எதனால் கிடைத்த வெற்றிவாகை இது? | தினகரன்

எதனால் கிடைத்த வெற்றிவாகை இது?

இந்தியாவின் உத்தரப் பிரதேசத் தேர்தல் முடிவு எட்ட முடியாத உயரத்துக்குப் பிரதமர் நரேந்திரமோடியைத் தூக்கி வைத்து விட்டது. மகாராஷ்டிர மாநில மாநகராட்சித் தேர்தல், ஒரிசா மாநில மாவட்ட ஊராட்சித் தேர்தல்களைத் தொடர்ந்து இப்போது இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்திலும் பாரதிய ஜனதா கட்சி அடைந்திருக்கும் அபார வெற்றியை ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாததாக்கிய நரேந்திர மோடி அரசின் முடிவை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான தெளிவான அறிவிப்பாகத்தான் கொள்ள வேண்டும்.

உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை, 1980- குப் பிறகு 37 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் ஒரு கட்சி 300 -க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. 1993 முதல் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை வழங்காமல் கூட்டணிக் குழப்பங்களுக்கு வழிகோலிய உத்தரப் பிரதேச வாக்காளர்கள், 2007 முதல் தெளிவான தீர்ப்புகளையே வழங்கி வருகிறார்கள்.

2007- இல் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கும், 2012 -இல் முலாயம்சிங் யாதவின் சமாஜவாதி கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை அளித்த உத்தரப் பிரதேச வாக்காளர்கள் இந்தமுறை பாரதிய ஜனதா கட்சிக்கு 312 இடங்களுடன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை வழங்கி நிலையான ஆட்சிக்கு வழிகோலி இருப்பது வரவேற்கப்பட வேண்டிய முடிவு.

உத்தரப் பிரதேச தேர்தல் முடிவு மூன்று முக்கிய செய்திகளைக் கூறுகிறது.

முதலாவது, ஜாதிக் கட்சிகளை மக்கள் இனியும் ஆதரிக்கத் தயாராக இல்லை. இரண்டாவது, சிறுபான்மையினரை வாக்கு வங்கியாகக் கருதி அவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் அரசியலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மூன்றாவது, காங்கிரஸ் கட்சி தனது முக்கியத்துவத்தை இழந்து விட்டிருக்கிறது.

சமாஜவாதி கட்சியின் அடித்தளமான யாதவர்கள் வாக்கு வங்கியும், பகுஜன் சமாஜ் கட்சியின் 'ஜாதவ்' என்றழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் வாக்கு வங்கியும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் ஜாட் வாக்கு வங்கியும் தகர்ந்திருக்கின்றன. அதிக அளவில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்த பகுஜன் சமாஜ் கட்சி வெறும் 19 இடங்களில் மட்டும்தான் வெற்றி பெற முடிந்திருக்கிறது.

உத்தரப் பிரதேச வெற்றிக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்குக் காரணம், இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலம் என்பதும், மக்களவைக்கு 80 உறுப்பினர்களை அனுப்பும் மாநிலம் என்பதும். 20 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரப் பிரதேசம்தான் இந்தியாவுக்கு மிக அதிகமான பிரதமர்களை அளித்திருக்கும் மாநிலம்.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பா.ஜ.க. பெற்றிருக்கும் வெற்றியைப் போல, பஞ்சாப்பில் காங்கிரஸ் வெற்றியடைந்திருக்கிறது. 75-ஆவது பிறந்தநாள் பரிசாக கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு பஞ்சாப் மக்கள் முதல்வர் பதவியை மீண்டும் அளிக்க முற்பட்டிருக்கிறார்கள் என்றால், அது அவருடைய தனிப்பட்ட செல்வாக்குக்குக் கிடைத்திருக்கும் வெற்றி என்றுதான் கூற வேண்டும். காங்கிரஸ் தலைமையின் தலையீடு இல்லாமல் தனக்கு முழுப் பொறுப்பும் தந்தால் மட்டுமே காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்குவேன் என்கிற நிபந்தனையுடன் தேர்தலை சந்தித்து வெற்றியும் பெற்றிருக்கிறார் அவர்.

பஞ்சாப் மக்களும் உத்தரப் பிரதேச வாக்காளர்களைப் போலவே தெளிவாக முடிவெடுத்திருக்கிறார்கள். ஆட்சியில் இருந்த அகாலிதளம் - பா.ஜ.க. ஆட்சிமீது கடுமையான வெறுப்பு இருந்தது. புதிதாகத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி களமிறங்கிய போது, டில்லியில் நடந்தது போல, ஆம் ஆத்மியை மாற்றாக மக்கள் தேர்ந்தெடுக்கக் கூடும் என்கிற அரசியல் நோக்கர்களின் எதிர்பார்ப்பை வாக்காளர்கள் முறியடித்து விட்டனர். 77 இடங்களைக் காங்கிரஸ் கட்சிக்கு அளித்து ஆட்சிக்கு வழிகோலி இருக்கிறார்கள்.

தேர்தல் நடந்த ஏனைய இரண்டு மாநிலங்களான கோவாவிலும், மணிப்பூரிலும் காங்கிரஸ் அதிக இடங்களை வென்ற கட்சியாக இருந்தாலும், தனிப்பெரும்பான்மை பெறவில்லை. கோவாவில் உள்ள 40 தொகுதிகளில் 13 இடங்களை மட்டுமே பா.ஜ.க. வென்றிருந்தாலும் ஏனைய கட்சிகள் அனைத்தும் 17 இடங்களை பெற்ற காங்கிரஸுக்கு எதிராக பா.ஜ.க.வுடன் கைகோர்த்து ஆட்சி அமைக்கத் தயாராகின்றன. அதேபோல, மணிப்பூரிலும் 60 தொகுதிகளில் 28 தொகுதிகளைக் காங்கிரஸ் கைப்பற்றி இருந்தாலும், ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் 21 இடங்களை வென்ற பா.ஜ.க. ஆட்சி அமைக்கக் கூடும் என்று தெரிகிறது.

பணம் செல்லாததாக்கப்பட்ட முடிவு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதும் இந்திரா காந்திக்குப் பிறகு அதிக செல்வாக்குள்ள ஒரு தலைவராகப் பிரதமர் நரேந்திர மோடி உயர்ந்திருக்கிறார் என்பதும்தான் தேர்தல் முடிவுகள் கூறும் செய்திகள். ஆனாலும் ஓர் உறுத்தல்.

மணிப்பூரின் சிறப்பு காவல் தடைச் சட்டத்தை அகற்ற வேண்டும் என்று 16 ஆண்டுகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய, சுயேச்சையாகப் போட்டியிட்ட ஐரோம் ஷர்மிளாவுக்கு வெறும் 90 வாக்குகள்தான் கிடைத்தன என்றால், நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகள்கூட கிடைக்கவில்லை என்றால் அது என்ன நியாயம்?

அடக்கு முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களுக்காகப் போராடிய பெண்மணி அவர். நல்லவர்களுக்கும், அரசியல் சாராத மக்கள் தொண்டர்களுக்கும் தேர்தலில் இடமில்லை என்பது தான் பொருளா? நன்றி கெட்ட மக்கள், மனிதாபிமானமில்லாத வாக்காளர்கள் என்றுதான் பொருள் கொள்ள வேண்டியுள்ளது.

அடுத்த தேர்தலிலும் மோடிதான்:

‘இந்த நிலையில் நாம் 2019ம் ஆண்டு தேர்தலை மறந்து விட வேண்டியதுதான். 2024 தேர்தலை எதிர்கொள்ள திட்டமிடுவோம்', என்று ஒரு செய்தி ட்விட்டரில் வந்து சேர்ந்தது. இதை அனுப்பியது காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா. உத்திரபிரதேச தேர்தல் முடிவுகள் அவரை இப்படி புலம்ப வைத்துள்ளது. யாரும் கனவில் கூட எதிர்பார்த்திராத தேர்தல் முடிவு. பல தலைவர்களுக்கு அரசியல் ஓய்வு கொடுத்த தேர்தல் முடிவு.

‘ஜனநாயகம் தோற்றது. பணநாயகம் வென்றது. பணத்துக்கும், மதுவுக்கும் கிடைத்த வெற்றி. அராஜகத்துக்கு கிடைத்த வெற்றி', என்று தோல்விக்கான காரணங்களை தோற்றுப் போனவர்கள் அடுக்கவில்லை. இத்தகைய குற்றச்சாட்டுகள் தமிழ்நாட்டிற்கு மட்டுமே சொந்தமானவை. உத்தர பிரதேச தலைவர்கள் சிலர் வாக்கு இயந்திரத்தை குறை சொன்னாலும், அந்தக் குற்றச்சாட்டை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. சுருக்கமாகச் சொன்னால், இந்த வெற்றியை யாரும் அழுக்காக்க முடியாது. இதையெல்லாம் விட வெற்றி பெற்ற பிறகு பாஜக தலைவர்கள் மிகுந்த முதிர்ச்சியுடன் செயல்பட்டதும், தொலைக்காட்சியில் பேசும் போது ஆர்பாட்டமில்லாமல் கண்ணியத்தை கடைப்பிடித்ததும் பாராட்டப்பட வேண்டியவை.

தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கணிப்புகள் தொங்கு சட்டசபை அமையும் என்று ஒரு தரப்பும், பாஜக இழுபறியில் ஆட்சியமைக்கும் என்று மற்றொரு தரப்பும் சொல்லி வந்தன. ஆனால், முடிவுகள் இரு தரப்பு கணிப்புகளையும் பொய்யாக்கின. பாஜக 325 இடங்களைப் பிடித்து அனைவருக்கும் அதிர்ச்சியை பரிசாக அளித்தது.

‘அரசியல் சாணக்கியர் அமித் ஷாவின் புத்திசாலித்தனத்திற்கும், கடும் உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி. பாரதப் பிரதமரின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி' என்று பாஜக முழங்குகிறது. இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை. 2014ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது என்பது சாதாரணமான காரியமல்ல.

வெற்றிக்குக் காரணமென்ன?

இந்த தேர்தலில் எஸ்.சி 84%, ஓபிசி 78%, பொதுப் பிரிவினர் 86%, ஜாட் இனத்தவர் 90%, யாதவர்கள் 65% பாஜகவை ஆதரித்துள்ளார்கள். இதுமட்டுமின்றி, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றிருப்பது எல்லோருடைய புருவத்தையும் உயர்த்தியுள்ளது. மொத்தத்தில் ஜாதி, மத வேற்றுமைகளையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு மக்கள் பாஜகவிற்கு ஆதரவு அளித்துள்ளார்கள் என்பது மகிழ்ச்சியான விஷயம்.

பண மதிப்பை குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 500, 1000 ரூபாய் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து மக்களிடம் பணப்புழக்கம் குறைந்தது. வங்கிக் கணக்கில் போதுமான அளவு பணம் இருந்தும் அதை எடுக்க முடியாமல் பலவகையில் மக்கள் சிரமத்திற்கு உள்ளானதை பார்த்தோம். அப்படியிருந்தும் எப்படி இந்த வெற்றி சாத்தியம்?

இந்த தேர்தலில் பாஜகவின் வெற்றியை தீர்மானித்தவை இரண்டு விஷயங்கள்.

ஒன்று, பாரதிய ஜனதா கட்சியின் ‘முத்தலாக்' எதிர்ப்பு. இது இஸ்லாமிய பெண்களிடம் விழிப்புணர்ச்சியையும், ஆதரவு நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இரண்டு, Demonitization என்று நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கறுப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியாக, 500, 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்தது.

தமிழகம் போன்ற பகுதிகளில் இந்த இரண்டு விஷயங்களும் அதிக அழுத்தத்தை ஏற்படுத்த முடியவில்லை. காரணம், இந்த இரண்டைப் பற்றிய சாதகமான அம்சங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அளவிற்கு தமிழக பாஜக இல்லை.

இது நிதர்சனம். இதை சிறப்பாக செய்த உத்தரபிரதேசம், உத்தரகண்ட் ஆகியவை பாரதிய ஜனதாவிற்கு பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளன. பஞ்சாப்பைத் தவிர மற்ற இடங்களில் எதிர்க்கட்சிகளுக்கு கடும் போட்டியை கொடுத்துள்ளது. அடுத்தவர் ஆட்சியமைக்க முடியாத அளவுக்கு வெற்றியை பெற்றுள்ளது.

முத்தலாக், உணர்வுபூர்வமான விஷயம். அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இதைப் பற்றிய விவாதத்தை தவிர்ப்பது உகந்தது.

கறுப்புப் பண முதலைகளின் அட்டகாசங்களை சகித்துக் கொள்ள முடியாதவர்கள், அரசினால் தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை ஏற்றுக் கொண்டார்கள். பாஜக வை ஏற்றுக் கொண்டார்கள். இதுதான் பாஜக வெற்றியின் இரகசியம்.

அரசு பணமதிப்பை குறைக்கும் முயற்சியாக 16.5 இலட்சம் கோடி மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற முயற்சி எடுத்தது. இதில் 12 அல்லது 13 இலட்சம் கோடி மதிப்பிலான 500, 1000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே திரும்ப வரும், மீதமுள்ள ரூபாய் நோட்டுக்கள் கறுப்புப் பணமாக பதுக்கல்காரர்களின் பிடியில் அழிந்து போகும் என்று ஒரு சாரார் கணக்குப் போட்டார்கள்.

ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் 16 இலட்சம் கோடிக்கு மேல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் அரசுக்கு வந்து சேர்ந்தது. மத்திய அரசுக்கு இது அதிர்ச்சியைத் தந்தது. அப்படியென்றால் கறுப்புப் பணமே இந்தியாவில் இல்லை என்று அர்த்தம் கொள்ளலாமா? இதுவரை ரிசர்வ் வங்கியிடம் வந்து சேர்ந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளின் மிகச்சரியான மதிப்பு எவ்வளவு என்பதை அரசு இன்னமும் வெளியிடவில்லை.

இப்போது அது பிரச்சினையல்ல. கறுப்புப் பண ஒழிப்பிற்கான மத்திய அரசின் முயற்சிக்கு மக்களிடம் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது. இது கறுப்புப் பணத்தை கைப்பற்றும் முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றி.

உண்மையில் கறுப்புப் பணம் தங்கமாகவும், பினாமி சொத்துகளாகவும் உருமாறியுள்ளது. இதை மத்திய அரசு எப்படி கையாளப் போகிறது என்பதை இனி வரும் நாட்களில் பார்க்க வேண்டும்.

மோடியின் நாவன்மை:

உத்தர பிரதேச சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலில் பாஜகவுக்குக் கிடைத்துள்ள வெற்றி மிகச் சிறப்பானது. 1991-ல் அத்வானி தலைமையில் ராமஜன்ம பூமிக்கான ரத யாத்திரை நடந்த போது நாடு முழுக்க அது பேசப்பட்டாலும், கட்சிக்கு இந்த அளவுக்கு அலையலையாக வெற்றி கிட்டியதில்லை. அதிலும் உத்தரப் பிரதேசத்தில் கிடைத்துள்ள இப்போதைய வெற்றி குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி எதைக் குறிக்கிறது?

நரேந்திர மோடியின் நாவன்மையும் மக்களிடம் பேசி அவர்களுடைய மனங்களைக் கவரும் ஆற்றலும் துலக்கமாக வெளிப்பட்டிருக்கிறது.

கடந்த நவம்பரில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்த போது, “கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காகத்தான் இதைச் செய்கிறேன். இதனால் சில மாதங்களுக்கு நீங்கள் கடுமையான சித்திரவதையை அனுபவிக்க நேரும். எதிர்காலச் சந்ததிக்கு நல்ல நிர்வாகத்தையும் வளமான எதிர்காலத்தையும் விட்டுச் செல்ல இந்நடவடிக்கை அவசியம்” என்றார்.

வியாபாரிகளின் கட்சி, மேல் சாதிக்காரர்களின் கட்சி என்று மட்டுமே அறியப்பட்டிருந்த கட்சியை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சொந்தம் என்று கொண்டு சென்றிருக்கிறார். இத்தேர்தல் முடிவு சாதிகளைக் கடந்த, வர்க்கங்களைக் கடந்த, மதங்களைக் கடந்த அரசியல் தீர்ப்பாக வெளிப்பட்டிருக்கிறது.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தன்னுடைய தொகுதியில் கடைசி மூன்று நாட்கள் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் தீவிரமாக அக்கறை காட்ட வேண்டும் என்று கட்சித் தலைவர் அமித் ஷா உத்தரவிட்டார். பிரதமர் மோடியும் அதை மீறாமல் கடைப்பிடித்தார். வாரணாசியில் கடைசி மூன்று நாட்கள் முகாமிட்டார்.

மக்களிடம் எதை, எப்படிச் சொல்ல வேண்டும் என்ற நயம் தெரிந்தவர் மோடி. அவருடைய அரசியல் தெளிவும் வாக்காளர்களுடன் அவர் கொண்டிருக்கும் நெருக்கமும் மீண்டும் ஒரு முறை சந்தேகத்துக்கு இடமில்லாமல் இந்த வெற்றி மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மேல் சாதிக்காரர்களின் கட்சி என்று முத்திரை குத்தப்பட்ட கட்சியை, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைத் தங்களுடைய கட்சியாகக் கருதும் அளவுக்கு மாற்றி விட்டார். கிராமப்புற வாக்காளர்களுக்கு அவர் விடுத்த வேண்டுகோள்களும் அவர்களிடையே அவர் செய்த பிரசாரமும்தான் இந்த அபார தேர்தல் வெற்றிக்குப் பின்னணியாகத் திகழ்கின்றன.

2016-ல் கட்சியின் தேசிய நிர்வாகிகளிடையே பேசியபோது, கறுப்புப் பணக்காரர்களைத் தான் வேட்டையாடப் போவதாகக் கூறினார் மோடி. அதற்காக உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவிப்பார் என்று கட்சிக்காரர்களே நினைக்கவில்லை. அது மக்களிடையே கடும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்தும் மேற்கொண்டார்.

கட்சித் தலைவர் அமித் ஷா, நரேந்திர மோடிக்கு ஏற்ப கட்சி நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். உத்தர பிரதேச பாஜக தலைவராக யாதவ் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரான கேசவ பிரசாத் மெளரியாவை நியமித்த அமித் ஷா, இதுவரை போதிய பிரதிநிதித்துவம் கிட்டாத இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர் போட்டியிட 150 பேரவைத் தொகுதிகளை ஒதுக்கினார்.

வாக்காளர்களைக் கவர்வதில் மோடியும், கட்சித் தொண்டர்களின் மதிப்பைப் பெற்று நன்கு வேலை வாங்குவதில் அமித் ஷாவும் இணையற்றவர்களாகத் திகழ்கிறார்கள். இவ்விருவருக்கு இடையிலான பரஸ்பர புரிதலும் நட்புணர்வும் வெற்றிக் கூட்டணியாகத் திகழ்கிறத

இந்தியாவின் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர் எனும் இடத்தை, உத்தர பிரதேச தேர்தல் வெற்றியின் மூலம் உறுதியாகத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போலவே மக்களிடம் நேரடியாக உரையாடுவதில் மோடியும் சிறந்தவர். வெகுஜன மக்களின் சிந்தனையைப் பிரதிபலிப்பதிலும் தேர்ந்தவர்.

வளர்ச்சி, இந்து தேசியவாதம் ஆகியவற்றின் கலவையான தனது அரசியல் பாணி மூலம் வாக்காளர்களை ஈர்த்து வரும் மோடி, பிரிவினை அரசியல் செய்கிறார் என்று தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை எதிர்க்கட்சிகளை நோக்கித் திருப்பி விட்டிருக்கிறார். அரசியலைப் பொறுத்தவரை ஒருவாரம் என்பதே நீண்ட காலம் எனும் நிலையில், 2019 மக்களவைத் தேர்தல் வரை தனது இடத்தை உறுதியாகத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

ராகுல் காந்தி:

2014 மக்களவைத் தேர்தலில் வெறும் 44 இடங்களையே வென்று வரலாற்றுத் தோல்வியடைந்த நாள் முதல் இன்றுவரை தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறார் ராகுல். பணமதிப்பு நீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளில், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகளுடன் கைகோத்து நாடாளுமன்றத்தையே முடக்கினாலும், காங்கிரஸின் செல்வாக்கை வளர்ப்பதில் அவரால் பெரிதாக எதுவும் சாதிக்க முடியவில்லை.

மாநிலக் கட்சியான சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்துத் தேர்தலைச் சந்தித்த அவரது வியூகம் தோல்வியடைந்து விட்டது. பஞ்சாப்பில் கிடைத்திருக்கும் வெற்றி மோசமான சரிவிலிருந்து காங்கிரஸைக் காப்பாற்றியிருந்தாலும், கடைசி வரை கடும் போட்டியைத் தந்த ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸை நிம்மதியிழக்கச் செய்தது மறுக்க முடியாதது.

மாயாவதி:

சமாஜ்வாதி, காங்கிரஸ் கூட்டணியிடமிருந்து முஸ்லிம் வாக்குகளைக் கவர்ந்து விட வேண்டும் என்பதற்காக 99 முஸ்லிம் வேட்பாளர்களைக் களத்தில் இறக்கினார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி. முஸ்லிம் வாக்குகளை காங்கிரஸ் சமாஜ்வாதி கூட்டணியும் தீவிரமாகக் குறிவைத்தன.

இப்படி இருவரும் முஸ்லிம் வாக்குகளைத் தங்களுக்குள் பிரித்துக் கொண்டது பாஜகவுக்கே சாதகமாக முடிந்து விட்டது. சட்டம் - ஒழுங்கு நிலைமை அகிலேஷ் ஆட்சியில் சரியாக இல்லாததால், மக்கள் மீண்டும் தன்னிடம்தான் வருவார்கள் என்று மாயாவதி கருதியதும் நடக்கவில்லை.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...