1 1/2 மணி நேரம் விமல் வாதம்; பிணை மறுப்பு | தினகரன்

1 1/2 மணி நேரம் விமல் வாதம்; பிணை மறுப்பு

 
தான் அமைச்சராக இருந்த வேளையில், அரசாங்கத்திற்கு சொந்தமான 40 வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் பொதுச் சொத்து தொடர்பான சட்டத்திற்கமைய கைதான விமல் வீரவங்சவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இது தொடர்பான வழக்கு இன்று (06) கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது, இதன்போது, அவர் தனக்காக வழக்கறிஞர் எவரையும் பயன்படுத்தவில்லை என்பதோடு, திறந்த நீதிமன்றில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் வரை தான் சார்ந்த தனது விளக்கத்தை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 
பொதுச் சொத்து தொடர்பான சட்டத்திற்கு முரணாக, பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினர் தன்னை கைது செய்துள்ளதாக விமல் வீரவங்ச இதன்போது சுட்டிக்காட்டினார்.
 
கடந்த ஜனவரி 10 ஆம் திகதி கைது செய்யப்பட்ட தான், இது வரை 54 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியதோடு, இது குறித்து பொலிஸ் நிதி மோசடி பிரிவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.
 
அதுபோன்று தனக்கு முன்னர், வீடமைப்பு மற்றும் அரச பொறியியல் துறை அமைச்சராக ராஜித சேனாரத்ன இருந்ததாகவும், அவர் தனது அமைச்சரவை பணிக்காக வழங்கப்பட்ட வாகனங்களை வழங்கியதை முன்னுதாரணமாகக் கொண்டே தானும் தனது ஊழியர்களுக்கு வாகனங்களை வழங்கியதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.
 
அவரது கருத்துகளை உள்வாங்கிய நீதிபதி, அவருக்கு பிணை நீடிக்கப்பட்ட திகதியான எதிர்வரும் 20 ஆம் திகதி அவருக்கு பிணை வழங்குவதா என்பது தொடர்பில் ஆராயப்படும் என தெரிவித்தார்.
 
கைது செய்யப்பட்டுள்ள விமல் வீரவங்ச, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதிலும், பாராளுமன்ற அமர்வுகள் மற்றும் கட்சித் தலைவர்கள் தொடர்பான பாராளுமன்ற கூட்டங்களிலும் கலந்துகொள்வதற்கு, நீதிமன்றம் ஏற்கனவே அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

Add new comment

Or log in with...