Friday, March 29, 2024
Home » தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம்

தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக தரமுயர்த்த அமைச்சரவை அங்கீகாரம்

- குறைந்த வருமானமுடைய நபர்களுக்கு சீனக் குடியரசின் உதவித்திட்டம்

by Prashahini
October 3, 2023 3:36 pm 0 comment

– புதிய வணிக மேல் நீதிமன்றம்

– இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 14 முடிவுகள்

தேசிய கல்வியியல் கல்லூரி வளாகமாக மேம்படுத்தி கல்வி தொடர்பான பல்கலைக்கழகத்தைத் தாபிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (02) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக்கும் நோக்கில் தற்போது நடைமுறையிலுள்ள கல்வியல் கல்லூரிகளை பல்கலைக்கழகப் பீடங்களாக உயர்த்துவதற்காக கடைப்பிடிக்க வேண்டிய நிர்வாக மற்றும் சட்டப் பொறிமுறைகள் தொடர்பாகப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக 2019.12.04 திகதி அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய மூத்த பேராசிரியர் குணபால நாணயக்கார தலைமையில் நிபுணத்துவக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் பரிந்துரைகள் தற்போதுள்ள 20 கல்வியல் கல்லூரிகளில் 19 கல்லூரிகளை பல்கலைக்கழக வளாகமாக உயர்த்துவதற்கும், அத்துடன் இலங்கை கல்வியியல் பல்கலைக்கழகம் எனும் பெயரில் புதிய பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்கும் ஏதுவான சட்ட ஏற்பாடுகளை விதிப்பதற்கு புதிய சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. தேசிய பாதுகாப்புக்கு தாக்கம் செலுத்துகின்ற இரசாயனப் பொருட்களை ஒழுங்குபடுத்தல்.

கைத்தொழில், விவசாயம், மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிகள் போன்ற அமைதியான பணிகளுக்காக பல்வேறு இரசாயனப் பொருட்கள் பாரியளவில் எமது நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் நைத்ரிக் அமிலம், குளோரின், ஐதரசன் பரவொட்சைட்டு, பொட்டாசியம் சயனயிட், சோடியம் சயனயிட், நைத்ரோமெதேன் மற்றும் சோடியம் ஏசைட் போன்ற இரசாயனப் பொருட்கள் அமைதியான பயன்பாட்டுக்குப் போலவே சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தக் கூடிய இரட்டைப் பயன்பாட்டுத்தன்மை கொண்டவையெனக் கண்டறியப்பட்டுள்ளது.

பால், பானவகைகள், எண்ணெய் சார்ந்த கைத்தொழிற்துறை, நீர் சுத்திகரிப்புப் போன்ற பல்வேறு கைத்தொழில்களுக்காக பயன்படுத்தப்படும் குறித்த இரசாயனப் பொருட்கள் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமைகின்ற தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் ஆபத்துக் காணப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அதனால், அவ்வாறான இரசாயனப் பொருட்களை முறைகேடாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு சட்ட ரீதியான ஏற்பாடுகளை விதிப்பதற்கும், குறித்த ஒழுங்குபடுத்தல் பணிகள் இரசாயன ஆயுதங்கள் சமவாயத்தை நடைமுறைப்படுத்தும் தேசிய அதிகாரசபைக்கு ஒப்படைப்பதற்கும் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. 100 மெகாவாற்று சூரிய மின்சக்திக் கருத்திட்டத்திற்காக அரச காணியை குத்தகை அடிப்படையில் வழங்கல்.

100 மெகாவாற்று சூரிய மின்சக்திக் கருத்திட்டத்திற்காக மொனறாகலை மாவட்டத்தில் சியம்பலாண்டுவ பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள 219.72 ஹெக்ரெயார்கள் அளவுகொண்ட காணியை றிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபைக்கு பெற்றுக்கொள்வதற்கான யோசனை 2023.08.07 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சுடன் கலந்துரையாடி இது தொடர்பான தகவல்களை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய, சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் பரிந்துரையின் பிரகாரம் குறித்த காணியின் அளவைத் தெரிவுசெய்கின்ற மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தியாளருக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் பொருத்தமான ஏற்பாடுகளுடன் கூடியதாக இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபைக்கு 25 வருடங்கள் நீணடகால குத்தகையின் அடிப்படையில் வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்குக் கிடைக்கின்ற பாவனையாளர் முறைப்பாடுகளுக்குரிய மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளை முறைமைப்படுத்தல்.

2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்ட ஏற்பாடுகளின் கீழ் பாவனையாளர் முறைப்பாடுகள் தொடர்பாக தலையிடுவதற்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், 1995 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்டுள்ள அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தால் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையுடன் இணைந்து சந்தை சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்படும்.

அதற்கமைய, நுகர்வோர் முறைப்பாடுகளை விசாரணை செய்து அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவதற்கு எடுக்கின்ற காலம் மற்றும் உழைப்பைக் குறைப்பதற்கான ஒரு முக்கியமான படிமுறையாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் நியாயமான சந்தை ஒழுங்குகள் தொடர்பாக பாவனையாளர் மற்றும் உற்பத்தியாளர்களை தெளிவூட்டுவதற்கும், குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகளை நடாத்துகின்ற முறைமையை வினைத்திறனாக்குவதற்கு குறித்த பணிகளைப் பன்முகப்படுத்தி மாவட்ட மட்டத்தில் நடாத்திச் செல்வதற்கான ஏற்பாடுகளை வகுப்பதற்கும், விசேட சுற்றிவளைப்புக்கள் தொடர்பான பணிகளை ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளும் நோக்கில் தேசிய செயற்பாட்டு மையமொன்றை தாபிப்பதற்கும் அமைச்சு நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ள வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரால் அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக, அமைச்சரவை உடன்பாடு தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

5. வரையறுக்கப்பட்ட டெஸ் (தனியார்) கம்பனிக்கு மீன் பதப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்வதற்காக ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் வசதிகளை வழங்கல்.

ஒலுவில் மீன்பிடி துறைமுக வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் இருக்கின்ற மீன் பதப்படுத்தல் இயந்திரத்தொகுதியை மீண்டும் இயக்கி மீன் பதப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்வதற்காக வரையறுக்கப்பட்ட டெஸ் (தனியார்) கம்பனிக்கு ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் வசதிகளை வழங்குவதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவின் பரிந்துரைக்கப்பட்டுள்ள குறித்த குத்தகையை மாதாந்தம் அறிவீட்டு அடிப்படையில், ஒலுவில் துறைமுகக் கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள மீன் பதனிடல் அலகை வரையறுக்கப்பட்ட டெஸ் (தனியார்) கம்பனிக்கு 10 வருடங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்காக கடற்றொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. நீர்த்தேக்கங்களில் மீன்குஞ்சுகளை விடுவிப்பதன் மூலம் நன்னீர் மீன் உற்பத்திகளை அதிகரித்தல்.

நன்னீர் மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு இலங்கையின் கிராமிய பொருளாதாரத்தில் முக்கியமான பங்கு வகிப்பதுடன், உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கை அதிகரித்தல் தொழில்/வாழ்வாதார வாய்ப்புக்களை வழங்குவதற்காக அதிகமாகப் பங்களிப்புச் செய்கின்றது. எமது நாட்டின் நீர்த்தேக்கங்களில் அதிக வளர்ச்சி கொண்டவையும், பொருளாதார ரீதியாக பயனுறு நன்னீர் மீன் உற்பத்திகளை மேற்கொள்வதற்காக வருடாந்தம் 500 மில்லியன் மீன்குஞ்சுகளைத் தொடர்ச்சியாக இடல் வேண்டும். ஆனாலும், மீன்குஞ்சுகள் போதியளவு இடப்படாமையால் உயிரின வளர்ப்பை அடிப்படையாகக் கொண்ட மீன்பிடித் தொழிற்றுறைக்காக தற்போது காணப்படுகின்ற நீர்த்தேக்கங்களின் ஆற்றல்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு இதுவரை முடியாமல் போயுள்ளது.

2023 ஆம் ஆண்டில் 230 மில்லியன் மீன்குஞ்சுகள் மற்றும் 80 மில்லியன் இறால் குஞ்சுகளை நீர்த்தேக்கங்களில் இடுவதற்குத் ஆரம்பத் திட்டமிடலை மேற்கொண்டிருந்தாலும், கடந்த காலத்தில் நிலவிய வரண்ட காலநிலையால் நீர்த்தேக்கங்கள் வரண்டு போனமையால் குறித்த திட்டத்தை மாற்றியமைக்க நேரிட்டது. அதற்கமைய, குறித்த திட்டத்தை திருத்தியமைத்து இவ்வாண்டில் எஞ்சிய காலப்பகுதியில் 100 மில்லியன் மீன்குஞ்சுகள் மற்றும் நன்னீர் 50 மில்லியன் இறால் குஞ்சுகளை உற்பத்தி செய்து நீர்த்தேக்கங்களில் இடும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்காக கடற்றொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு, 2023 ஆண்டுக்கான குறித்த பணிகளுக்காக 100 மில்லியன் ரூபாய்களை மேலதிக ஒதுக்கீடாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. புதிய வணிக மேல் நீதிமன்றத்தை நிறுவுதல்.

அபிவிருத்தி இலக்குகளை அடையும் போது நாட்டில் மிகவும் ஆரோக்கியமான முதலீட்டு சூழலை பேணிச் செல்வதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலைமையைக் கருத்தில் கொண்டு வணிகம்சார் விடயங்கள் தொடர்பாக தற்போது காணப்படுகின்ற அதிகளவிலான வழக்குகளைத் துரிதமாக தீர்வுகண்டு முடிவுறுத்துவதை உறுதிப்படுத்துவதற்காக புதிய வணிக மேல் நீதிமன்றத்தைத் தாபிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த வணிக நீதிமன்றம் கொழும்பு 12, நீதிமன்ற வீதியிலுள்ள 80 ஆம் இலக்க இடத்தில் நிறுவுவதற்காக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. குறைந்த வருமானங் கொண்ட நபர்களுக்கு சீனக் குடியரசின் உதவித்திட்டத்தின் கீழ் 1,996 வீட்டு அலகுகளை நிர்மாணித்தல்.

மேல்மாகாணத்தில் குறைந்த வசதிகளைக் கொண்ட குடியிருப்புக்களில் வசிக்கின்றவர்களை புனர்வாழ்வளித்து வசதிகளுடன் கூடிய நகர்ப்புற உத்தேச வீட்டுத்திட்ட முறையில் வீடுகளில் குடியமர்த்துவதற்கு மேற்கொண்ட தீர்மானத்திற்கமைய நடைமுறைப்படுத்தப்படும் மறுமலர்ச்சிக் கருத்திட்டத்திற்கான உதவித்தொகையாக 1,996 வீட்டு அலகுகளை நிர்மாணிப்பதற்காக 552 மில்லியன் யுவான் நிதியுதவியை வழங்குவதற்கு சீனக் குடியரசு உடன்பாடு தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தக் கருத்திட்டத்தின் கீழ் காணி அபிவிருத்தி செய்தல் மற்றும் வேலைத்தளத்திற்குத் தெவையான உட்கட்டமைப்பு வசதிகள் இலங்கை அரசால் வழங்கப்படும். அதற்கமைய, சீனக் குடியரசுடன் குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. நிர்மாணித்தல், உரித்துக் கொண்டிருத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் அடிப்படையில் 1-5 மொகாவாற்று கொள்ளவு கொண்ட 70 மெகாவாற்று வரையான சூரிய ஒளி மின்னழுத்தத்துடன் கூடிய மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவுதல்.

தேசிய மின்சாரக் கட்டமைப்புக்கு இணைப்புச் செய்கின்ற மின்னலகுகள் 70 மெகாவாற்று (70MW ,AC) கொள்ளவுடன் கூடிய நிலத்தில் பொருத்தப்பட்ட சூரிய ஒளி மின்னழுத்த (Photovoltaic – PV) மின்னுற்பத்தி நிலையத்தை தேசிய மின்சாரக் கட்டமைப்புக்கு இணைப்புச் செய்யும் அலகுகள் 1-5 வரையான கொள்ளவுடன் (1-5 MW, AC) நிர்மாணித்தல், உரித்துக் கொண்டிருத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் அடிப்படையில் 20 வருடகால நடவடிக்கைக் காலப்பகுதியுடன் 11 மின் உப நிலையங்களுக்கு இணைப்புச் செய்வதற்கு இயலுமாகும் வகையில் நிறுவுவதற்காக ஆர்வங் காட்டுகின்ற முதலீட்டாளர்களிடமிருந்து முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன.

அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவால் குறித்த முன்மொழிவுகளை மதிப்பீடு செய்த பின்னர் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் அம்பாறை, அநுராதபுரம், காலி, ஹபரண, குருநாகல், மாதம்பே, மாஹோ, மற்றும் மாத்தறை போன்ற 08 மின் உப நிலையங்களுக்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அந்தந்த முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. நவீனமய கல்வி மன்றம் Stylistic Education Foundation (கூட்டிணைப்புச் செய்தல்) சட்டமூலம்.

நவீனமய கல்வி மன்றம் (கூட்டிணைப்புச் செய்தல்) சட்டமூலம் தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலம் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (கலாநிதி) ஹரணி அமரசூரிய அவர்கள் சமர்ப்பித்துள்ளார். அதற்கான அடிப்படைச் சட்டமூலம் சட்டவரைஞரால் முறையான வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. பாராளுமன்ற நிலையியல் கட்டளைகள் 52 (6) இன் ஏற்பாடுகளுக்கமைய குறித்த சட்டமூலத்தை பரிந்துரைத்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. 1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபை சட்டத்திற்கான திருத்தம்.

மத்தியஸ்த சபை ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்தல், மத்தியஸ்த சபை அதிகார இடப்பரப்பு தொடர்பான ஏற்பாடுகளைத் திருத்தம் செய்தல் மற்றும் மேலும் ஏற்புடைய திருத்தங்களை அறிமுகப்படுத்தி 1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க திருத்தம் செய்வதற்காக 2023.02.27 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. மத்தியஸ்தத்தின் மூலம் ஏற்படுகின்ற சர்வதேச பிணக்குத்தீர்வு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளல் மற்றும் வலுவாக்கம் செய்கின்ற சட்டமூலம்.

ஐக்கிய நாடுகளின் மத்தியஸ்த்தின் மூலம் ஏற்படுகின்ற சர்வதேச பிணக்குத்தீர்வு ஒப்பந்தம் தொடர்பான சமவாயம் (மத்தியஸ்தம் தொடர்பான சிங்கப்பூர் உடன்படிக்கை) உள்;ரில் வலுவாக்கம் செய்வதற்காக சட்டத்தை வகுப்பதற்காகக சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2022.10.25 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. பவித்ரா வன்னியாராச்சி நட்பு Pavithra Wanniarachchi Friendship Foundation மன்றம் (கூட்டிணைப்பு செய்தல்) சட்டமூலம்.

பவித்ரா வன்னியாராச்சி நட்பு மன்றம் (கூட்டிணைப்புச் செய்தல்) சட்டமூலம் தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலமாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ லலித் எல்லாவெல அவர்கள் சமர்ப்பித்துள்ளார். அதற்கான அடிப்படைச் சட்டமூலம் சட்டவரைஞரால் முறையான வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. பாராளுமன்ற நிலையியல் கட்டளைகள் 52 (6) இன் ஏற்பாடுகளுக்கமைய குறித்த சட்டமூலத்தை பரிந்துரைத்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. சமூக சீர்திருத்த திணைக்களத்திற்கான ஆலோசனை சபையொன்றை நியமித்தல்.

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் இயங்குகின்ற சமூக சீர்திருத்த திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளை மேலும் வினைத்திறனுடன் நிறைவேற்றுவதற்காக தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் தொடராய்வு அவசியமாயிருப்பதால், அதற்காக அலோசனைச் சபையொன்றை நியமிப்பதற்காக 2023.06.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளரின் தலைமையில் மற்றும் ஏனைய ஏற்புடைய நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் இத்துறையின் நிபுணர்களுடன் கூடிய உத்தேச ஆலோசனை சபையை நியமிப்பதற்காக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT