தமிழகத்தில் திடீரென பஸ் கட்டணங்கள் உயர்வு | தினகரன்

தமிழகத்தில் திடீரென பஸ் கட்டணங்கள் உயர்வு

 

தமிழகத்தில் பஸ் கட்டணங்கள் திடீரென உயர்த்தப்பட்டு உள்ளன. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதிகபட்சமாக 50 ரூபாய் வரை மறைமுக கட்டண உயர்வை பழனிசாமி அரசு அமுல்படுத்தி உள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

டீசல் மீதான வரி உயர்வால் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் செலவை சரிக்கட்டவே இந்த கட்டண உயர்வு என அரச தரப்பில் சமாளிக்கப்படுகிறது.

தமிழக அரசு கடந்த வாரம் பெற்றோல் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தியது. அதனால் பெற்றோல் விலை

லீட்டருக்கு 3.78 ரூபாய் உயர்ந்தது; டீசல் விலை லீட்டருக்கு 1.70 ரூபாய் அதிகரித்தது. இதன் காரணமாக தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

அதை சரிக்கட்ட முன்னறிவிப்பின்றி திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தின் 3,685 பஸ்களில் மூன்றில் ஒருபங்கு பஸ்கள் சாதாரண கட்டணத்தில் அதாவது 'வெள்ளை போர்ட்' பஸ்களாக இயக்கப்படுகின்றன. அவற்றில் 90 சதவீத பஸ்கள் 'பச்சை போர்ட்' பஸ்களாக மாற்றப்பட்டு உள்ளன.

அதே போல 'பச்சை போர்ட்' பஸ்களில் பாதிக்கு மேல் சொகுசு பஸ்களாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஏற்கனவே உள்ள கட்டணத்தை விட 1 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை சத்தமின்றி கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. கட்டணம் உயர்ந்துள்ள போதிலும் சேவையின் பெயருக்கு ஏற்ப வசதிகள் செய்யப்படவில்லை.

அத்துடன் தொலைதுார விரைவு பஸ்களில் 50 ரூபாய்க்கு மேல் கட்டணம்உயர்த்தப்பட்டு உள்ளது. பெயர் பலகை மாறியதை அறியாத பயணிகள் சாதாரண பஸ்களுக்காக காத்திருப்பதும் சாதாரண பஸ்கள் என நினைத்து ஏறிய பின் கட்டண உயர்வை கேட்டு அதிர்ச்சி அடைவதும் நடக்கிறது.

இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக அரசு 23 ஆயிரம்பஸ்களை இயக்குகிறது.

அவற்றுக்காக தினமும் 17.74 லட்சம் லீட்டர் டீசல் செலவாகிறது. தற்போது விதிக்கப்பட்டுள்ள டீசல் மீதான வரியால் 1 லீட்டர் டீசலுக்கு 1.70 ரூபாய் கூடி உள்ளது. இதனால் ஒவ்வொரு மாதமும் 9.21 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். ஏற்கனவே அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கும் நிலையில் இந்த இழப்பை சமாளிக்க பஸ் கட்டணத்தில் மாற்றங்களை செய்திருக்கிறோம். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...