புதிய அரசியலமைப்பு பரிந்துரைகளில் நாடு பிரிக்கப்படும் அபாயம் | தினகரன்

புதிய அரசியலமைப்பு பரிந்துரைகளில் நாடு பிரிக்கப்படும் அபாயம்

புதிய அரசியலமைப்பில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தினால் சமஷ்டி முறையில் ஒன்பது பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்ட இலங்கையே எஞ்சும். உள்நாட்டு புரட்சிக்கு முகம் கொடுக்க முடியாத அரசாங்கமே இதனூடாக உருவாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாட்டையும் இனத்தையும் அழிக்கும் வகையில் அரசியலமைப்பு மற்றும் சட்ட திருத்தத்தை வரையும் முயற்சியை தோல்வி அடையச் செய்ய வேண்டுமெனவும் அவர் கூறினார். புதிய அரசியலமைப்பு தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கையின் அரசியலமைப்பையும் அரச கட்டமைப்பு, சட்ட அமைப்பையும் மாற்ற அரசு எடுக்கும் முயற்சி எதிர்காலத்தில் சபைக்கு வருவதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் முதல் உத்தியோக பூர்வமாகவும் ஊடகங்களின் மூலம் வெளியான தகவல்களில் அரசாங்கத்தின் நோக்கம் தெளிவாகியுள்ளது. அரசியலமைப்பு சபையின் ஆறு உப குழுக்களின் உத்தியோக பூர்வ அறிக்கை கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

 பிரதமரின் நல்லிணக்கம் மற்றும் குடியேற்ற நியாயம் தொடர்பான செயலணியின் அறிக்கை ஜனவரியில் வெளியானது GSP+ வரிச் சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்க ஐரோப்பிய சங்கம் விதித்த 55 நிபந்தனைகள், பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்குப் பதிலாக பிரதமர் பரிந்துரைத்துள்ள புதிய சட்ட வரைவும் ஊடகங்களினூடாக வெளியிடப்பட்டது.

புலிகள் அமைப்பின் மயானங்களை முன்னர் இருந்தவாறு மீண்டும் அமைத்தல் புலிகளின் மாவீரர் தினத்தை கொண்டாட தேவையானவர்களுக்கு அனுமதி வழங்கல், புலி உறுப்பினர்களின் உறவினர்களுக்கு புலி உறுப்பினர்களின் புகைப்படம், புலிகளின் சீருடையுடன் தங்களுடைய வீடுகளில் காட்சிப்படுத்த அனுமதி அளித்தல் என்பவை தொடர்பாக பிரதமரின் நல்லிணக்கம் தொடர்பான செயலணி பரிந்துரை செய்துள்ளது. ஆனால் பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டு உயிர் நீத்த வீரர்களை நினைவுகூரும் நிகழ்ச்சிகளோ, அல்லது அவர்கள் பெற்ற வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சிகளோ அவ் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வில்லை.

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாத புலி சந்தேக நபர்களை விடுதலை செய்ய வேண்டுமெனவும் குற்றம் செய்ததாக சந்தேகப்படும் அரச ஆயுதப் படை உறுப்பினர்களை கைதுசெய்ய வேண்டுமெனவும். பிரதமரின் நல்லிணக்கம் தொடர்பான செயலணி கூறுகின்றது. நல்லிணக்கத்தை ஏற்படுத்த இவை முக்கியமான காரணிகள் என அவர்கள் கூறுகின்றார்கள்.

2015 ஆம் ஆண்டு மனித உரிமைகள் ஆலோசனைப்படி யுத்த குற்றம் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் ஆனால் யுத்த நீதிமன்றத்துக்கு முன்வைக்க சாட்சிகள் இல்லாத இராணுவ வீர்ரகளை நிர்வாக நடவடிக்கை மூலம் சேவையிலிருந்து நீக்க வேண்டும்.

ஆனால் தீவிரவாதத்தை தடுக்கும் சட்டத்துக்கு பதிலாக பிரதமர் வழங்கியிருக்கும் சட்டத்தின்படி பயங்கரவாத சந்தேக நபருக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் இல்லையென்றால் மன்னிப்பு கேட்டல், தவறுக்கு வருத்தம் தெரிவித்தல், புனர்வாழ்வு பெறுதல், எதிர்காலத்தில் குற்றம் செய்ய மாட்டோமென உறுதியளித்தல், சமூக சேவையில் ஈடுபடல், போன்ற நிபந்தனைகளின் கீழ் சட்ட மா அதிபருக்கோ அல்லது உயர் நீதிமன்றத்துக்கோ அப் பயங்கரவாதிக்கு எதிராகவுள்ள சட்ட நடவடிக்கையை இடைநிறுத்த முடியும்.

இலங்கையை மத சார்பற்ற நாடாக மாற்றுவது தொடர்பான யோசனையை ஆராயுமாறு பிரதமரின் நல்லிணக்கம் தொடர்பான செயலணி பரிந்துரைத்துள்ளது. புத்த மதத்தின் முக்கியத்துவத்தை இல்லாது செய்ய மாட்டோம் எனக் கூறினாலும் இந்த முழு திட்டத்திலும் அதுவும் ஒரு பகுதியென்பது ஆவணங்கள் மூலம் தெரிகின்றது.

ஒன்றையாட்சி அரசாங்கத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக அரசியலமைப்பில் இணைந்த அதிகார பட்டியலை ஒழிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்போது மத்திய அரசாங்கத்துக்கோ மாகாண அமைப்புகளுக்கோ உட்படாத அனைத்து அதிகாரங்களையும் மாகாண அமைப்புகளுக்கு வழங்க வேண்டுமென மத்திய மற்றும் எல்லைகள் தொடர்பான உப கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. அது மாத்திரமல்ல மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களை மாகாண அமைப்பின் கீழ் நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது படிப்படியாக ஒற்றையாட்சி அரசாங்கத்தை அழிக்கும் நடவடிக்கையாக தெரிகின்றது.

உள்நாட்டு வெளிநாட்டு ஈழம் வாதிகள் சில வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து 2015 ஜனாதிபதி தேர்தலின் முடிவை சிதைத்தது நான்கு தசாப்தங்களாக பயங்கரவாதம் மூலம் பெற்றுக்கொள்ள முடியாததை அவர்களுக்கு வழங்க தயாராக உள்ள அரசாங்கத்தை அதிகாரத்துக்கு கொண்டு வருவதற்காகும். அரசாங்கத்திலுள்ள அனைத்து ஸ்ரீல சு கட்சி உறப்பினர்களுக்கும், ஐ. தே. க. உறுப்பினர்களுக்கும் நான் இங்கு குறிப்பிட்டுள்ள ஐந்து கடிதங்களையும் வாசிக்குமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

இவ்வாறான தேசத்துரோக நடவடிக்கையில் இணைந்து நாட்டையும், இனத்தையும் காட்டிக் கொடுப்பதா இல்லையா என கட்சி பேதத்தை மறந்து அனைத்து உறுப்பினர்களும் தனித் தனியாக எடுக்க வேண்டிய முடிவாகும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் நல்லாட்சியாளர்கள் நாட்டுக்கு அளித்த அரசியலமைப்பு வாக்குறுதி நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழித்தல், தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரல் என்னும் இரண்டு விடயங்களாகும். 


Add new comment

Or log in with...