Home » ஆசிய விளையாட்டுப் போட்டி: ஸ்குவஷ் போட்டியில் ரவிந்து 2ஆவது சுற்றிற்கு

ஆசிய விளையாட்டுப் போட்டி: ஸ்குவஷ் போட்டியில் ரவிந்து 2ஆவது சுற்றிற்கு

by damith
October 2, 2023 11:27 am 0 comment

சீனாவின் ஹான்சோ நகரில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 16 பேருக்குள் இலங்கையின் ரவிந்து லக்சிறி முன்னேற்றம் கண்டுள்ளார்.

ஸ்குவஷ் போட்டிகள் நேற்று (01) ஆரம்பமான நிலையில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 32 பேர் சுற்றில் போட்டியிட்ட லக்சிறி தாய்லாந்தின் ரவிபுல் லம்பைபுன்னை 3–0 என இலகுவாக தோற்கடித்தார். இதன் முதல் சுற்றில் 11-1 என வெற்றியீட்டிய அவர் அடுத்த இரண்டு சுற்றுகளையும் 11–2, 11–4 என கைப்பற்றினார்.

இதன்படி போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய அவர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இன்று (02) ஆடவுள்ளார்.

இதேவேளை ஸ்குவஷ் கலப்புப் பிரிவின் பி குழுவில் போட்டியிட்ட இலங்கை அணி மலேசியாவிடம் 2–0 என தோல்வியை சந்தித்தது. இலங்கை அணியில் ஷமீல் வகீல் மற்றும் சனித்மா சினாலே போட்டியிட்டனர். இந்த இருவரும் இன்று பிலிப்பைன்ஸுக்கு எதிராக போட்டியிடவுள்ளனர்.

இதேவேளை நேற்றுக் காலை பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்போட்டியின் ஆரம்ப சுற்றில் பங்கேற்ற ருமெஷிகா ரத்னாயக்க அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். அவர் 24.51 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்து மூன்றாவது இடத்தை பிடித்ததோடு ஒட்டுமொத்த வீராங்கனைகளில் 24 பேரில் 11ஆவது இடத்தையே பெற்றார்.

இந்தப் போட்டியின் போட்டிச் சாதனை கடந்த 25 ஆண்டுகளாக இலங்கையின் தமயந்தி தர்ஷா வசம் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சனிக்கிழமை (30) 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டிகளில் பங்கேற்ற இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு பதக்கம் வெல்ல முடியாமல்போனது. பெண்களுக்கான இறுதிப் போட்டியில் நதீஷா ராமநாயக்க 53.72 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்து 5ஆவது இடத்தையே பிடித்ததோடு, ஆண்கள் பிரிவின் இறுதிப் போட்டியில் அருண தர்ஷன 46.09 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்து 6ஆவது இடத்தையும் காலிங்க குமார 46.22 வினாடிகளில் முடித்து 7ஆவது இடத்தையுமே பெற்றனர்.

ஆசியாவின் வேகமான வீரர் மற்றும் வீராங்கனைக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் சீன வீர, வீராங்கனைகளே தங்கப் பதக்கம் வென்றனர். இதில் ஆண்களுக்கான பிரிவில் சென்யே ஷி 9.97 வினாடிகளில் போட்டியை முடித்து முதலிடத்தை பெற்றதோடு பெண்கள் பிரிவில் கே மங்கி 11.22 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்து முதல் இடத்தை பிடித்தார்.

எனினும் இந்தப் போட்டியின் பெண்களுக்கான போட்டிச் சாதனை தொடர்ந்தும் இலங்கையின் சுசந்திகா ஜயசிங்க (11.15 வினாடிகள்) வசமே உள்ளது.

பாராம்தூக்கும் போட்டியில் நேற்று இலங்கையின் டிலங்க இசுரு குமார 61 எடைப் பிரிவில் பி குழுவில் போட்டியிட்ட நிலையில் அந்தக் குழுவின் 5 பேரில் 4ஆவது இடத்தையே அவர் பெற்றார்.

அம்பு எறிதல் போட்டியின் ஆண்களுக்காக ரகர்வ் ஒற்றையர் பிரிவில் போட்டியிட்ட இலங்கையின் சஜீவ் டி சில்வா 614 புள்ளிகளை பெற்று போட்டியில் பங்கேற்றவர்களில் 69ஆவது இடத்தையே பிடித்தார். அதேபோன்று இந்தப் போட்டியின் பெண்களுக்கான கம்பௌன்ட் பிரிவு போட்டியில் அனுராதா கருணாரத்ன கடைசி இடத்தையே பிடித்தார்.

கொல்ப் போட்டியின் இறுதி நாளான நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நான்காவது சுற்றில் போட்டியிட்ட நடராஜா தங்கராஜா அந்தப் போட்டியின் 34 ஆவது இடத்தையே பிடித்தார். எனவே கொல்ப் போட்டியில் இலங்கையின் பதக்க எதிர்பார்ப்பு பறிபோனது. இந்நிலையில் மெய்வல்லுனர் போட்டிகளில் இன்று சாரங்கி சில்வா பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் பங்கேற்பதோடு 400 மீற்றர் கலப்பு அஞ்சலோட்டப் போட்டியிலும் இலங்கை அணி இன்று கலந்து கொள்ளவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT