தேர்தல் ஆணையத்திடம் ஓ.பி.எஸ். அணியினர் விளக்கம் | தினகரன்

தேர்தல் ஆணையத்திடம் ஓ.பி.எஸ். அணியினர் விளக்கம்

அதிமுக பொதுச்செயலாளராக சசிலாக நியமிக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்திற்கு பன்னீர்செல்வம் அணியினர் பதில் அளித்துள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் செல்லாது என அறிவிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் பன்னீர்செல்வம் அணியினர் மனு அளித்திருந்தனர். இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

அதன்படி கடந்த 10ஆம் திகதி 70 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை சசிகலா தனது வழக்கறிஞர்கள் மூலம் தேர்தல் ஆணையத்தில் சமர்பித்தார். அதில் அதிமுக சட்ட விதிகளின் படியே சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

சசிகலாவின் இந்த பதிலுக்கு மார்ச் 14ஆம் திகதிக்குள் பதில் அளிக்குமாறு பன்னீர்செல்வம் அணியினருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தேர்தல் ஆணையத்திடம் பன்னீர்செல்வம் அணியினர் நேற்று விளக்கத்தை அளித்துள்ளனர்.

அதில், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று அதிமுக விதிகளில் இருப்பதாகவும் சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 


Add new comment

Or log in with...