சைட்டம் CEO மீதான துப்பாக்கிச்சூடு ஒரு நாடகம் | தினகரன்


சைட்டம் CEO மீதான துப்பாக்கிச்சூடு ஒரு நாடகம்

 
சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் சமீர சேனாரத்ன மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம், ஒரு நாடகம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
இது தொடர்பில் நேற்று (27) இரவு கைதான சந்தேகநபரை விசாரணை செய்ததை அடுத்து குறித்த விடயம் அம்பலமாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக காண்பிப்பதற்காகவே குறித்த சம்பத்தை திட்டமிட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
 
கடந்த பெப்ரவரி 06 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், மாலபே SAITM தனியார் பல்கலைக்கழகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சமீர சேனாரத்னவின் காரின் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டிருந்ததோடு, அதில் தான் மயிரிழையில் உயிர் தப்பியதாக அவர் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் நேற்று (27) எம்பிலிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபர் கைதுசெய்யப்பட்டதோடு, அவரிடமிருந்து 9 மி.மீ. வகையான கைத்துப்பாக்கி மற்றும் அதற்கான 2 ரவைகள், 3.8 வகை ரிவோல்வர் மற்றும் அதற்கான 3 ரவைகள், அத்துடன் குறித்த குற்றத்தை மேற்கொள்ளவதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
 
இதேவேளை, குறித்த சம்பவத்தை திட்டமிட்டதாக தெரிவிக்கப்படும், பிரதேசசபை உறுப்பினர் மற்றும் மாகாண சபையில் கடமைபுரியும் சாரதி ஒருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளபோதிலும், குறித்த இருவரும் தாம் வசிக்கும் பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
குறித்த பிரதேசசபை உறுப்பினர், வைத்தியர் சமீர சேனாரத்னவுடன் மிக நெருங்கிய தொடர்புடையவர் எனவும் இவ்விருவருக்கிடையேயும் நெருங்கிய தொடர்புகள் காணப்பட்டமை தொடர்பில் உறுதியான தகவல்கள் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
இதேவேளை குறித்த விடயம் தொடர்பில், வைத்தியசர் சமீர சேனாரத்னவை, விசேட பொலிஸ் குழுவினரால் நேற்றைய தினம் (27) மிக நீண்ட விசாரணைக்கு உட்படுத்தி அவரிடம் வாக்குமூலமொன்றை பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
குறித்த சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை, கொழும்பு திட்டமிட்ட குற்ற விசாரணை பிரிவு மற்றும் நுகேகொட விசேட குற்ற விசாரணை பிரிவு ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.
 
 

Add new comment

Or log in with...