முடிவின்றித் தொடரும் சைற்றம் சர்ச்சை! | தினகரன்

முடிவின்றித் தொடரும் சைற்றம் சர்ச்சை!

இலங்கையில் தீர்க்க முடியாத தேசியப் பிரச்சினைகளில் ஒன்றாகிப் போயுள்ளது ‘சைற்றம்’ தனியார் மருத்துவக் கல்லூரி விவகாரம். அரசாங்க பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் ஒரு தரப்பாகவும், 'சைற்றம்' தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மறுதரப்பாகவும் நின்று ஆர்ப்பாட்டம் நடத்துவதும் தொடர்ந்து கொண்டே செல்கின்றது.

அரசாங்க மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்றும் கொழும்பில் பாரியளவிலான ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். கோட்டை ரயில் நிலையப் பகுதியில் நேற்றுப் பிற்பகல் ஆரம்பமான ஆர்ப்பாட்டம், சிறிது தூரம் செல்வதற்கிடையில் கலைக்கப்பட்டு விட்டது.

கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், நீரைப் பீய்ச்சியடித்தும் ஆர்ப்பாட்டத்தை முறியடிக்க பொலிஸார் ஆரம்பத்தில் முயற்சி மேற்கொண்ட போதிலும், நிலைமை பின்னர் விபரீதமாகிப் போயுள்ளது. மாணவர்கள் மீது தடியடியும் நடத்தப்பட்டதனால் அந்த ஆர்ப்பாட்டம் பெரும் களேபரமாகவே முடிவடைந்திருக்கின்றது.

தனியார் மருத்துவக் கல்லூரி சர்ச்சையை நாட்டிலுள்ள சாதாரண மக்களே விவாதிக்கின்ற அளவுக்கு அவ்விவகாரம் தற்போது முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. உண்மையில் இதனை அரசாங்க மருத்துவக் கல்லூரிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிக்கும் இடையிலான மோதல் என்று மாத்திரம் எடுத்துக் கொள்ள முடியாதிருக்கிறது.இவ்விவகாரத்துக்கு அரசியல் பின்புலங்களும் உள்ளன.

அரசாங்க மருத்துவக் கல்லூரி மாணவர் தரப்பு பெரும் பலமுள்ள தரப்பாக விளங்குகின்றது. நாட்டிலுள்ள அத்தனை பல்கலைக்கழகங்களின் மருத்துவ பீட மாணவர்களும் ஓரணியில் திரண்டு நிற்கின்றார்கள். அவர்களது ஆட்பலமும் அதிகம்.

நாட்டின் அத்தியாவசிய சேவைக்குரியவர்களாக விளங்குகின்ற அரசாங்க மருத்துவ அதிகாரிகளும் அரசாங்க பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாகவே நிற்கின்றார்கள். ‘சைற்றம்’ தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக அரசாங்க மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கும் தயாராகவே உள்ளனர். அரசியல்வாதிகளில் ஒரு பிரிவினரும் அரச பல்கலைக்கழக மாணவருக்கு சாதகமான நிலைப்பாட்டிலேயே உள்ளனர். எனவே பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இரு தரப்பிலும், அரசாங்க மருத்துவ பீட மாணவர்களே பலம் பொருந்தியவர்களாக விளங்குகின்றனர்.

‘சைற்றம்’ மாணவர்களைப் பொறுத்த வரை அவர்களது ஒரேயொரு பலம் மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு மட்டுமேயாகும். ‘சைற்றம்’ கல்லூரிக்குச் சாதகமான முறையில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கையில் வைத்துக் கொண்டுதான் அம்மாணவர்கள் இன்னமும் சளைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்க மட்டத்தில் உள்ள ஒருசில பிரபலங்கள் இம்மாணவர்களுக்கு ஆதரவாக உள்ளனரென்பது உண்மைதான். ஆனால் ஒட்டுமொத்த நாட்டையும் எடுத்துக் கொண்டால், ‘சைற்றம்’ கல்லூரிக்கான ஆதரவைப் பார்க்கிலும் எதிர்ப்பே அதிகமாகத் தெரிகின்றது.

‘சைற்றம்’ மருத்துவக் கல்லூரிக்குச் சாதகமான நீதிமன்றத் தீர்ப்பும், அம்மாணவர்கள் மீதான மக்கள் அனுதாபமும் ஒருபுறம் இருந்தாலும் கூட, அரசாங்க மருத்துவக் கல்லூரி மாணவர் தரப்புக்குச் சார்பாகவே புத்திஜீவிகள் மட்டத்தில் கருத்துகள் வெளிப்படுவதைக் காண முடிகின்றது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் தரம் தொடர்பாக உலகெங்கும் நிலவி வருகின்ற சந்தேகங்கள் இதற்குக் காரணமாக இருக்கக் கூடும். கல்விப் போட்டியின் மூலம் அரசாங்க மருத்துவக் கல்லூரிகளுக்குள் பிரவேசிக்க முடியாமல் போகின்ற மாணவர்கள், பணபலத்தின் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரியில் வைத்தியப் பட்டத்தைப் பெற்றுக் கொள்வதென்பதை எமது சமூகம் இன்னமும் ஏற்க மறுக்கின்றது. அதேசமயம் அரசாங்க மருத்துவக் கல்லூரிக்கான வாய்ப்பை ஒருசில புள்ளிகளால் தவற விடுகின்ற வறிய மாணவர்கள் தங்களிடம் பணம் இல்லாததன் காரணமாக ‘சைற்றம்’ கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற முடியாதிருக்கிறது. ஆகவே ஒட்டுமொத்தத்தில் மருத்துவப் பட்டத்தை பணபலமே தீர்மானிக்கின்றது என்பதுதான் பொதுமக்கள் கொண்டுள்ள அதிருப்திக்குக் காரணம்.

மறுபுறத்தில் அரச பல்கலைக்கழக மாணவர் தரப்பு மீதும், அவர்களுக்கு ஆதரவு வழங்குகின்ற அரசாங்க வைத்தியர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் இல்லாமலில்லை. இம்மாணவர்கள் வன்முறை வழியைக் கையாள்வதாக மக்கள் வெறுப்படைகின்றனர். அதேசமயம், அரசாங்க மருத்துவர்கள் தங்களது ஏகபோக மேலாதிக்கம் குறைந்து விடலாகாது என்பதற்காகவே தனியார் மருத்துவக் கல்லூரியை எதிர்ப்பதாக ஒரு சாரார் கருதுகின்றனர்.

இவ்வாறு எதிரும்புதிருமான கருத்துகள் மேலோங்கியுள்ளதனாலேயே ‘சைற்றம்’ மருத்துவக் கல்லூரி விவகாரமானது மிகுந்த பரபரப்புக்குள்ளாகிப் போயுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கியுள்ள போதிலும், அத்தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாமல் போயுள்ளமைக்கான காரணம், சைற்றம் கல்லூரி மீது பலமான எதிர்ப்பு நிலவுவதே ஆகும்.

மாணவர்களின் நேற்றைய ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்த போதிலும், நீதிமன்ற உத்தரவையும் மீறியே மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். எனவேதான் ஆர்ப்பாட்டத்தைத் தடுக்க பொலிஸார் கடுமையான வழிமுறைகளைப் பின்பற்றியதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க ‘சைற்றம்’ தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்துச் செய்யக் கோரி இலங்கை மருத்துவ சபை நேற்று உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

சைற்றம் தொடர்பான நிகழ்வுப் போக்குகளை அவதானிக்கின்ற போது, இவ்விவகாரத்துக்கு விரைவில் தீர்வு வருமென்று நினைக்கத் தோன்றவில்லை. ஏனெனில் சைற்றம் விவகாரத்தின் பின்னணியில் அரசியலும் உள்ளது தெரிகிறது. 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...