பெண்கள் மத்திய கிழக்கின் கொத்தடிமைகளா? | தினகரன்

பெண்கள் மத்திய கிழக்கின் கொத்தடிமைகளா?

துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கொலந்தொட்ட மகளிர்தின நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்த சில கருத்துக்கள் எம்மைச் சிந்திக்க வைப்பதாக அமைந்துள்ளது. ஒரு நாடு உண்மையான அபிவிருத்தியடைய வேண்டுமானால் அந்த நாட்டில் வாழும் மக்களது குடும்ப உறவுகளை மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தி இருக்கின்றார்.

குடும்பத்தை சக்தி மிக்கதாக மாற்றியமைக்கக் கூடிய பிரதான தூண்டுகோள் பெண்களே எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். பெண்கள் குறித்த புரிதல்களை நாம் ஒவ்வொரு வருடமும் மகளிர் தினத்தில் மட்டுமே பேசி வருகின்றோம். இந்த நிலை மாற்றப்பட வேண்டியதன் அவசியத்தையே அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் உரை உணர்த்தி நிற்கின்றது.

வெளிநாட்டு வேலைவய்ப்புகளுக்காக பெண்களை அனுப்பி அடிமைகளாகப் பணிபுரிந்து ஈட்டுகின்ற வருமானமே எமது நாட்டுக்கு அதிகூடிய வருமானமென நாம் கூற முற்படுவதை வெட்கம் கெட்ட செயலென சாடியிருக்கும் அமைச்சர் எமது சகோதரிகளை விற்பனை செய்வதற்குச் சமானமாக வர்ணித்திருக்கிறார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு பெண்கள் அனுப்பப்படுவதை முற்றாகத் தடைசெய்யப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டை தான் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். உண்மையிலேயே அவரது நிலைப்பாட்டை வரவேற்றாக வேண்டும்

குடும்பத்தில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில் ஒரு குடும்பத்தை சீராக வழிடத்தக்கூடிய வல்லமை பெண்களது கரங்களிலேயே தங்கியுள்ளது. ஒரு ஒழுக்கமுள்ள குடும்பத்தை கட்டியெழுப்பும் பலமும், சிந்தனையும் அவர்களிலேயே தங்கி உள்ளது.

அமைச்சரது கூற்று பெண்கள் வேலை செய்யக்கூடாது என்பதல்ல. அவர்கள் கௌரவமாக நடத்தப்பட வேண்டுமென்பதேயாகும். பெண்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களுக்கு ஆண்களுக்கு நிகராக கல்வியறிவு ஊட்டப்பட்டு நாட்டைக் கட்டியெழுப்புவதில் அவர்களது பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். அல்லாது அவர்களை அடுப்பூதுபவர்களாக மூலைக்குள் தள்ளி வைக்க வேண்டுமெனக் கொள்ள வில்லை.

சர்வதேச மகளிர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டதே அவர்கள் மேன்மையுற வேண்டுமென்பதற்கே ஆகும். ஆரம்பத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு ஆண்களே அனுப்பப்பட்டனர். மத்திய கிழக்கு நாடுகள் அவர்களது வீட்டு வேலைகளுக்காக பணிப்பெண்களை அமர்த்திக்கொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்தியதும் பங்களாதேஷ், பாகிஸ்தான். இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் வறுமைக் கோட்டிலுள்ள குடும்பங்கள் தமது பெண்களை பணிப்பெண்களாக அனுப்பத் தொடங்கினர். இதுகாலப் போக்கில் அடிமைத் தொழில் போன்றதொரு நிலையை தோற்றுவித்தது. அதன் பின்விளைவாக நமது நாட்டு மக்கள் எதி்ர்கொண்ட பின்விளைவுகள் சொல்லும் தரமற்றதாகவே காணப்பட்டது.

ஆண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்ல வேண்டுமானால் பல இலட்சங்களாக பணம் செலுத்த வேண்டிய நிலை இன்று உருவாகியுள்ளது. ஆனால் பெண்களை பணிப்பெண்களாக அனுப்பும் போது அந்தப் பெண்களின் குடும்பத்துக்கு முற்பணமாக ஐம்பதாயிரம், ஒரு இலட்சம் என்ற வகையில் பணம் பெற்றுக் கொடுக்கப்படுகிறது. முகவர்களும் இதன் மூலம் பெருந்தொகைப் பணத்தை ஈட்டிக்கொள்கின்றனர். மறைமுகமான கொத்தடிமை வியாபாரம் நடந்து கொண்டிருப்பதை இதன் மூலம் அவதானிக்க முடிகிறது.

ஒரு நாடு முன்னோக்கிச் செல்வதற்கு பணம் அவசியம்தான். அதற்காக எமது நாட்டு பெண்களை விற்றுத்தான் பணம் தேட வேண்டுமென்றால் அவ்வாறான பணம் எமக்குத் தேவையே இல்லை. எமது பெண் குலத்தை அடிமைகளாக விற்பதற்கு நாம் எந்த விதத்திலும் துணைபோக முடியாது. நாம் பெண்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள வேண்டும். விஷேடமாக உலகப் பொருளாதாரத்துடன் நாம் இசைவாக்கமடைய வேண்டும்.

அண்மைக்காலமாக நாம் எமது நாட்டின் கலாசார விழுமியங்களை மறந்து அல்லது புறக்கணித்தே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஒழுக்கவிழுமியங்களும் கலாசார பண்பாடுகளும் மங்கி மறைந்து மேற்குலகின் கலாசாரங்களை உள்வாங்கியுள்ள நிலையே இன்று காணப்படுகின்றது. எமது மக்கள் மத்தியில் வெளிநாட்டு மோகம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் எமது எதிர்காலச் சந்ததிகள் குறித்து நாம் பெரும் அச்சமடைய வேண்டிய நிலைமை தோன்றியுள்ளது. வெளிநாட்டின், குறிப்பாக மேற்குலக கலாசார மோகம் எமது பெண்களையே பெரிதும் ஈர்த்துள்ளது. இதுவொரு ஆபத்தான சமிக்​ை ஞயாகவே நோக்க வேண்டியுள்ளது.

எமது பெண்களை எமது நாட்டின் கலாசார பண்பாடுகளுக்கமைய நாட்டின் முன்னேற்றத்துக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஒத்திசைவான தொழில்வாய்ப்புகளை அதிகரித்து பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். இந்த இடத்தில் அவர்களது பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டிய அவசியமும் காணப்படுகிறது. அரச, தனியார் நிறுவனங்களில் பெண்கள் நியமிக்கப்படும் போது அவர்களை எக்காரணம் கொண்டும் இரவு நேர வேலைக்கு அமர்த்தப்படக்கூடாது. பெண்களை மாலை 4 மணி வரை மட்டுமே வேலைக்கமர்த்தப்படக்கூடிய விதத்தில் ஒழுங்கு விதிகள் அறிவிக்கப்பட வேண்டும்.

உள்நாட்டில் தனியார் துறை நிறுவனங்களில் பெரும்பாலானவற்றில் பெண்கள் இரவு 9, 10 மணி வரை வேலைக்கமர்த்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து அதிகார மட்டத்தில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கான கதவு மூடப்பட்டு, பெண்களை உயர்வான இடத்தில் வைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் எமது நாட்டின் கௌரவமும், உயர்வும் பாதுகாக்கப்பட முடியும். மத்திய கிழக்கினதோ, மேற்குலகினதோ கைப்பொம்மைகளாகச் செயற்பட்டு எமது பெண்களை அடிமைகளாக விற்கப்படுவதை தடுப்பதற்கு அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுடன் இணைந்து கரம் கோர்க்க நாம் முன்வரவேண்டும்.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...