அமெரிக்காவின் ‘இரு நாடுகள்’ கொள்கையை கைவிட்டார் டிரம்ப் | தினகரன்

அமெரிக்காவின் ‘இரு நாடுகள்’ கொள்கையை கைவிட்டார் டிரம்ப்

 

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பிரச்சினை குறித்து அமெரிக்கா பல தசாப்தங்களாக கடைப்பிடித்து வந்த இரு நாடுகள் தீர்வுக் கொள்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைவிட்டுள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவுடன் இணைந்து கடந்த புதன்கிழமை ஊடக மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப், சிறப்பான அமைதி உடன்படிக்கை ஒன்று பற்றி வாக்குறுதி அளித்தார். எனினும் இரு தரப்புக்கும் இடையே சமரசம் வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையில் கடந்த 2014 தொடக்கம் அமைதிப் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு இஸ்ரேல் தனது குடியேற்ற நடவடிக்கைகளை சற்று குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா விஜயம் செய்த நெதன்யாகுவிடம் டிரம்ப் கோரிக்கை விடுத்தார். டிரம்ப் கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தில் ஆயிரக்கணக்கான யூத குடியேற்றங்களை அமைக்க அனுமதி அளித்தது.

தூதரக விவகாரம்

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தில் அமெரிக்காவுடன் சிக்கலான உறவை கொண்டிருந்த இஸ்ரேல் அமெரிக்க புதிய ஜனாதிபதியுடன் தனது உறவை பலப்படுத்த எதிர்பார்த்துள்ளது.

இந்நிலையில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக மாநாட்டில் இரு தலைவர்களும் எதிர்கால பலஸ்தீன தனி நாட்டுக்கு ஆதரவாக வெளிப்படையாக கருத்து வெளியிட தவறினர். எனினும் பலஸ்தீன தனி நாடு என்பது அமெரிக்காவின் உறுதியான கொள்கையாக இருந்து வந்தது.

“இரு நாடுகள் என்பதில் இருந்து ஒரு நாடு என்று நான் பார்க்கிறேன்” என்று டிரம்ப் கூறினார். “இரு தரப்பும் விரும்பக் கூடியதாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். இரு தரப்பும் விரும்பக் கூடிய ஒன்று என்பது எனக்கு பெரு மகிழ்ச்சி தரும் விடயமாகும்” என்றும் கூறினார்.

இது குறித்து டிரம்ப் மேலும் கூறும்போது, “இருவரும் ஒன்றாக இருப்பதை நான் விரும்புகிறேன். இருவருக்கு இரு நாடுகள் என்பது இலகுவான வழி என்று நான் நினைத்திருந்தேன். உண்மையைக் கூறப்போனால், பிபி (நெதன்யாகு) மற்றும் பலஸ்தீனியர் அல்லது இஸ்ரேலியர் மற்றும் பலஸ்தீனியர் ஒன்றையே விரும்புவதாக இருந்தால் அது பற்றி நான் மிகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

எனினும் இது இரு தரப்பும் அமைதி உடன்படிக்கை ஒன்றில் எட்டவேண்டியது என்றும் டிரம்ப் வலியுறுத்தினார்.

டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தில் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலத்திற்கு கொண்டு செல்வது குறித்து அளித்த வாக்குறுதி பற்றியும் இந்த ஊடக சந்திப்பில் கேட்கப்பட்டது. இந்த நடவடிக்கை மத்திய கிழக்கு அமைதி முயற்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.

ஆனால் “ஜெரூசலத்திற்கு தூதரகம் மாற்றப்படும் நிகழ்வை பார்க்க நான் அதிக ஆவலாக இருக்கிறேன்” என்று டிரம்ப் பதிலளித்தார்.

“என்னை நம்புங்கள் நாம் மிக மிக உறுதியாக பார்த்திருக்கிறோம். நாம் அதிக அவதானத்துடன் பார்த்திருக்கிறோம். அது நிகழ்வதை நாம் பார்க்கத்தான் போகிறோம்” என்றார் டிரம்ப்.

இரு நாட்டு தீர்வு பற்றி நெதன்யாகுவிடம் கேட்கப்பட்டபோது, அந்த முத்திரையை பார்க்காமல் அதன் பொருளை அவதானிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இங்கே இரு முன்னிபந்தனை கொண்ட அமைதி ஏற்பட வேண்டும் என்று கூறிய நெதன்யாகு, “முதலில் பலஸ்தீனர்கள் யூத நாட்டை அங்கீகரிப்பது கட்டாயம்” என்றார். “இரண்டாவது எந்த ஒரு அமைதி உடன்படிக்கையும், ஜோர்தான் நதியின் மேற்குப் பக்கம் இருக்கும் நிலப்பகுதி முழுவதும் இஸ்ரேலின் பாதுகாப்பில் இருக்க வேண்டும்” என்று டிரம்ப் கூறினார்.

இதேவேளை, தொடர்ந்தும் இரு நாட்டு தீர்வுத் திட்டத்தை வலியுறுத்தி இருக்கும் பலஸ்தீன தலைமை, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவரவும் உறுதி பூண்டுள்ளது. பலஸ்தீன நாடு என்ற கொள்கையை கைவிட வேண்டாம் என்று அமெரிக்காவிடம் பலஸ்தீன அதிகாரிகள் முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும் டிரம்பின் அழைப்பை ஏற்று இஸ்ரேல் தனது குடியேற்ற நடவடிக்கையை நிறுத்திக்கொள்ளும் பட்சத்தில் ஒரு சாதகமான உடன்பாட்டுக்கு வர தயாரென பலஸ்தீன தலைமை குறிப்பிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பின் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஜனாதிபதிகளுக்கு இடையிலான முதலாவது நேருக்கு நேர் சந்திப்பாகவே இது இருந்தது.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பிரச்சினைக்கு இரு நாட்டு தீர்வு கொள்கையை அமெரிக்கா தொடர்ச்சியாக கடைப்பிடித்து வந்தது.

இந்த கொள்கை மாற்றம், மத்திய கிழக்கு பிரச்சினைக்கு தீர்வை எட்ட பலஸ்தீன தனி நாடு என்பது கட்டாய நிபந்தனையாக இருக்காது என்ற சமிக்ஞையையே காட்டுவதாக வெள்ளை மாளிகை சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

1967 ஆம் ஆண்டு மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது தொடக்கம் அங்கு சுமார் 140 குடியேற்றங்களில் 600,000க்கும் அதிகமான யூதர்கள் வாழ்கின்றனர். இது பலஸ்தீனம் தனது எதிர்கால தனி நாடு என்று கோரும் பிரதேசங்களாகும்.

இஸ்ரேலின் குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்று கருதப்படுகின்றபோதும் இஸ்ரேல் அதனை நிராகரித்து வருகிறது. 


Add new comment

Or log in with...