புனித யாத்திரையின் பின் திரும்பிய படகு விபத்து; இதுவரை 10 பேர் பலி | தினகரன்


புனித யாத்திரையின் பின் திரும்பிய படகு விபத்து; இதுவரை 10 பேர் பலி

 
களுத்துறை, கட்டுகுருந்த (பேருவளை, பயாகல) பிரதேச கடற்பரபில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இதுவரை 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இன்று (19) முற்பகல் பேருவளையிலிருந்து களுத்துறை புனித சிலுவை ஆலயத்திற்கு, புனித யாத்திரை ஒன்றை மேற்கொண்டிருந்த குழுவினர் குறித்த நிகழ்வை முடித்த பின் திரும்பிச் சென்ற வேளையில் இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
இந்த யாத்திரையில் 19 படகுகள் சென்றுள்ளதோடு, அதில் ஒரு படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக பொலிஸ் ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
 
இதனை அடுத்து, குறித்த படகில் பயணித்தோரில் பலர் நீரில் மூழ்கி மரணித்துள்ளனர். இதில் தற்போது வரை 10 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதோடு, அவர்களது சடலங்கள், நாகொட மற்றும் பேருவளை வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
குறித்த படகில் இருந்த மேலும் 5 பேர் மீட்கப்பட்டு நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
குறித்த படகில் பயணித்த அனைவரும், பாதுகாப்பு அங்கி இன்றி பயணித்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
 
காணாமல் போனவர்களை தேடும் பணியில் பொலிசார், கடற்படை மற்றும் வான்படை ஆகியன இணைந்துள்ளன.
 
 

Add new comment

Or log in with...