தினேஷ் குணவர்தனவிற்கு ஒரு வார தடை (UPDATE) | தினகரன்

தினேஷ் குணவர்தனவிற்கு ஒரு வார தடை (UPDATE)


(ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்)

ஒன்றிணைந்த எதிரணி தலைவரும் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தனவுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு ஒரு வார காலம் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பு 63 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 

சபாநாயகரின் உத்தரவையும் மீறி தொடர்ச்சியாக சபை நடவடிக்கைகளை குழப்பும் வகையில் நடந்துகொண்ட தினேஷ் குணவர்த்தன எம்பியை சபையிலிருந்தது வெ ளியேற சபாநாயகர் உத்தரவிட்டார். இதற்கு அடிபணியாது தொடர்ந்தும் சபையில் தரித்து நின்ற அவரை பொலிஸாரின் உதவியுடன் வெளியேற்ற சபாநாயகர் பணித்தும் அவரை வெ ளியேற்ற ஒன்றிணைந்த எதிரணி எம்பிக்கள் இடமளிக்கவில்லை. இந்த நிலையில் அவரை சபை நடவடிக்கைகளில் இருந்து ஒரு வாரத்துக்கு நிறுத்துவதற்கு சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல பிரேரணை முன்வைத்ததோடு பிரேரணை மீது வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 85 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் வழங்கப்பட்டதோடு 114 எம்பிக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ஜே.வி.பியின் எம்பிக்கள் சபையில் இருந்தபோதும் வாக்களிப்பதிலிருந்து தவிர்த்துக் கொண்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும், ஆளும் தர்பிபலுள்ள ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர்களும் தினேஷ் குணவர்த்தன எம்பியை வெளியேற்றும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பிரேரணை நிறைவேற்றப்பட்டதையடுத்து தினேஷ் குணவர்த்தன எம்பி சபையிலிருந்து வெளியேறியதோடு ஒன்றிணைந்த எதிரணி எம்பிகளும் அதனோடு சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். சுமார் 30 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக எம்பி ஒருவரை வெ ளியேற்ற பொலிஸார் சபைக்கு அழைத்துவரப்பட்டதோடு 2011ஆம் ஆண்டு இறுதியாக எம்பி ஒருவர் சபையிலிருந்து வெ ளியேற்றப்பட்டார்.

சபையில் இடம்பெற்ற சர்ச்சை 

பாராளுமன்றம் நேற்று பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. விமல் வீரவன்ச எம்பி சுயாதீனமாக செயற்பட அனுமதிக்கக் கோரும் விவகாரம் குறித்த சபாநாயகர் தனது தீர்ப்பை அறிவித்தார். விமல் வீரவன்ச அடங்கலான குழுவை தனியான குழுவாக அங்கீகரிக்க முடியாது என சபாநாயகர் தனது முடிவில் அறிவித்ததையடுத்து, இதற்கு எதிராக தினேஷ் குணவர்த்தன, விமல்வீரவன்ச ஆகியோர் சபையில் கருத்துக் கூற முற்பட்டனர். இதற்கு சபாநாயகர் இடமளிக்காததால் ஒன்றிணைந்த எதிரணி எம்பிக்கள் கோஷம் எழுப்பி எதிர்ப்பு வெளியிட்டனர். இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்த விமல் வீரவன்ச எம்பி தாம் சபாநாயகரின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தவில்லை எனவும், தங்கள் தரப்பு கருத்தை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரினார். ஐ.ம.சு.முவின் கூட்டணிக் கட்சியாகப் போட்டியிட்ட ஜே.வி.பிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது எனவும் குறிப்பிட்டார். அடுத்து ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்த தினேஷ் குணவர்த்தன எம்பி, தாம் ஜெனீவாவுக்குச் சென்று அரசாங்கத்துக்கு எதிராக முறையிடப்போவதில்லை எனவும், விமல் வீரவன்சவின் குழுவினரை சுயாதீனமாக செயற்பட முடியும் எனப் பிரதமர் கூறியிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

அடுத்து கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, விமல் வீரவன்ச அடங்கலான எம்பிக்களை விசேட குழுவாக கருத முடியாது. இது தொடர்பில் சபாநாயகர் வழங்கிய தீர்ப்பை எவருக்கும் சவாலுக்கு உட்படுத்த முடியாது என்றார். 

இதனையடுத்து சபையில் ஆளும் தரப்புக்கும் மஹிந்த அணியில் உள்ள எம்பிக்களுக்கும் இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் இடம்பெற்றது. இந்த சர்ச்சை இடம்பெற்றபோது மஹிந்த ஆதரவு அணியில் ஆறு உறுப்பினர்கள் மாத்திரமே சபையில் பிரசன்னமாகியிருந்தனர். தங்களுக்கு கருத்துக் கூற இடமளிக்குமாறு கோரி தினேஷ் குணவர்த்தன எம்பியும், விமல் வீரவன்ச எம்பியும் சபாநாயகருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்ற உறுப்பினர்களாக கௌவரமாக நடந்துகொள்ளுமாறும் அச்சுறுத்தலுக்கு அஞ்சி தனது தீர்ப்பை மாற்றப் போவதில்லையெனவும் சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார். 

சபை நடுவில் போராட்டம்.

சபாநாயகர் தமது தரப்புக்கு பேச இடமளிக்காத நிலையில் ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும் தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச மற்றும் பத்ம உதயசாந்த ஆகிய எம்பிக்கள் சபை நடுவுக்குவந்து சபாநாயகருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இந்த சமயம் ஒன்றிணைந்த எதிரணியில் உள்ள சு.க எம்பிக்கள் மூவர் சபையில் பிரசன்னமாகியிருந்தபோதும் அவர்கள் இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றிருக்கவில்லை. ஆளும் தரப்பிலுள்ள ஐ.தே.க எம்பிக்கள் சிலரும் சபையின் நடுப்பகுதிக்கு வர முற்பட்டதால் பதற்றநிலை உருவாகியது. இதனையடுத்து சபாநாயகர் பாராளுமன்றத்தை 10 நிமிடங்கள் ஒத்திவைத்தார். 

சபை ஒத்திவைப்பு

பிற்பகல் 1.23 மணிக்கு ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றம் மீண்டும் 1.50 மணிளவில் கூடியது. பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு எம்பிக்களை கோரிய சபாநாயகர், தொடர்ந்து இடையூறு விளைவித்தால் நிலையியற் கட்டளையின் பிரகாரம் செயற்பட நேரிடும் என எச்சரித்தார். இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்த விமல் வீரவன்ச எம்பி, சபாநாயகரின் தீர்ப்புத் தொடர்பில் பிறிதொரு தினத்திலாவது கருத்துக்களை முன்வைக்க அவகாசம் தருமாறு கோரினார். இவ்வாரத்தில் அதற்கான சந்தர்ப்பம் வழங்குவதாக சபாநாயகர் அறிவித்தபோதும், அதனை ஏற்காமல் தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச ஆகியோர் சபாநாயகருடன் தர்க்கத்தில் ஈடுபட்டார்கள். தனக்கு எத்தகைய அச்சுறுத்தல் விடுத்தபோதும் தனது தீர்ப்பை மாற்றப்போவதில்லை என்று குறிப்பிட்ட சபாநாயகர், ஆரம்பம் முதலே தினேஷ் குணவர்த்தன எம்பி அவமதிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக தெரிவித்தார். 

நீங்கள் சபாநாயகரை அன்றி பாராளுமன்றத்தையே அவமதிக்கிறீர்கள். சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்த்தன மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும். கீழ்த்தரமான அவமதிக்கும் வகையிலான வார்த்தைப் பிரயோகங்களை தொடர்ந்து பயன்படுத்தினீர்கள் என்று குறிப்பிட்ட சபாநாயகர் தொடர்ந்தும் இவ்வாறு நடந்துகொண்டால் நிலையியற் கட்டளையின் 74/1 பிரிவின் கீழ் சபையிலிருந்து வெ ளியேற்ற நேரிடும் என்றார். இதன்போது ஒழுங்குப்பிரச்சினையொன்றை முன்வைத்த ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புகாமி, சிறையிலிருந்து வந்தவர்கள் சபையின் நேரத்தை வீணடிக்கிறார்கள். எனவே இவர்களை பெயர் குறிப்பிட் வெளியேற்றவேண்டும் என்றார். 

சபாநாயகரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் மஹிந்த ஆதரவு அணியினர் எழுந்துநின்று தொடர்ந்து சர்ச்சையில் ஈடுபட்டனர். இதனையடுத்து இன்றைய (08) பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க தினேஷ் குணவர்த்தனவுக்கு தடைவிதிப்பதாக அறிவித்த சபாநாயகர் அவரை சபையிலிருந்து வெ ளியேற்றுமாறு படைக்கல சேவிதர்களுக்கு உத்தரவிட்டார். மீண்டும் பிற்பகல் 2.05 மணியளவில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. சபாநாயகரின் உத்தரவுக்கு அமைய படைக்கல சேவிதர்கள் தினேஷ் குணவர்த்தன எம்பியை சபையிலிருந்து வெ ளியேற்ற முற்பட்டபோதும் ஒன்றிணைந்த எதிரணி எம்பிக்கள் அவரைச் சுற்றியிருந்து அதற்கு தடையாக இருந்தனர். 

இந்த நிலையில் சபை மீண்டும் 2.25 மணிக்கு கூடியது. இதன்போது கருத்து வெ ளியிட்ட சபாநாயகர் சபை கூடியது முதலே தினேஷ் குணவர்த்தன மற்றும் வீரவன்ச எம்பிக்கள் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறாக நடந்துகொண்டார்கள். விமல் வீரவன்ச எம்பிக்கு வேறொரு தினத்தில் கருத்துக் கூற சந்தர்ப்பம் தருவதாக கூறியிருக்கின்றேன். கவலையுடனேயே தினேஷ் குணவர்த்தன எம்பியை சபையிலிருந்து வெ ளியேற்றும் முடிவை எடுத்தேன். சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரான அவர் இவ்வாறு நடந்துகொள்வார் என ஒருபோதும் நினைக்கவில்லை என்றார். தினேஷ் குணவர்த்தன எம்பி அவையிலிருந்து வெ ளியேற தயாரா எனவும் வினவினார். இதன்போது ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்த பந்துல குணவர்த்தன எம்பி, ஒன்றிணைந்த எதிரணியில் உள்ள 51 எம்பிக்கள் சார்பிலேயே தினேஷ் குணவர்த்தன எம்பி கருத்து முன்வைத்தார். அவரை வெ ளியேற்ற இடமளிக்க முடியாது என்றார். அடுத்து கருத்து வெ ளியிட்ட தினேஷ் குணவர்த்தன எம்பி இவ்வாறான பிரச்சினைகள் எழும்போது கட்சித் தலைவர்களைக் கூட்டி ஆராய்ந்திருக்க வேண்டும் என்றார். 

பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க இடமளிப்பீர்களா என்று வினவிய சபாநாயகர், மக்களின் பணத்தையும் நேரத்தையும் வீணடிக்காதீர்கள் என மஹிந்த ஆதரவு அணியினரிடம் கோரிக்கைவிடுத்தார். சபாநாயகரின் வேண்டுகோள்படி தினேஷ் குணவர்த்தன சபையிலிருந்து வெளியேறாத நிலையில் பொலிஸாரின் உதவியுடன் அவரை வெ ளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு படைக்கல சேவிதர்களுக்கு பணித்த சபாநாயகர், பிற்பகல் 2.45 மணியளவில் தற்காலிகமாக ஒத்திவைத்தார். 

சபையில் பொலிஸார்

சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 20 பொலிஸார் படைக்கல சேவிதர்களால் சபைக்கு அழைத்துவரப்பட்டனர். இவர்கள் தினேஷ் குணவர்த்தன எம்பியின் ஆசனத்துக்கு அருகில் சுற்றி நின்றிருந்தபோதும் மஹிந்த ஆதரவு அணியினர் தினேஷ் குணவர்த்தன எம்பியை சுற்றி பாதுகாப்பாக நின்றிருந்தனர். சுமார் 17 ஒன்றிணைந்த எதிரணி எம்பிக்கள் அவரை வெ ளியேற்றவிடாமல் தடுத்திருந்தனர். தினேஷ் குணவர்த்தன எம்பியுடன் படைக்கல சேவிதர்களும் ஆளும் தரப்பு சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சிலரும் சமரச பேச்சில் ஈடுபட்டிருந்தபோதும் அவர் வெ ளியேறாமல் தனது ஆசனத்திலேயே அமர்ந்திருந்தார். பொலிஸாரைக் கொண்டும் அவரை வெளியேற்ற முடியாத நிலையில் பாராளுமன்றம் மீண்டும் 3.15 மணியளவில் கூடியது. 

வாக்கெடுப்பு 

தினேஷ் குணவர்த்தன எம்பியை வெ ளியேற்றுவது தொடர்பில் சபையில் பிரேரணையொன்றை கொண்டவரப்படவிருப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதனையடுத்து ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், சபாநாயகரின் உத்தரவு சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படாமை சபையின் கௌரவத்தை பெரிதும் பாதித்துள்ளது எனக் கூறினார். இதனையடுத்து தினேஷ் குணவர்த்தன எம்பியை ஒரு வாரத்துக்கு சபை நடவடிக்கைகளில் பங்கேற்க தடைவிதிக்கும் பிரேரணையை சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியல்ல முன்வைத்தார். பெயர் குறிப்பிட்ட வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என விமல் வீரவன்ச எம்பி கோரியதையடுத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

இப்பிரேரணைக்கு ஆதரவாக ஆளும் தரப்பிலுள்ள ஐ.தே.க, ஐ.ம.சு.மு உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்பிக்களும் வாக்களித்திருந்தனர். வாக்கெடுப்பின் போது ஜே.வி.பி எம்பிக்கள் மூவர் சபையில் இருந்தபோதும் அவர்கள் வாக்களிப்பதிலிருந்து தவிர்த்துக் கொண்டனர். 114 எம்பிகள் சபைக்கு வருகைதந்திருக்கவில்லை. இந்நிலையில் பிரேரணைக்கு ஆதரவாக 85 வாக்களும் எதிராக 22 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய தினேஷ் குணவர்த்தன எம்பி ஒரு வார காலத்துக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கெடுப்பதற்கு தடைவிதிப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதனையடுத்து பிற்பகல் 3.50 மணியளவில் தினேஷ் குணவர்த்தன சபையிலிருந்து வெ ளியேறினார். அவரோடு ஒன்றிணைந்த எதிரணி எம்பிக்களும் சபை நடவடிக்கைகளை பகிஷ்கரித்து சபையிலிருந்து வெ ளியேறினர். இந்த நிலையில் சபையில் கருத்து வெ ளியிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, விமல் வீரவன்ச சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர் அல்ல. அவர் ஐ.ம.சு.மு உறுப்பினராகும். அவரை சுயாதீன எம்பியாக ஏற்கக் கூடாது என்றார்.  சபையிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, பிரதமரின் கருத்தை கேட்டுவிட்டு பாதியில் திரும்பிவந்தார். பிரதமருக்கு பதில் வழங்க அவர் முற்பட்டபோதும் சபாநாயகர் அவருக்கு பேச இடமளிக்கவில்லை. நீங்கள் வெ ளியேறி சென்ற நிலையில் உங்களுக்கு பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர் சபையிலிருந்து வெளியேற்றும் பிரேரணையில் இன்னொருவரின் பெயரையும் சேர்ப்பதானால் நாம் அதற்கு ஆதரவளிக்கத் தயார் என்றார். இதன்போது சபையில் சிரிப்பொலி எழுந்தது. 


 
பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, பாராளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு, ஒரு வார கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
பாராளுமன்ற விதிமுறைகளை மீறி சபையில் கூச்சல் குழப்பம் விளைவித்தமை மற்றும் அவை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்துகொண்டமை தொடர்பில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த, ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சபைக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
அவைத் தலைவர் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்லவினால் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டது.
 
இந்த யோசனையை, வாக்கெடுப்பு மூலம் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்ததையடுத்து, மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில்
 
யோசனை 63 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
குறித்த யோசனைக்கு ஆதரவாக 85 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் வழங்கப்பட்டன.
 
விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணி, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதற்கு கோரிய யோசனையை சபாநாயகர் மறுத்ததை அடுத்து ஏற்பட்ட சலசலப்பின் போதே முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்ற விதிமுறைகளை மீறி நடந்துகொண்டார். இதனை அடுத்து, தினேஷ் குணவர்தனவை சபையில் இருந்து அகற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டதோடு, அவையை 10 நிமிடத்திற்கு ஒத்திவைத்தார்.
 
இவ்வாறு சபை நடவடிக்கைகள் 3 முறை ஒத்திவைக்கப்பட்டதோடு, தினேஷ் குணவர்தனவை சபையிலிருந்து வெளியேற்றுமாறு பாராளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு, அவசியம் ஏற்படுமிடத்தில், பொலிசாரின் உதவியைப் பெறுமாறும் தெரிவித்தார். 
 
ஆயினும் தினேஷ் குணவர்தன அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.
 
இதனையடுத்தே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை, குறித்த வாக்கெடுப்பின்போது, 114 பேர், சபையில் இருக்கவில்லை என்பதோடு, வாக்கெடுப்பில் மூவர் பங்கெடுக்கவில்லை.
 
குறித்த வாக்கெடுப்பு நடவடிக்கையின்போது, தினேஷ் குணவர்தன எம்.பி. அவையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 

Add new comment

Or log in with...