Home » காத்தான்குடியில் நகை உருக்கும் பட்டறையால் சுகாதார சீர்கேடு பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

காத்தான்குடியில் நகை உருக்கும் பட்டறையால் சுகாதார சீர்கேடு பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

by sachintha
October 3, 2023 1:05 am 0 comment

காத்தான்குடி ஆறாம் குறிச்சி அப்துல் லத்தீப் சின்னலெவ்வை மாவத்தையிலுள்ள நகை உருக்கும் பட்டறையினால் அப்பகுதி மக்கள் பல்வேறு சுகாதார அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் அதனை உடனடியாக நிறுத்துமாறு கோரியும் நேற்று காத்தான்குடி நகரசபை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்கள் கைக்குழந்தைகளுடன் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை காணக்கூடியதாகவிருந்தது.

இப்பகுதியில் நகை உருக்கும் நடவடிக்கையில் வர்த்தகர் ஒருவர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் அதன்மூலம் வெளியாகும் இரசாயனக் கழிவுகள் பெரும் சூழலியல் பிரச்சினைகளை ஏற்படுத்திவருவதாக பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிவருவதுடன் பாரிய அசௌகரியங்களுக்கும் முகம்கொடுத்துவருவதாக தெரிவிக்கின்றனர். இதனையடுத்து காத்தான்குடி நகரசபை செயலாளர் திருமதி றிப்கா ஸபீன் தலைமையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இதன்போது பொதுமக்களின் கோரிக்கைகளை அவர் கேட்டறிந்ததுடன் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி நிப்கா ஸபீன் இதுதொடர்பில் தெரிவிக்கையில், நகை உருக்கும் தொழிற்சாலைக்கு காத்தான்குடி நகரசபை அனுமதி வழங்கவில்லையெனவும் உடனடியாக சுற்றுச்சூழல் அதிகார சபை, உள்ளூராட்சித் திணைக்களம், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோருக்கு இதுதொடர்பில் அறிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT