரை மீட்பதில் அமெரிக்கா தலைமையிலான ஒன்றிணைந்த கடற்படையணி சில நிமிடங்கள் கூட தாமதிக்காமல் பாரிய ஒத்துழைப்பு வழங்கியிருந்ததாக கடற்படையைச் சேர்ந்த ரியல் அட்மிரல் தர்மேந்திர வெத்தேவ செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவுக்கான பணிப்பாளர் நாயகம் சுதந்த கனேகம ஆராச்சி, கடத்தப்பட்டவர்களது உறவினர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்தார். கடத்தப்பட்டவர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக தமது உறவினர்களுடன் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளமையையிட்டு மகிழ்ச்சியையும் அரசாங்கத்தின் துரித செயற்பாடுகளுக்காக நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

லக்ஷ்மி பரசுராமன் 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...