ஆரோக்கியம் மிகுந்த ஊடகக் கலாசாரம் | தினகரன்

ஆரோக்கியம் மிகுந்த ஊடகக் கலாசாரம்

இன்றைய நவீன அறிவியல் யுகத்தில் மனிதவாழ்வுடன் இரண்டறக் கலந்து விட்டன ஊடகங்கள். இந்த ஊடகங்கள் இன்றி மனிதன் தனித்து இயங்க முடியாதபடி ஆகி விட்டது இன்றைய நிலைமை. அந்தளவுக்கு மனித வாழ்வுடன் பின்னிப்பிணைந்திருக்கின்றன இந்த ஊடகங்கள்.

வெகுஜனத் தொடர்பு ஊடகங்களுக்கு உலகில் மிக நீண்ட நெடிய வரலாறு உள்ளது. ஆரம்ப காலத்தில் சமிக்ைஞ, சைகையை அடிப்படையாகக் கொண்டு- ஆரம்பமான தொடர்பாடல் ஊடகம் இன்று அச்சு, இலத்திரனியல் ஊடகங்களையும் கடந்து டிஜிட்டல் ஊடகங்கள் வரையும் அபரிமித வளரச்சியை அடைந்திருக்கின்றது. அதிலும் இணைய தளங்கள், சமூக வலைத்தளங்கள் என்றபடி இந்த ஊடகத் துறை பல்வேறு பரிமாணங்களிலும் வளர்ச்சி கண்டிருக்கின்றது.

இதன் விளைவாக அபரிமி-த சக்தி கொண்ட ஆயுதமாக இன்று ஊடகங்கள் திகழ்கின்றன. அதுவும் இரும்பையும், கந்தகத்தையும் கொண்ட ஆயுதங்களையும் சன்னங்களையும் விடவும் அதிக சக்தி மிக்கவையாக இந்த ஊடகங்கள் உள்ளன.

இவ்வாறு அதிசக்தி பெற்று விளங்கும் இந்த ஊடகங்களினால் மக்கள் அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்பவும் முடியும், அதே அபிப்பிராயத்தை சிதைத்து வீழ்த்தி அழித்து விடவும் முடியும். இதற்கு உலகின் அண்மைய வரலாற்றில் நிறையவே உதாரணங்கள் உள்ளன. அமெரிக்கா ஈராக் மீது மேற்கொண்ட யுத்தம், அரபு வசந்தம், ட்ரம்பின் வெற்றி போன்றவையெல்லாம் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. இவ்வாறு வரையறையற்ற சக்தியை ஊடகங்கள் இன்று பெற்றுள்ளன.

அதேதேரம் உலகில் நான்காவது சக்தியாக, அதாவது ஜனநாயக நாடொன்றில் நான்காவது சக்தியாக ஊடகமே உள்ளது. அதன் காரணத்தினால் வளர்ச்சியடைந்த நாடுகள் மாத்திரமல்லாமல் வளர்முக நாடுகளும் கூட ஊடகங்களை தனித்துவமாக மதித்து செயற்படுகின்றன.

ஆனாலும் உலகில் அதிக அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் துறையாகவும் அதுவே விளங்குகின்றது. ஊடகங்கள் கொண்டிருக்கும் அபார சக்தியே அதற்கான முக்கிய காரணமாகும். அதன் காரணத்தினால்தான் ஊடக நிறுவனங்கள் தாக்கப்படும் சம்பவங்கள் ஆங்காங்கே இடம்பெறுகின்றன. ஊடக நிறுவனங்கள் சேதப்படுத்தப்படுகின்றன. ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். அச்சுறுத்தப்படுகின்றனர். காயப்படுத்தப்படுகின்றனர். கடத்தப்படுகின்றனர். இவை அனைத்தும் உலகின் பல்வேறு பிரதேசங்களிலும் அவ்வப்போது இடம்பெற்றே வருகின்றன.

இவ்வாறான அச்சுறுத்தல்களை வளர்ச்சியடைந்த நாடுகளையும் விட வளர்முக நாடுகளிலுள்ள ஊடகங்கள்தான் அதிகம் எதிர்கொண்டு வருகின்றன. இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. இந்நாடு சுதந்திரமடைந்த பின்னர் பல சந்தர்ப்பங்களில் ஊடகங்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் அரச அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட சந்தர்ப்பங்கள் உள்ளன. லேக் ஹவுஸ் ஊடக நிறுவனம் 1973 ஆம் ஆண்டில் அரசு​ைடமையாக்கப்பட்டமையும் அவ்வாறான ஒன்றுதான்.

1990 இல் ரிச்சர்ட் டி சொய்ஸா படுகொலை செய்யப்பட்டதோடு ஆரம்பமான ஊடகவியலாளர் படுகொலை, கடந்த ஆட்சிக் காலத்தில் மிக மோசமான கட்டத்தை அடைந்திருந்தது. பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர்; அச்சுறுத்தப்பட்டனர்; காயப்படுத்தப்பட்டனர். அச்சுறுத்தல்கள் காரணமாகப் பல ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டே தப்பித்து வெளியேறி உள்ளனர். ஊடக நிறுவனங்களுக்குள் அமைச்சர்கள் கூட அத்து-மீறிப் பிரவேசித்து களேபரம் செய்தனர்.சில ஊடக நிறுவனங்களுக்கு சேதங்களும் விளைவிக்கப்பட்டதை இலகுவில் மறந்து விட முடியாது.

இவ்வாறு மிக மோசமான இருண்ட யுகத்திற்கு இந்நாட்டு ஊடகத் துறைமு-கம் கொடுத்திருக்கின்றது. இவையெல்லாம் மறைக்க முடியாத கறைபடிந்த கறு-ப்புப் பக்கங்கள்.

இவ்வாறு மிக மோசமாகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த ஊடக அடக்குமுறைக்கு 2015.08.-08 இல் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்நாட்டு ஊடகத்துறைக்கும், ஊடகவியலாளர்களுக்கும் நல்லாட்சி அரசாங்கம் நம்பிக்கை ஒளி பாய்ச்சியது. அதன் பயனாக ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் இற்றை வரையும் எந்த ஒரு ஊடகவியலாளரும் படுகொைல செய்யப்படவுமில்லை. கடத்திச் செல்லப்படவுமில்லை. அச்சுறுத்தப்படவுமில்லை. இன்று ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தகவலறியும் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. அதேநேரம் அரசாங்கத்தை மாத்திரமல்லாமல் ஜனாதிபதியையும், பிரதமரையும் கூட தாராளமாக விமர்சிக்கக் கூடியளவுக்கு ஊடகங்கள் சுதந்திரம் பெற்றுள்ளன.

அத்தோடு அரச ஊடகங்களும் சுதந்திரமாக செயற்படுகின்றன. கடந்த காலங்களில் அரச ஊடகங்கள் 'அரசாங்கத்தின் ஊதுகுழல்' என்றுதான் பார்க்கப்பட்டன. அதன்படியே அழைக்கப்பட்டன. ஆனால் இன்று அந்த ஊடகங்களை, இவை அரச ஊடகங்களா என மக்கள் பார்த்துப் பிரமி-க்கும் அளவுக்கு நி​ைலமை வளர்ச்சி அடைந்திருக்கின்றது. இதற்கு தினகரனும் விதிவிலக்கு அல்ல.

இதன் காரணத்தினால் அரச ஊடகங்களின் வாசகர் எண்ணிக்கை முன்பை விடவும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனைப் பரவலாக அவதானிக்க முடிகின்றது. இன்று அரச ஊடகங்களில் பக்கச் சார்பற்ற தன்மையை நன்றாகவே காண முடிகின்றது என்று சாதாரண மக்கள் கூட பேசும் அளவுக்கு நிலைமை முன்னேற்றமடைந்துள்ளது.

இவ்வாறான ஆரோக்கியமான ஊடகக் கலாசாரம் நிலவுகின்ற இவ்வேளையிலேயே 85 வருடங்களை தினகரன் பத்திரிகை பூர்த்தி செய்து, 86ம் வருடத்தில் காலடி பதிக்கிறது. தினகரனுக்கு இது இனியதொரு காலம் என்றே கூற வேண்டும். வாசகர்கள் அளிக்கின்ற பேராதரவில் அதனை நாம் உணர்கின்றோம். அந்த ஆதரவு என்றும் தொடர வேண்டும் என்பதே எமது அவா ஆகும். அதேசமயம் வாசகர்களின் அபிமானத்துக்குரிய பத்திரிகையாகவும், மக்கள் குரலாகவும் தினகரன் தொடர்ந்தும் வீறுநடை போடும் என்பதை இச்சந்தர்ப்பத்தில் பெருமையுடன் கூறுகின்றோம்.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...