Friday, April 19, 2024
Home » புரட்டாசி

புரட்டாசி

by damith
October 2, 2023 6:45 am 0 comment

புரட்டாசி. இது தமிழ் மாதங்களில் ஒன்று. 6வது மாதமாக இது வரும். சூரியன் கன்னி ராசியில் இருக்கும் நாட்களைத்தான் நாம் புரட்டாசி மாதம் என்கிறோம். இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது.மறைந்த நம் முன்னோர், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார். அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர்.

புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அதாவது இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர். இதையே, “மகாளய பட்சம்` என்பர்; “பட்சம்` என்றால், “15 நாட்கள்’ எனப் பொருள். இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். தகுதியானவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இந்த பட்சத்தில் வரும் பரணி, “மகாபரணி’ என்றும், அஷ்டமியை, “மத்யாஷ்டமி’ என்றும், திரயோ தசியை “கஜச்சாயை’ என்றும் சொல்வர். இந்த மூன்று நாட்களுமே, பிதுர் வழிபாட்டுக்கு உகந்தவை. புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையில் செய்யப்படும் பிதுர் பூஜை (இவ்வாண்டில் மற்ற அமாவாசைகளைக் காட்டிலும் அதிக பலன் தரும். மஹாலய விதிப்படி அந்தப் பதினாறு நாள்களும் பித்ருக் களுக்காக அன்ன சிராத்தம் செய்ய வேண்டும், இயன்றவர்கள் பொன் முதலிய பொருள்களைத் தகுந்தவர்களுக்குத் தானமாக வழங்கலாம். புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு. பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி பூஜை இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். எனவே இம்மாதத்தில், தவறாமல் வழிபாடுகளைச் செய்து, தெய்வங்கள் மற்றும் முன்னோர்களின் நல்லருளும், நல்லாசியும் பெறுவோம்.

புண்ணியம் தரும் புரட்டாசி மாதம்

‘பொன்னுருகக் காய்ந்து மண்ணுருகப் பெய்யும் புரட்டாசியில்’ என்பார்கள். அதாவது, புரட்டாசி மாதத்தில் பகல் பொழுதினில் தங்கம் உருகும் அளவிற்கு கடுமையான வெயில் காய்ந்து, இரவினில் மண் உருகி வழிந்தோடும் அளவில் நல்ல மழை பெய்யும் என்பது இதன் பொருள். இந்த மாதம் முழுவதும் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் இதனை கன்னியா மாதம் என்றும் அழைப்பர். புரட்டாசி என்ற வார்த்தையைக் கேட்கும்போதே நம் கண் முன் தோன்றுவது பெருமாளின் திருவுருவமே. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருப்போரும் உண்டு. நவகிரகங்களில் மகாவிஷ்ணுவின் அம்சமாக உருவானவர் புத பகவான். புதன் கிரகம் உச்ச பலம் பெறுவது கன்னி ராசியில். எனவேதான் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி, பெருமாளுக்கு உரிய மாதம் என பெரியவர்கள் வகுத்திருக்கிறார்கள். அதோடு பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரியனோடு புதனும் இணைந்திருப்பார். சூரியனுக்கு உரிய பிரத்யதி தேவதை பசுபதி என்றழைக்கப்படும் சிவபெருமான். புதனுக்கு உரிய பிரத்யதி தேவதை நாராயணன். இவர்கள் இருவரும் தெய்வீக மூலையாக கருதப்படும் கன்னி மூலையில் இணைவது சங்கர-நாராயணர் இணைவாகக் கருதப்படுகிறது. சூரியநாராயண ஸ்வாமி என்று சூரியன் பெயர் பெற்ற காரணமும் இதுவே.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT