கூட்டமைப்புடன் எமக்கு உடன்பாடில்லை: சிவசக்தி ஆனந்தன் | தினகரன்

கூட்டமைப்புடன் எமக்கு உடன்பாடில்லை: சிவசக்தி ஆனந்தன்

 
கூட்டமைப்பின் முடிவில் எமக்கு உடன்பாடில்லை. இக் கூட்டம் கண்துடைப்பே என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் (EPRLF) செயலாளருமான நடேசு சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
 
வவுனியாவில் இன்று (11) இடம்பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
 
இன்றைய தினம் வடக்கு கிழக்கை சேர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஒன்று கூடி ஐ.நா மனித உரிமை பேரவையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விடயம் தொடர்பாக ஆராய்ந்தோம்.
 
இவ் மனித உரிமை பேரவையிலே நடைபெறுகின்ற தீர்மானம் தொடர்பாக கால அவகாசம் வழங்குவதா இல்லையா என்பது பற்றி நீண்ட நேரம் பேசப்பட்டது. இங்கு கருத்து தெரிவித்த பெரும்பாலான பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்ற கருத்தை தெரிவித்திருந்தனர்.
 
இதற்கான காரணம் 2015ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட 18 மாத கால அவகாசத்திற்குள்ளேயே எந்தவித முடிவுகளையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தாத காரணத்தினால் ஆகும். எனினும் கடும் நிபந்தனையின் அடிப்படையிலேயே இந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது. எங்களது கட்சிக்கு இதில் உடன்பாடில்லை. நாங்கள் ஏற்கனவே ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என  கையொப்பமிட்டு கடிதம் ஒன்றை வழங்கியிருக்கின்றோம். நாங்கள் அவ்வாறு வழங்கி விட்டு கடும் நிபந்தனை அடிப்படையில் கால அவகாசத்தை வழங்குவது என்பது முரண்பட்ட கருத்தாகும்.
 
இரண்டாவதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளருடைய உத்தியோக பூர்வமாக அறிக்கை 22ம் திகதி தான் வெளிவர இருக்கின்றது. வெளிவந்த பின்னர் அதில் என்ன விடயங்கள் உள்ளடங்கிள்ளது என்று நாங்கள் கூடி ஆரய வேண்டிய தேவையுள்ளது. அந்த அறிக்கை வந்த பின்னர் எமது முடிவை தெரிவிக்கலாம். இதற்கப்பால் எங்களுடை கட்சியின் தலைவர் இக்கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை. தலைவர் அழைக்கப்படாமையால் எமது கட்சியின் தலைவரோடும், மத்திய குழுவோடும் கூடி பேச வேன்டியிருக்கின்றது.
 
ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களால் சில  நாடுகளுக்கு கால அவகாசம் வழங்கப்படலாம் என்ற செய்தி சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு கால அவகாசம் வழங்கலாம் என்ற செய்தி சொல்லப்பட்ட பின் இக் கூட்டம் கூடுவது ஒரு கண் துடைப்பாகவே உள்ளது.
 
நாங்கள், வடக்கு கிழக்கின் சிவில் அமைப்புக்கள், தமிழ் மக்கள் பேரவை, மத தலைவர்கள் பலர் உட்பட இலங்கை அரசுக்கு கால அவகாசத்தை வழங்கக்கூடாது என தெட்டத்தெளிவாக கூறி இருக்கின்றோம். ஆகவே முன்னுக்கு பின் முரணாக முரண்பட்ட ரீதியில் நாங்கள் நடக்க முடியாது. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல சில இராஜதந்திர நாடுகளிற்கு கூட்டமைப்பில் உள்ள ஒரு சிலர் கால அவகாசத்தை வழங்கியிருக்கிறார்கள் என்ற மறக்க முடியாத செய்தியும் அதில் உள்ளடங்கியுள்ளது. இது தொடர்பாக எமது கட்சி கூடி ஆராய்ந்து முடிவெடுத்து அறிவிக்கும் என தெரிவித்தார்.
 
இவ் ஊடக சந்திப்பில் அக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாணசபை உறுப்பினர்களான துரைரட்ணசிங்கம், தியாகராசா, இந்திரராசா, ரவிகரன் ஆகியோரும் உடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தபுரன்)
 
 

Add new comment

Or log in with...