கையும் களவுமாக பிடிபட்ட பிரதேச சபை ஊழியர் | தினகரன்

கையும் களவுமாக பிடிபட்ட பிரதேச சபை ஊழியர்

 
றிஸ்வான் சேகு முகைதீன்
 
பேருவளை பிரதேச சபையில் கடமையாற்றி வரும் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் இலஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
 
குறித்த அதிகாரியினால் இன்றைய தினம் (20) ரூபா 25,000 இலஞ்சமாக பெறப்பட்ட வேளையில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை பணிப்பாளர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்தார்.
 
பயாகல பிரதேசத்தைச் சேர்ந்த, வர்த்தகர் ஒருவரால் நடாத்திச் செல்லப்படும் மர ஆலை மற்றும் ஹோட்டல் ஆகியவற்றுக்கான சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரம் மற்றும் நீச்சல் தடாகத்திற்கு அவசியமான ஏற்புடைமை அனுமதிப்பத்திரம் ஆகியவற்றை பெறும் வகையில் குறித்த அதிகாரியினால் வழங்கப்படும் பரிந்துரைக்காகவே குறித்த இலஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சந்தேகநபர், பயாகல பிரதேச சபை உப காரியாலயத்தில் குறித்த பணத்தை பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
 
சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
 

Add new comment

Or log in with...