100 ஆவது டெஸ்டில் சாதிக்குமா பங்களாதேஷ் | தினகரன்

100 ஆவது டெஸ்டில் சாதிக்குமா பங்களாதேஷ்

 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி இன்று கொழும்பில் தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு எதிராக களமிறங்குகிறது.

இரண்டாயிரமாம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக தனது டெஸ்ட் பயணத்தினை ஆரம்பித்த பங்களாதேஷ் பல சோதனைகளுடனும் சில சாதனைகளுடனும் இன்று 100 ஆவது போட்டியில் ஆடவுள்ளது. இப்போட்டி பங்களாதேஷ் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் உலகிலே வெறும் வெற்றியை மட்டுமே ருசிக்கின்ற ரசிகர்களை கொண்டே எல்லா அணிகளும் உள்ளன. தோல்வியைக்கூட ஏற்றுக்கொண்டு ஆதரவு வழங்கும் ஒரே அணி பங்களாதேஷ்

இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பங்களாதேஷ் 8 போட்டிகளில் வெற்றியையும் 76 போட்டிகளில் தோல்வியையும் பெற்றுள்ளது. 15 போட்டிகள் சமனிலையிலும் நிறைவடைந்துள்ளன.

பங்களாதேஷில் வைத்து இங்கிலாந்து அணியை வெற்றி கொண்டது பங்களாதேஷ் கிரிக்கெட்டின் ஒரு சாதனை துளியாக உள்ளது.

பங்களாதேஷ் அணியின் டெஸ்ட் வாழ்க்கையை எடுத்து நோக்கின் அதிக டெஸ்ட் ஓட்டங்களை பெற்றவராக தமிம் இக்பால் உள்ளார். இவர் 3546 ஓட்டங்களை பெற்றுள்ளார். அதிக விக்கெட்டுகளை (170)சகிப் அல் - ஹசன் வீழ்த்தியுள்ளார். அதிக பட்ச ஓட்ட எண்ணிக்கையும் சகிப் இடமே உள்ளது. இவர் 217 ஓட்டங்களை பெற்றுள்ளார். சிறந்த பந்துவீச்சினை தயூல் இஸ்லாம்( 8/39) வைத்துள்ளார்.

அதிக டெஸ்ட் போட்டியில் விளையாடியவர்கள் வரிசையில் மொகமட் அக்சபுல் உள்ளார். இவர் 61 போட்டிகளில் ஆடியுள்ளார். அணித்தலைவராக அதிக போட்டிகளில் ரகிம் (29)விளையாடியுள்ளார். இலங்கைக்கு எதிராக காலியில் வைத்து பெறப்பட்ட 638 ஓட்டமே அதிகபட்ச ஓட்டமாக உள்ளது.

அதி கூடிய இணைப்பாட்டமாக சகிப் மற்றும் ரகிம் ஆகியோர் இடையே பகிரப்பட்ட 359 ஓட்டங்கள் காணப்படுகின்றது. ரகிம் இலங்கைக்கு எதிராக காலியில் இரட்டைச்சதம் பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இவ்வாறு பல சோதனைகளையும் சில சாதனைகளையும் கொண்டுள்ள பங்களாதேஷ் இலங்கைக்கு எதிராக முதலாவது வெற்றியை பதிவு செய்து தனது நூறாவது போட்டியை வெற்றியுடன் கொண்டாடுமா இல்லை சோதனைக்கு தள்ளப்படுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இதேவேளை இலங்கை அணியை பொறுத்தவரை முதல் டெஸ்ட் ஆட்டத்தில் வெற்றிபெற்ற நிலையில் பங்களாதேஷ் அணி சந்திக்கின்றது.இலங்கை அணியும் பங்களாதேஷ் அணி வெற்றி பெறமால் தடுக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற அதே அணியே இந்த இரண்டாவது ஆட்டத்தில் பங்கேற்கும் என எதிர்பார்க்கலாம்.இலங்கை அணியின் தலைவராக ரங்கன ஹேரத் செயற்படுவார். இலங்கை அணிக்கு தலைமை தாங்கிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...