இலங்கை –அவுஸ்திரேலிய முதல் இருபது –20 இன்று | தினகரன்

இலங்கை –அவுஸ்திரேலிய முதல் இருபது –20 இன்று

 

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபது–20 தொடரின் முதல் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெறவுள்ளது.

தென்னாபிரிக்க மண்ணில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த நிலையிலேயே இலங்கை அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. எனினும் கடந்த புதன்கிழமை நடந்த பிரதமர் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றிபேற்று நம்பிக்கையுடன் உள்ளது.

எனினும் அவுஸ்திரேலிய அணி தனது சிறந்த வீரர்கள் இன்றியே இந்த டி20 தொடரில் பங்கேற்கிறது. ஸ்டிவன் ஸ்மித், டேவிட் வோர்னர், மிட்சல் ஸ்டார்க், ஜோஷ் ஹேஸில்வுட் ஆகிய அனைத்து வீரர்களும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்தியா சென்றுள்ளனர்.

இதனால் ஆரொன் பின்ச் தலைமையில் அனுபவமற்ற அவுஸ்திரேலிய அணி ஒன்றே இலங்கையுடனான தொடரில் பங்கேற்கிறது. தவிர இந்த தொடரில் ஆஸி. அணியில் புதமுகங்களுக்கு இடம் கிடைத்துள்ளது. ஜெய் ரிச்சட்சன், ஆஷ்டன் டேர்னர் மற்றும் மைக்கல் கிளின்கர் சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பு பெற்றுள்ளனர்.

குறிப்பாக மைக்கல் கிளின்கர் நீண்ட கால காத்திருப்புக்கு பின்னர் சர்வதேச போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளார். 1999 ஆம் ஆண்டு முதல் தர கிரிக்கெட் போட்டிகளை ஆரம்பித்த அவர் முதல்தர போட்டிகளில் மொத்தம் 22,163 ஓட்டங்களை பெற்றுள்ளார். கடந்த தசாப்தத்தில் அதிக முதல்தர ஓட்டங்களை எடுத்த நிலையில் சர்வதேச வாய்ப்பு பெற்றவர் இவராவார்.

36 வயதான கிளின்கர் தனது கன்னி சர்வதேச டி20 போட்டியில் களமிறங்கும் ஐந்தாவது அதிக வயது கொண்ட வீரராகவும் சாதனை படைக்கவுள்ளார்.

அவுஸ்திரேலியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கை தனது வலுவான அணியுடனேயே இந்த தொடரில் பங்கேற்கிறது. எனினும் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் காயம் காரணமாக விளையாடவில்லை. உபுல் தரங்க அணிக்கு தலைமை தாங்வுள்ளார்.

2017இல் இலங்கை அணிக்கு இருபது–20 போட்டிகளில் தலைமை வகிக்கப்போகும் மூன்றாவது வீரர் தரங்க ஆவார். இதற்கு முன் மத்தியூஸ் மற்றும் தினேஷ் சந்திமால் தலைவர்களாக செயற்பட்டனர்.

எனினும் இலங்கை அணி அண்மையில் விளையாடிய டி20 போட்டிகளில் இருந்து தற்போதை அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சகலதுறை வீரர் தசுன் சானக்க மற்றும் மிலின்த சிரிவர்தன, அதேபோன்று துடுப்பாட்ட வீரர் டில்ஷான் முனவீர மற்றும் சாமர கபுகெதர ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் இலங்கை அணியில் இணைக்கப்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க வீரர் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவாவார். அவர் காயம் காரணமாக சுமார் கடந்த ஓர் ஆண்டாக விளையாடவில்லை.

எனினும் அவர் அணிக்கு திரும்பி புதனன்று விளையாடிய பயிற்சிப் போட்டியின் முதல் ஓவரிலேயே விக்கெட் வீழ்த்தினார்.


Add new comment

Or log in with...