மனம் திறந்து ஒரு மடல் | தினகரன்

மனம் திறந்து ஒரு மடல்

உங்கள் அபிமானம் பெற்ற தினகரனுக்கு இன்று 85 ஆவது பிறந்த நாள் 86 ஆவது அகவையில் இன்று கால்பதிக்கிறது.

1932 ஆம் ஆண்டு இதேநாள் இதேதினந்தான் தினகரன் அவதரித்தது.

டீ. ஆர். விஜயவர்த்தன என்ற சிங்களப் பெருமகனால் 15-03-1932 அன்று ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பத்திரிகை முழுக்க முழுக்க தமிழ் பேசும் சமூகங்களை விழிப்படையச் செய்வதற்காக உருவாக்கப்பட்டதாகும். தேசிய இயக்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த டீ. ஆர், தேசியச் சிந்தனையோடு தினகரனை ஆரம்பித்தார்.

தொடங்கிய காலத்திலிருந்து இற்றை வரை இடைவிடாது தினகரன் வெளிவந்து கொண்டேயிருக்கிறது. சுமார் எட்டுத் தசாப்த காலத்திற்கும் மேலாக இதழியல் பணியில் தனித்துவத்துடன் வெளிவந்து கொண்டிருக்கும் தினகரன் காலமாற்றத்திற்கும் அபரிமித தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து களத்தில் நிற்கிறதென்பது பெரும் சாதனை. இதன்பின்பு ஆரம்பிக்கப்பட்ட எத்தனையோ பத்திரிகைகள், “வந்தார்கள். போனார்கள்” என்பது போல் இருந்த இடமே இல்லாமல் போய்விட்டன.

காலமாற்றங்களுக்கு ஈடுகொடுக்காத எந்தவொரு பத்திரிகையும் தாக்குப் பிடித்ததாக வரலாறு இல்லை. மாற்றம் என்ற சொல்லைத்தவிர அனைத்துமே மாற்றம் பெறும் என்பது கார்ல்மாக்சின் இயங்கியல் தத்துவம் இது ஊடகத்துறைக்கும் விதிவிலக்காக இல்லை. கால ஓட்டத்துக்கு ஏற்ற மாற்றமும் வளர்ச்சியும் தினகரனில் நடந்துகொண்டேயிருக்கிறது.

உண்மையில் ஊடகமென்பது தொடர்பாடல் சாதனம். அதாவது தொடர்பாடலை இலகுபடுத்தும் கருவியே ஊடகம். இத்தகைய ஊடகத்துக்கு இரண்டு முக்கிய பணிகள் இருக்கின்றன என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது. மக்களுக்குத் தகவலைக் கொண்டு செல்வதும் மக்களின் கருத்துக்களைப் பிரதிபலிப்பதுமே ஊடகத்தின் இரு அடிப்படைகள். ஆனால் இந்த இரண்டுமே ஆரம்பகால கட்டங்களில் முறையாக பின்பற்றப்படாமல் இருக்கிறதென்பது தெளிவாகத் தெரிகிறது.

அந்தக் காலத்தில் பண்டிதத் தமிழைப் பயன்படுத்தியதால் ஊடகங்கள் (பத்திரிகைகள்) தனது அடிப்படை இலக்கை இழந்தன. பாமர மக்களை சென்றடைவதில் பண்டிதத் தமிழ் ஒரு தடைக்கல்லாகவே இருந்தது. என்றாலும் கால ஓட்டத்தில் பண்டிதத் தமிழை பழகு தமிழாக வளர்த்தெடுத்த பெருமை தினகரனுக்கு இருக்கிறது.

1932 ஆம் ஆண்டு தினகரன் ஆரம்பிக்கப்பட்டாலும் 1959 ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலமே பொற்காலமென ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பேராசிரியர் கைலாசபதி என்ற பேரறிஞர் தினகரனின் பிரதம ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டது இந்த ஆண்டில்தான். பேரறிஞர் கைலாசபதியின் வருகைக்குப் பின்னர்தான் புத்திலக்கியப் படைப்புகளும் தேசிய இலக்கியமும் எழுச்சி பெறத் தொடங்கியதென்பது தெட்டத் தெளிவான உண்மையாகும்.

பேராசிரியர் கைலாசபதி முற்போக்கு எழுத்தாளர் சங்க மத்திய குழு உறுப்பினராக இருந்தவர். ஈழத்து எழுத்தாளர்களுக்கு இவர் தினகரனில் ஏற்படுத்திக் கொடுத்த களம் ஊடகத்துறையில் பெரும் எழுச்சியை உருவாக்கியது என்றே கூறலாம். 1959 ல் தினகரனில் பிரசுரமான ஆயிரக் கணக்கான படைப்புகள் இன்றும் கருத்தாளச் சுவையோடு படிக்கக்கூடியதாக இருக்கின்றன. கைலாசபதியின் ஊடகத்துறை பிரவேசம் தினகரனில் மாத்திரமல்ல, ஈழத்தின் ஏனைய பத்திரிகைகளின் போக்கிலும் புதிய திருப்பங்களை ஏற்படுத்தியதாகவே கல்விமான்கள் எடுத்தியம்புகின்றனர். 1959 க்குப் பின்னர் ஈழத்து எழுத்தாளர்களுக்கென தினகரன் ஏற்படுத்திய களம் இலங்கையில் ஒரு புதிய இலக்கியத் தலைமுறையை உருவாக்குவதற்கு வழி செய்தது என்பது பல்கலைக்கழகக் கல்விமான்களின் கருத்தாக இருக்கிறது.

இது தொடர்பில் பல்கலைக்கழகங்களில் ஆய்வுகளும் நடத்தப்பட்டிருக்கின்றன.

கைலாசபதியின் பொற்காலத்திற்குப் பின்னரான காலப் பகுதி கசப்பான காலமாகவே இருந்து வந்திருக்கிறது. இந்நிலை ஏற்பட்டதற்கு பொறுப்புக்களில் இருந்த ஆசிரியர்களின் தவறு அல்லது இயலாமையைக் காரணமாகக் கொள்ள முடியாது.

சிறுபான்மை தமிழ் பேசும் மக்களிடம் செல்வாக்கின் உச்சத்திலிருந்து தினகரன், படிப்படியாக அதனை இழந்தது. குறிப்பாகச் சொன்னால் மக்கள் மத்தியிலிருந்து அந்நியப்பட்டுப் போனது என்றே சொல்ல முடியும். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அரசியல் சுழிகளுக்குள் ‘தினகரன்’ சிக்கிக் கொண்டது மிக முக்கிய காரணமாகத் தென்படுகிறது.

மக்களுக்கு சரியான தகவல்களைக் கொண்டு செல்லும் ஊடகத்துறையின் அடிப்படையில் இருந்து தினகரன் தன்னை விலக்கிக் கொண்டது என்பதே யதார்த்தமாக இருந்து வந்திருக்கிறது.

தினகரன், டெய்லிநியூஸ், ஒப்சேர்வர், தினமின, சிலுமின ஆகிய தேசியப் பத்திரிகைகளை வெளியிடும் நிறுவனம் லேக்ஹவுஸ் ஆகும். 1973 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதியன்று இந்நிறுவனம் அரசுடைமையாக்கப்பட்டதோடு இன்றுவரை அரசாங்க அரசசார்பு நிறுவனமாகவே செயற்பட்டு வருகின்றது.

தினகரனின் வீழ்ச்சியை இரண்டு கட்டங்களாகப் பார்க்க முடியும். 1945 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஏ. கே. பி. நாதன் என்பவர் தினகரன் ஆசிரியராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவருடைய நியமனம் ஓர் அரசியல் சர்ச்சைக்குரியதாகவே இருந்ததாக ஊடக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்க் காங்கிரஸ் கட்சி அந்தக் காலப் பகுதியில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தியிருந்தது. ‘சுதந்திரன்’ பத்திரிகையை தனது உத்தியோகபூர்வ பத்திரிகையாக தமிழ் காங்கிரஸ் நடத்தி வந்தது. அப்போது சுதந்திரனின் ஆசிரியராக இருந்தவர் ஏ. கே. பி. நாதன். அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் பிளவடைந்து தமிழரசுக் கட்சி உருவான போது (சமஷ்டிக் கட்சி) சுதந்திரன் சமஷ்டிக் கட்சியுடன் செயற்பட்டது.

இந்த நிலையில் ஊடகச் செல்வாக்கு இல்லாமல் போன ஜீ. ஜி. பொன்னம்பலம், டீ. ஆர். விஜயவர்த்னவின் (ஸ்தாபகர்) ஒத்துழைப்பை நாடியதோடு தினகரனை தனக்குச் சாதகமான களமாக மாற்ற முயற்சி செய்தார் என தெளிவத்தை ஜோசப் எழுதிய “இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும்” எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, அரச சார்பு நிலையை எடுத்த ஜீ. ஜீ. பொன்னம்பலத்துக்கு ஊடக ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்துக்காகவே ஏ. கே. பி. நாதன் என்பவர் தினகரன் ஆசிரியராக நியமிக்கப்பட்டிருக்கிறாரென்பது வரலாறு. ஆகவே, அரசியல் தலையீடு என்பது 1948 காலப் பகுதியில் தினகரனுக்குள் புகுந்து விட்டது என்பது தெளிவாகின்றது.

காலத்துக்கு காலம் ஏற்பட்ட சிறு சிறு அரசியல் சுழிகள் பின்னர் பெரும் சுழிகளாக உருவெடுத்து ‘அரசியல் ஊதுகுழல்’ என்ற உருமாற்றத்தைப் பெற்றதென்பது கசப்பான உண்மை.

இப்போது காலம் சுழன்று தொடங்கிய இடத்தில் வந்து நிற்கிறது தினகரன். இப்போது எடுத்து வைக்க வேண்டிய அடுத்த அடிபற்றியே எமது சிந்தனை செல்கிறது. நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், தினகரன் மூச்சு விடுவதற்குச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. நசுக்கப்பட்டிருந்த ஜனநாயகத்தின் குரல்வளை தளர்த்தப்பட்டிருக்கிறது.

பத்திரிகைச் சுதந்திரத்துக்காக கடந்த காலங்களில் அரசியலோடு பேரம் பேசியும் பயனில்லாமல் போன நிலையில் பெறுமதியான பல ஊடகவியலாளர்களை இழந்திருக்கிறோம். என்றாலும் சுதந்திரத்தோடு நாம் இப்போது பணியாற்றத் தொடங்கியிருக்கிறோம். ஊடகவியலாளர்களின் பேனாக்களுக்குக் கொடுக்கும் சுதந்திரமென்பது ஜனநாயகத்துக்குக் கொடுக்கும் மரியாதை என்பது நாம் உளமார ஏற்கிறோம்.

உலகில் முன்னணி ஊடக நிறுவனங்கள் பயன்படுத்தும் தொழில் நுட்பங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நாமும் பெருவளர்ச்சி கண்டிருப்பது பெருமிதம். இந்த வளர்ச்சி மக்கள் தொடர்பாடலை மேலும் இலகுபடுத்துவதற்கு உந்து சக்தியாக அமைகின்றது.

தினகரனின் வரலாற்றையும் அதன் நீண்ட பயணத்தையும் ஆராய்கின்ற போது ஊடகத்துறையின் ஜாம்பவான் என்ற சாதனையாளரை நாம் மறைக்க முடியாது. 1961 ஆம் ஆண்டிலிருந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக தினகரன் பிரதம ஆசிரியராகப் பணியாற்றியவர் ஐயா சிவகுருநாதன். முப்பது ஆண்டுகள் ஒரு ஆசிரியராகப் பணியாற்றுவதென்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

தரமான பத்திரிகையொன்று உருவாகுவதற்கு அர்ப்பணிப்பு சிந்தனையுடன் கூடிய ஊடகவியலாளர் குழு அவசியமானதாகும். தனிப்பட்ட ஒருவரால் தரமான பத்திரிகையை படைக்க முடியாது. கூட்டுழைப்பின் ஒட்டுமொத்த அறுவடையினாலேயே தரமான பத்திரிகையை வாசகர்களுக்கு வழங்க முடியும்.

நவீனத்துவத்துக்குள் கால் பதித்திருக்கும் தினகரன் கூட்டுழைப்புக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. ஜீவனோபாயத் தொழிலுக்கு அப்பால் சகலருமே ஆத்ம திருப்தியோடு அர்ப்பணித்து செயற்படுவது கூட்டுழைப்புக்கு பக்கபலமாக இருக்கிறதென்பதை நாம் சொல்லியே ஆக வேண்டும்.

பக்கச்சார்பாக செயற்பட்டமை, கல்விச் சமூகத்தைக் கண்டுகொள்ளாமை, வாசகர்களை மறந்த செயற்பாடுகள் எல்லாம் கடந்த கால தவறுகளாகவே இருக்கட்டும்.

புதிய தடத்தில் நாம் இப்போது காலடி வைக்கிறோம். ஊடகத்துறையின் நவீன வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து நிற்கும் இளம் ஊடகவியலாளர் குழுவோடு நாம் இப்போது களம் இறங்கியிருக்கிறோம்.

ஜனநாயகத்தின் காவலன் ஊடகமென்ற அடிப்படையிலிருந்து நெறிபிறழாது ஊடக தர்மத்தை நாம் பேணுவோமென்பதை வாசகர்களுக்கு பணிவோடு தெரிவித்துக் கொள்கிறோம். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...