Home » சா/த, உயர்தரம் சித்தியடைந்த மாணவரும் பல்கலைக்கழகம் தெரிவானோரும் கௌரவிப்பு
வடதெனிய கல்வி அபிவிருத்தி சங்க ஏற்பாட்டில்

சா/த, உயர்தரம் சித்தியடைந்த மாணவரும் பல்கலைக்கழகம் தெரிவானோரும் கௌரவிப்பு

by damith
October 2, 2023 10:31 am 0 comment

வடதெனிய கல்வி அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் வடதெனிய பிரதேசத்தில்; க.பொ.த சாதாரணம், உயர் தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவ மாணவிகளையும், மற்றும் பல்கலைக்கழகம் தெரிவான மாணவ மாணவிகளைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வடதெனிய கிரீன் விவ் ரிசப்சன்ஸ்ன்ட் மண்டபத்தில்தலைவர் ஏ.எச்.எம். அனஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் உனைஸ் எம். ஆரிப் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதன்போது விசேட அம்சமாக வடதெனிய பிரதேசத்தில் மருத்துவத் துறையில் ரஜரட்ட பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டு வைத்தியத் துறைப் பட்டத்தை நிறைவு செய்த முதல் வைத்தியர் இல்மா தாசிமை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் அதேவேளையில் வடதெனிய பிரதேசத்தில் 35 வருட காலமாக வைத்திய சேவையாற்றி வருகின்ற வைத்தியர் டாக்டர் விஜேசிங்கவையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது வடதெனிய முஹியித்தீன் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் அல்ஹாஜ். எம். ஐ. எம். ஹாரிஸ், வடதெனிய முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் ஏ. ஏ. சி. எம். முனீர் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள், உலமாக்கள், தனவந்தர்கள், முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் உனைஸ். எம். ஆரிப் உரையாற்றும் போது; வடதெனிய கல்வி அபிவிருத்தி சங்கம் வடதெனிய பிரதேச மக்களின் கல்வித் தேவையை மிகவும் சிறந்த முறையில் நிறைவேற்றி வருகின்றது என்று அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அறிவியல் ரீதியாக வடதெனிய கிராமம் கூடிய சீக்கரம் மாற்றத்தைக் காணும் என்பதில் எதுவிதமான சந்தேகமுமில்லை. க. பொ. த உயர் தரப் பரீட்சை என்பது வெறுமனே தனியார் வகுப்புக்களுக்குச் சென்று மட்டும் படித்து பரீட்சையில் சித்தியடைய முடியாது. அதை அனுபவம் பெற்ற ஒருவராக இருந்து கூறுகின்றேன். என்னுடைய பிள்ளையினை பாடசாலையில் இருந்து ஒரு நாள் கூட விடுமுறை எடுக்க விட வில்லை. இம்முறை மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகி இருக்கிறார். அவர் ஒரு போதும் விடுமுறை எடுக்க மாட்டார். பாடசாலைகளுக்கும் செல்லுங்கள், தனியார் வகுப்புக்களுக்கும் செல்லுங்கள். அதில் எந்தவிதமான ஆட்சேபனையுமில்லை. வேண்டாம் என்று கூறவில்லை. பாடசாலைகளில்தான் பிள்ளைகளுடைய ஒழுக்கம் கற்பிக்கப்படுகிறது. பிள்ளைகள் புத்தகத்தை வாசித்து பரீட்சையில் சித்தியடைவதல்ல வாழ்க்கை. அதற்கப்பாலும் ஒரு வாழ்க்கை முறை இருக்கின்றது.

ஒரு உள்ளார்ந்த திறன்கள், செயற்பாடுகள் வெளிக்கொணர்தல் வேண்டும். அதற்கான மேடை கிடைக்காது. தனியார் வகுப்பில் விளையாட்டு மைதானம் இல்லை. நிறைய ஆசிரியர்களைச் சந்திக்க வாய்பில்லை. அவர்களுடைய ஆலோசனை கிடைக்காது. தனியார் வகுப்பில் படிப்பு மட்டும்தான். நல்ல மனப்பாங்கு கிடைக்காது, நல்ல ஒழுக்கம் கிடைக்காது. நல்ல வழி கிடைக்காது. திறன் கிடைக்காது. தனியார் வகுப்புக்களை நம்பி எந்தக் காரணத்தைக் கொண்டும் பாடசாலைகளில் நடைபெறும் வகுப்புக்களை வீணடிக்கச் செய்து விடாதீர்கள், தமிழ் தினப் போட்டிகள், ஆங்கில மொழி தினப் போட்டிகள், மீலாத் தின போட்டிகள் என எல்லா நிகழ்வுகளிலும் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

இங்கு இரு பிள்ளைகள் அறிவிப்பாளர்களாக பங்காற்றினார்கள். அவர்களுடைய திறமையைப் பார்க்கின்ற போது ஓர் அறிவிப்பாளர்களாக வருவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இவை தனியார் வகுப்புக்கள் மூலம் ஏற்படுத்தப்படுவதில்லை. இவை எல்லாம் பாடசாலை கல்வி மூலம் தான் கிடைக்கின்றன. பல்கலைக்கழகம் சென்று தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டி தங்களுடைய பெயர்களைப் பதிவு செய்வதாக இருந்தால் அதற்குரிய அத்திவாரம் பாடசாலைகளில்தான் கிடைக்கும். ஒரு மாணவன் பல்கலைக்கழம் தெரிவு செய்யப்பட்டு செல்லும் போது பல்துறை சார்ந்த ஆளுமைகளைக் கொண்ட மாணவனாக ஆக்கி அனுப்பி வைத்தல் வேண்டும். இதுபாடசாலையின் கட்டாயக் கடமை. இதில் ஒவ்வொரு பெற்றோர்களும் மிகுந்த கவனம் செலுத்துதல் வேண்டும்.

சமூகத்தை வழிநடத்தக் கூடிய முழுமையான ஓர் ஆளுமைமிக்க மனிதராக வர வேண்டும். சமூகத்தின் தலைவராக வருவதற்குரிய ஆளுமை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கான ஒரு சிறந்த களம்தான் பல்கலைக்கழகம். அங்கு சென்று படித்து விட்டு வெறும் காகிதத்தை மட்டும் தூக்கிக் கொண்டு வர வேண்டாம். அதனை இப்போது ஒன் லைன் மூலமாகவும் செய்து பெற்றுக் கொள்ள இயலும். அதற்கப்பால் சென்று தம் ஆளுமையை வளர்த்துக் கொள்வதற்கான சிறந்த இடம் பல்கலைக்கழகங்களாகும் என்பதை ஒவ்வொரு மாணவர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

படிக்கின்ற போது தொழில் வாய்ப்புக்காக படிக்கின்றேன் என்ற எண்ணம் வருதல் வேண்டும். அது இல்லையெனில் நாங்கள் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை இழந்து விடுவோம். பல்கலைக்கழக வாழ்க்கையை கற்றலுக்காக மட்டுமல்ல மாணவர்களுடைய கனவாக இருக்கின்ற தொழிலை அடைவதற்காக அத்திவாரமாகக் கொள்ளுதல் வேண்டும் என்றார்.

# வடதெனிய கல்வி அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் ஏ. எச். எம். அனஸ் தலைமையுரை நிகழ்த்திய போது; பெற்றோர்களுடைய பங்களிப்பு இல்லா விட்டால் பிள்ளைகள் சிறந்த பரீட்சைப் பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ள முடியாது. எனவே அந்த வகையில் இன்று பாராட்டுக்களைப் பெறவுள்ள பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு எமது உள்ளார்ந்த நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் எனினும் எமது பிரதேசத்தில் பல்கலைக்கழக நுழைவு மட்டம் இன்னும் மந்த கதியிலே இருக்கிறது. எமது பக்கத்து ஊர்களை எடுத்துப் பார்த்தால் குறிப்பாக கம்பளை சாஹிராக் கல்லூரியில் எத்தனை 9 ஏ சித்திகளைப் பெற்று இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். இந்த அடைவு மட்டங்களைப் பெற்றுக் கொள்வதற்கான பங்களிப்பு பெற்றோர்களிடத்திலேயே தங்கியிருக்கிறது. தற்போதைய கால கட்டத்தில் பள்ளிக் கூடப் புத்தகப் படிப்பில் இருந்து விலகி செயற்கை நுண்ணறிவுக் கற்கை நெறிகளை நாடியே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. கையடக்கத் தொலைபேசி இல்லாமல் படிக்க முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பெற்றோர்களாகிய நாங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள். அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்பதை அவதானித்தல் வேண்டும். இன்று இப்பிரதேசத்தில் இருந்து நிறையப் பிள்ளைகள் பல்கலைக்கழகம் செல்வதற்கான சந்தர்ப்பத்தையும் க. பொ. த சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று உயர் தரக் கல்வியினையும் மேற்கொள்ள வடதெனிய கல்வி அபிவிருத்திச் சங்கம் பெரும் பங்காற்றி வருகின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்

# வடதெனிய முஹியித்தீன் ஜம்ஆப் பள்ளிவாசலின் முன்னாள் தலைவர் வடதெனிய கல்வி அபிவிருத்தி சங்கத்தின் உப தலைவர் கியாஸ் ரவூப் உரையாற்றும் போது;

2019 இல் அனஸ் ஆசிரியர் வெட்ஸ் அமைப்பு ஆரம்பித்தாலும் அதற்கு முன்னர் ஐந்து வருடங்களாக ஊருக்கு கல்வியை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் தனிப்பட்ட ரீதியாக இயங்கி வந்துள்ளார்கள். அந்த அவர்களுடைய செயற்பாட்டினைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு மே மாதம் இந்த அமைப்பை புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. அதனைபெரியளவில் முன்னெடுப்பதற்காக ஆரம்பத்தில் பல தரப்பட்ட கூட்டங்களை நடத்தினோம். அதில் ஒரு கூட்டம் எனது வீட்டிலும் இடம்பெற்றது. இந்த அமைப்பில் 25 உறுப்பினர்கள் உள்ளார்கள். இதில் 19 பேர் வெளிநாடுகளில் பணிபுரிகின்றார்கள். மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா,அமெரிக்கா, அவுஸ்ட்ரேலியா போன்ற நாடுகளில் பரந்துபட்ட உயர் நிலையில்; வாழ்ந்து வருகின்றனர். தம் பிரதேசத்தின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த வெட்ஸ் என்னும் அமைப்பு ஆகும்.

இந்த அமைப்பு தம் பிரதேச பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்கு வறுமை தடையாக இருக்கக் கூடாது என்பதை கவனத்தைக் கொண்டு செயலாற்றி வருகிறது. சூம் ஊடாக தம் பிரதேசத்தின் கல்வி நிலவரம் குறித்து கலந்துரையாடல்கள் செய்வோம். அதற்கான பல திட்டங்களை மேற்கொண்டு செயற்பட்டு வருகின்றோம்.

தரம் 11 ஆம் ஆண்டுக்கான பிரத்தியேக வகுப்புக்களை நடத்தி வருகின்றோம். தரம் 10 ஆம் ஆண்டுப் பிள்ளைகளுக்கான பிரத்தியேக வகுப்புக்களை நடத்தி வருகின்றோம். எமது பள்ளிவாசலின் ஸகாத் நிதியின் மூலம் ஒவ்வொரு வருடமும் கல்விக்காக செலவு செய்யப்பட்டு வருகின்றது. அதேவேளையில் இவ்வருடம் 14 வறிய மாணவர்களின் கல்விக்காக மாதாந்தம் நிதி உதவியினை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் இப்பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்காக பள்ளிவாசலின் பங்களிப்பு ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாணவர்களின் பங்களிப்பு ஒத்துழைப்பு இருத்தல் வேண்டும் என்றார்.

இக்பால் அலி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT