பாதாள உலகக் கும்பல்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! | தினகரன்

பாதாள உலகக் கும்பல்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

 

சினிமாவில் வருகின்ற திகில் காட்சியைப் போன்று களுத்துறையில் நேற்றுக் காலை நடந்து முடிந்திருக்கின்றது அச்சம்பவம்!

களுத்துறை சிறைச்சாலையில் இருந்து விளக்கமறியல் கைதிகளை கொழும்பு நீதிமன்றத்துக்கு அழைத்து வருகின்ற வேளையில், வீதியின் அருகில் மறைந்து நின்ற ஆயுதபாணிகள் அவ்வாகனத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கி வேட்டுகளைத் தீர்த்துள்ளனர்.

நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட விளக்கமறியல் கைதிகள் ஐவருடன், சிறைச்சாலைப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரும் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளனர். எல்லாமாக நான்கு பேர் இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான போட்டா போட்டியே இக்கொலைக்குக் காரணமெனத் தெரியவந்திருக்கிறது. ஏனெனில் களுத்துறை சிறையில் இருந்து நேற்று நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட இவர்கள் பாதாள உலக சந்தேக நபர்களாவர். பழி தீர்க்கும் முகமாகவே இக்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதென்பதே ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ள தகவல் ஆகும்.

வடக்கு, கிழக்கில் புலிகளின் தாக்குதல் உச்சக் கட்டத்தில் இருந்த காலப் பகுதியில் இடம்பெற்றுள்ள தாக்குதலையே நேற்றைய களுத்துறை சம்பவம் நினைவுபடுத்துகின்றது. ஏனெனில் நேற்று நடத்தப்பட்டுள்ள தாக்குதலானது கெரில்லா பாணியிலேயே அமைந்திருந்தது.

வீதியின் அருகில் மறைந்து நின்றபடி ஆயுததாரிகள் சரமாரியான வேட்டுக்களைத் தீர்த்துள்ளனர். புலிகள் அக்காலத்தில் இதேபாணியிலான தாக்குதல்களையே பல இடங்களில் நடத்தினர்.

பொலிஸார் கூறுகின்ற தகவல்களையும், அயலில் வசிக்கின்ற மக்கள் கூறியுள்ள வாக்குமூலங்களையும் வைத்துப் பார்க்கின்ற போது, களுத்துறையில் நேற்று நடந்துள்ள சம்பவம் சாதாரணமானதாகத் தோன்றவில்லை. சுமார் 15 பேர் கொண்ட கும்பலொன்றே இத்தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

தாக்குதலின் அகோரத்தையும், சிறைச்சாலை வாகனத்துக்கு ஏற்பட்டுள்ள பலத்த சேதத்தையும் பார்க்கின்ற போது, பதினைந்து பேரும் துப்பாக்கிகளுடன் வந்திருப்பரென்றே ஊகிக்க முடிகின்றது. சிறைச்சாலை வாகனம் சல்லடையாகிப் போயுள்ளது. நொடிப் பொழுதில் சம்பவித்த மரணங்களும் அதிகம்.

துப்பாக்கிதாரிகள் சிறைச்சாலை வாகனத்தை நோக்கி வைத்த இலக்கு அயலில் உள்ள வீடுகளையும் பதம்பார்த்துள்ளது. அச்சமும், அதிர்ச்சியும் தருகின்ற பயங்கரமானதொரு சம்பவம் இது!

பாதாள உலகக் குழுக்களுக்கிடையேயான மோதல் காரணமாக இதுவரை இடம்பெற்றுள்ள சம்பவங்களில் மிக உச்சகட்ட மோசமான சம்பவமாக நேற்றைய சம்பவத்தைக் கூற முடியும்.

இச்சம்பவம் பலவிதமான சந்தேகங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றது.

பாதாள உலகக் கும்பல்கள் கட்டுப்படுத்த முடியாதபடி எல்லை மீறிச் சென்று விட்டனவா? இக்கும்பல்களைக் கட்டுப்படுத்தும் திராணியை பொலிஸார் இழந்து விட்டனரா? சிறைக்கைதிகளை நீதிமன்றத்துக்கு பத்திரமாகக் கொண்டு செல்வதற்கான பாதுகாப்பு உத்தரவாதம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் கிடையாதா? பாதாள உலகக் கும்பல்களுக்கு உதவியாக இராணுவத்திலிருந்து தப்பியோடிய படையினரும் செயல்படுகின்றனரா? படையினர் பயன்படுத்துகின்ற நவீன துப்பாக்கிகள் பாதாள உலகக் கும்பல்களிடம் வந்து சேர்ந்தது எவ்வாறு? பாதாள உலகக் கும்பல்களின் அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளப் போகின்ற காத்திரமான நடவடிக்கைகள் எவை?

இவ்வாறெல்லாம் ஒன்றின்மீது ஒன்றாக விடை புரியாத வினாக்கள் எழுந்தபடியே உள்ளன.

நேற்றைய தாக்குதலில் ஈடுபட்ட மர்மக் கும்பலைச் சேர்ந்தோர் பொலிஸார் அணிவதைப் போன்ற சீருடையை அணிந்து காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அயலில் வசிப்போர் சந்தேகப்படக் கூடாதென்பதற்காக அக்கும்பல் போலி சீருடையைப் பயன்படுத்தியிருக்கக் கூடும். ஆனாலும் சுமார் பதினைந்து பேர் கொண்ட ஆயுதக் கும்பலொன்று களுத்துறை சிறைச்சாலைக்கு அயலில் உள்ள பிரதேசத்தில் பட்டப் பகலில் நடமாடியுள்ளதெனில், பாதுகாப்புக் குறைபாடுகள் தாராளமாகவே இருப்பதை ஒப்புக் கொள்ளாமலிருக்க முடியாது.

பாதாள உலகக் கும்பல்களையும், இராணுவத்திலிருந்து தப்பியோடியோரையும் கண்டுபிடிப்பதில் பாதுகாப்பு அமைச்சும், சட்டம் ஒழுங்குகள் அமைச்சும் தீவிரமான கவனம் செலுத்த வேண்டுமென்பதையே களுத்துறை சம்பவம் எமக்குச் சுட்டிக் காட்டுகின்றது. இவ்விடயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்காது போனால், இதுபோன்ற வன்முறை சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போய் விடலாம். பொதுமக்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லாது போய் விடும்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் பாதுகாப்பில் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத்தினால் நாட்டின் சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கப்படுவதற்கிடையில், இவ்வாறு பழி தீர்க்கும் படலங்கள் நடந்தேறுமாயின் நாட்டில் சட்டமும் நீதியும் அர்த்தமில்லாததாகிப் போய் விடுவதற்கு இடமுண்டு.

விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டு, யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஏழு வருடங்கள் கடந்து விட்டன. எனினும் அரசியல்வாதிகளுக்கான பாதுகாப்பு குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்பட்டதைக் காண முடியவில்லை. சாதாரண அரசியல்வாதி ஒருவரின் பாதுகாப்புக்காக படையினர் சகிதம் பல வாகனங்கள் செல்வதை இன்னமும் காண முடிகின்றது. முக்கியஸ்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியமானதுதான்.

ஆனாலும் தனிப்பட்ட பகைமையை எதிர்கொண்டவர்களாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விளக்கமறியல் கைதிகளும் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளவர்களென்பதை களுத்துறைத் தாக்குதல் சம்பவம் உணர்த்துகின்றது. கைதிகள் பாதுகாப்பு விடயத்தில் இனிமேலாவது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது அவசியமென்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...