Friday, February 24, 2017 - 16:14
ஒருவர் கைதாகி விடுதலை
மட்டக்களப்பு மாவட்ட காணி சீர் திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் என். விமல்ராஜ் மீது இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம் பெற்றுவருவதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட காணி சீர் திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் என். விமல்ராஜ் மீது இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அவர் படுகாயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (22) இரவு 8 மணியவில் இச்சம்பவம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை கடற்கரை வீதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனம் தெரியாத இருவர் அவருடன் பேச வேண்டுமென அழைத்து அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த இவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதன் பின்னர் கொழும்புக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை நடாத்தி வருகின்றது.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கான உதவி பொலிஸ் அத்தியட்சகர் சிசில எந்திரதந்திரி தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்ற விமல்ராஜின் வீட்டுக்கு சென்ற பொலிஸ் குழுவினர் அவரின் குடும்பத்தவர்கள் மற்றும் அயலிலுள்ளவர்களிடமும் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் தொடர்பாக பல்வேறு முனைகளில் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக சந்தேகத்தின்பேரில் காத்தான்குடி பொலிசாரால் ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஏறாவூர் முதல் கல்முனை வரையிலான பிராதான வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள சகல சீ.சீ.ரீ.வி. கமெராக்களும் குறித்த தினத்தில் பரிசோதனை செய்யப்படுவதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
களுவாஞ்சிக்குடி கொக்கட்டிச்சோலை வெல்லாவெளி காத்தான்குடி பொலிஸ் நிலையங்களின் விசேட பொலிஸ் பிரிவுகளிலும் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான என். விமல்ராஜ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன், மட்டக்களப்பு குறூப் நிருபர் - ஜவ்பர்கான்)
Add new comment