பொறுப்பற்ற அதிகாரிகள் | தினகரன்

பொறுப்பற்ற அதிகாரிகள்

 

வைத்தியசாலை நிருவாகத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டினால் குருநாகல் மாவட்ட அளவ்வ வைத்தியசாலையில் நோயாளி ஒருவர் பரிதாபகரமாக நேற்றுமுன்தினம் உயிரிழக்க நேரிட்டது. இதனை உயிரோடு விளையாடிய ஒரு மோசமான சம்பவமாகவே பார்க்க வேண்டியுள்ளது.

அரசாங்க அதிகாரிகள் இவ்வாறு பொடுபோக்காக செயற்படுவது மன்னிக்க முடியாத குற்றமாகும். மக்கள் சேவையை இவ்வளவு உதாசீனப்படுத்துவதன் மூலம் ஏற்படுகின்ற பரிதாப நிலை எத்தனை பேரை வேதனைப்படுத்த வைக்கின்றது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அலவ்வை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேற்படி நோயாளியின் நிலை மோசமாக பாதிக்கப்பட்டதனால் அவரை உடனடியாக குருநாகல் வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்ல மருத்துவ அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். டாக்டரின் பணிப்புரைக்கமைய வைத்தியசாலை அம்பியுலன்ஸ் வண்டியை தயார்படுத்துமாறு அறிவிக்கப்பட்ட போது அன்றைய தினம் வண்டியின் சாரதி விடுமுறையில் சென்றிருப்பதாக தெரிவிக்கப்படடுள்ளது. உடனடியாக தம்பதெனிய வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்டபோது அங்கு சாரதி வயிற்று வலி காரணமாக விடுமுறையிலிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அடுத்து அண்மித்த தவதலவத்தை வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்ட போது அங்கு வண்டியில் எரிபொருள் தீர்த்துவிட்டதாகவும் காலையில் தான் எரிபொருள் நிரப்பமுடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. முடிவாக பொல்கஹவல வைத்தியசாலையுடன் தொடர்பு கொள்ள பலமுறை முயற்சித்த போதும் அங்கு தொலைபேசி இயங்காதிருந்துள்ளது.

 அனைத்துமே கையறுந்து போன நிலையில் 72 வயதான அந்த நோளாயின் மகன் தன் தந்தையின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு டாக்டரிடம் சென்று தந்தையை தனியார் வாகனமொன்றில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறும் அதற்கான செலவை தான் பொறுப்பேற்பதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் வைத்தியசாலை நிருவாகம் அதற்கு இணங்க மறுத்ததோடு அப்படி கொண்டு செல்ல அனுமதிக்க முடியாதெனவும் தெரிவித்துள்ளார். அதனால் மனமுடைந்து போய் நோயாளியின் மகன் பெரும் வேதனையடைந்த நிலையில் செய்வதறியாது நிலை குழம்பிப் போயுள்ளார்.

இப்படியே நேரம் கடந்து போனது. ஐந்து மணி நேரத்தின் பின்னர் நோயாளி குருநாகல் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார் எனினும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே நோயாளியின் உயிர் பிரித்துள்ளது,

வைத்தியசாலையின் பொறுப்பற்ற அதிகாரிகளின் செயற்பாட்டினால் நோயாளியின் உயிர் பறிபோயுள்ளது. இந்த இழப்புக்கு எம்மால் என்ன விலை கொடுக்க முடியும்? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படிக் கொடுப்பதால் அந்த இழப்பை ஈடுகட்ட முடியுமா? அரசு அதிகாரிகளின் அசமந்தப்போக்கு பொறுப்பற்ற செயற்பாடுகளால் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், பரிதாப நிலைமைகளால் உருவாகக் கூடிய பின்விளைவுகள் பாரதூரமானவையாகும்.

கடந்த காலங்களில் கூட அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகள் குறித்து ஏராளமான முறைப்பாடுகளும், குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்ட போதிலும் அவை உரிய தரப்பினால் கண்டுகொள்ளப்படாத நிலையே காணப்படுகிறது. ஒரு உயிரிழப்பு எத்தனை பேரை பாதிப்புக்குள்ளாக்குகின்றது என்பதை சிந்திக்க வேண்டும். ஏழை மக்களால் தனியார் வைத்தியசாலைகளுக்குச் செல்ல முடியாது. அவர்கள் அரச வைத்தியசாலைகளையே நம்பி இருக்கின்றனர். அந்த நம்பிக்கை சிதறடி்க்கப்படக் கூடாது இன்று மக்கள் அரசு அதிகாரிகள் மீது பெரும் அதிருப்தியடைந்த நிலையிலேயே காணப்படுகின்றனர்.

இவ்வாறான பொறுப்பற்ற அதிகாரிகள் தொடர்பில் அரசு பாராமுகமாக இருந்துவிட முடியாது. மற்றொரு உயிர் அநியாயமாக பறிக்கப்படுவதற்கு முன்னர் இவ்வாறானவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டவர்கள் எத்தகைய தரத்தினராகக் காணப்பட்டாலும் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம். அசமந்தப் நோக்குடன் அல்லது அதிகார தோரணையில் செயற்படக்கூடிய அதிகாரிகளால் அரசுக்கே அபகீர்த்தி ஏற்படுகின்றது.

வைத்தியத்துறையில் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாகப் பாரக்கும் போது நாட்டிலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் அதிகாரிகளின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் மக்கள் தமது தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியாமல் அலைக்கழிக்கப்படுவதை காணமுடிகிறது.

அப்பாவி மக்கள் தமது காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள அதிகாரிகளை நாடுகின்ற போது அவர்கள் மீது எரிந்து விழுவதை சாதாரணமாகவே பாரக்க முடிகிறது. காலத்தை வீணாகக் கடத்தி மக்கள் எதுவுமே நடைபெறாத நிலையில் நாட்கணக்கில், வாரக்கணக்கில் அலைக்கழிக்கப்படுகின்றனர். மக்கள் நியாயம் கேட்டால் கிடைக்கக் கூடிய பதில் காதுகளால் கேட்கக் கூடியதாக இல்லை. சிலவேளைகளில் மக்கள் நையப்புடைக்கப்பட்டதையும் கேட்க முடிகிறது.

அரசு அதிகாரிகள் மக்களது சம்பளத்தில் வாழ்பவர்கள் மக்கள் அரசுக்கு வழங்கும் வரிப்பணத்திலேயே அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.

இதனை அரசு அதிகாரிகள் மறந்துவிடக்கூடாது. கடமையை சரிவரச் செய்ய வேண்டிய கடப்பாடு அதிகாரிகளுக்கு இருப்பதை மீண்டும் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது. கடமையை சரிவரச் செய்யத் தவறுவோர் அந்தப் பதவிக்கு இலாயக்கற்றவராகவே கருதப்படுவர். அவர் தண்டிக்கப்படுவதுதான் நியாயமானது என்பதை இங்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

அரசு அதிகாரிகளுக்கு மேலிடங்கள் உரிய உத்தரவுகள் வழங்க வேண்டும். பொறுப்பற்ற அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் மக்கள் சட்டத்தை கைகளில் எடுக்கும் நிலை ஏற்படலாம். அப்படியானதொரு நிலை ஏற்படுமானால் அது ஆரோக்கியமானதாக அமையாது.

எனவே அரசு பொறுப்பற்ற அதிகாரிகள் விடயத்தில் உரியகவனம் செலுத்தி மற்றொரு விரும்பத்தகாத நிகழ்வு இடம்பெறாத விதத்தில் அவசியமான நடவடிக்கையை நடவடிக்கையை எடுக்க வேண்டும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு குறித்து அதிகாரிகள் அறிவுறுத்தப்பட வேண்டும். மக்களுக்கு அதிகாரிகள் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்பப வேண்டிய அவசியம் முக்கியமானதாகும்.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...