சகல தரப்பினருடனும் பேசி 'சைற்றம்' பிரச்சினைக்கு தீர்வு | தினகரன்

சகல தரப்பினருடனும் பேசி 'சைற்றம்' பிரச்சினைக்கு தீர்வு

 

பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி தெரிவிப்பு

சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி சைற்றம் தனியார் பல்கலைக்கழக பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அதுவரை கல்வித்துறையை குழப்ப வேண்டாம் என பல்கலைக்கழக மாணவர் அமைப்புகளிடமும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்.

சைற்றம் தனியார் பல்கலைக்கழகம் தொடர்பாக ஜனாதிபதிக்கும் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகளுக்குமிடையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (16) பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இப்பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பாக அங்கு மாணவர் அமைப்பு பிரதிநிதிகள் விரிவாக தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

மாணவர் சங்கங்கள், பீடாதிபதிகள், இலங்கை வைத்திய சபை, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு சபை மற்றும் மாலபே தனியார் வைத்திய கல்லூரி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரினதும் கருத்துக்களை விசாரித்து அறிந்த பின் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண அரசு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்குமென ஜனாதிபதி கூறினார்.

கடந்த அரசாங்க காலத்தில் இந்த தனியார் வைத்திய கல்லூரி தொடர்பாக தங்களது எதிர்ப்பை தெரிவித்ததாக மாணவர் சங்க பிரதிநிதிகள் கூறினர்.

ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் அந்த அரசாங்கம் எடுக்கவில்லையென்றும் நாட்டில் இலவச கல்வியை பலப்படுத்த தற்போதைய அரசாங்கம் இந்த பிரச்சினைக்கு சரியான தீர்வை வழங்குமென தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் கூறினர்.

இந்த பிரச்சினை தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடனும் அரச பல் வைத்திய அதிகாரிகள் சங்க பிரதிநிதிகளுடனும் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கருத்துக்களை அறிந்துகொண்டார்.

நமது நிருபர் 


Add new comment

Or log in with...