கூகுள் லூன் திட்டத்தை பரீட்சிக்க 700 மெகாஹேட்ஸ் அலைக்கற்றைகள்

 

'கூகுள் லூன்' திட்டத்தை மீண்டும் பரீட்சிப்பதற்கு 700 மெகாஹேட்ஸ் அலைக்கற்றைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடியிருப்பதாக தொலைத்தொடர்புகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பரீட்சார்த்தத்துக்குத் தேவையான அலைக்கற்றைகளைப் பெறுவதற்கான அனுமதியை பெறுவது தொடர்பில் கூகுள் நிறுவனம், சர்வதேச தொலைத் தொடர்பு சங்கத்துடன் பரப்புரைகளில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்த அமைச்சர், இது தொடர்பில் அரசாங்கம் தனது சார்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடியிருப்பதாகவும் குறிப்பிட்டார். தொலைத் தொடர்பின் பயன்பாட்டை 10 வீதமாக அதிகரிப்பதன் ஊடாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.1 வீத பங்களிப்பைச் செலுத்த முடியும்.

இதனைக் கருத்தில் கொண்டு, அதிவேக இணையத் தொடர்பினை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே அரசாங்கம் கூகுள் லூன் திட்டத்தை, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்த முயற்சித்தது. இதற்காக ஒரு சதம் கூட செலவுசெய்யவில்லை. இருந்தபோதும் இத்திட்டம் குறித்து சிலர் தேவையற்ற விமர்சனங்களை முன்வைத்து இதனைக் குழப்புவதற்கு முயற்சிப்பதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

கொழும்பு ஹில்டன் ரெசிடன்சியில் நேற்று (16) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் கூறினார். அரசாங்கத்தினால் பரீட்சார்த்தமாக முன்னெடுக்கப்பட்ட கூகுள் லூன் திட்டம் குறித்து ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் ஹரீன் பெர்னான்டே இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

மேலும் விளக்கமளித்த அமைச்சர்: கூகுள் நிறுவனத்தின் இலங்கைக்கான தூதுவராகவுள்ள சமத் பலிகப்பிட்டிய என்ற பதுளையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர் ஒருவரின் தொடர்பினூடாகவே கூகுள் லூன் திட்டத்தை இலங்கையில் பரீட்சித்துப் பார்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன.

இது தொடர்பில் நாம் நேரடியாக அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்துக்குச் சென்று உயர் அதிகாரிகளைச் சந்தித்திருந்ததுடன், சமத் பலிகப்பிட்டிய இலங்கை வந்து ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலரைச் சந்தித்திருந்தார். கூகுள் லூனை பரீட்சித்துப் பார்ப்பது தொடர்பில் சமத் பலிகப்பிட்டியவுக்கு சொந்தமான ராம கோ நிறுவனத்துக்கும் ஐ.சி.ரி.சி நிறுவனத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதற்காக ஒரு சதம் கூட வழங்கப்படவில்லை. அது மாத்திரமன்றி இந்தப் பரீட்சிப்புக்கு அலைக்கற்றைகள் எதுவும் பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்கவுமில்லை.

3ஜீ. 4ஜீ இணைய வேகத்தை அதிகரிக்கும் நோக்கில் கூகுள் லூன் திட்டத்தை பயன்படுத்த யோசித்தோம். எமது முயற்சியால் கூகுள் லூனையும், கூகுள் நிறுவனத்தினரையும் இலங்கைக்குக் கொண்டுவர முடிந்து.

துரதிஷ்டவசமாக பரீட்சார்த்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. புத்தாக்கத்தை ஏற்படுத்த எடுத்த முயற்சியை சிலர் மோசமாக விமர்சித்து வருகின்றனர். புத்தாக்கத்துக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்திருப்பதால் கூகுள் நிறுவனம் லூன் திட்டத்தை இலங்கையில் செயற்படுத்தாது வேறு நாடுகளுக்குச் செல்வதற்கான ஆபத்தும் உள்ளது.

அதேநேரம், கூகுள் லூன் திட்டத்துகு 700 மெகாஹேட்ஸ் அலைக்கற்றையைப் பெறுவதற்கு முயற்சியெடுத்துள்ளோம். தொலைத்தொடர்பு ஆணைக்குழுவில் இதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. இருந்தபோதும் தொலைத்தொடர்புகள் பற்றிய சர்வதேச அமைப்பான சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் அனுமதி வழங்குவதில் இழுத்தடிப்புச் செய்கிறது. இலங்கை இந்த சங்கத்தில் உறுப்பு நாடு என்பதால் இது பற்றி சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடியுள்ளோம். அவருடைய ஆலோசனை கிடைத்தவுடன், அமைச்சரவையில் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படும் என்றார்.

மகேஸ்வரன் பிரசாத் 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
6 + 0 =
Solve this simple math problem and enter the result. E.g. for 1+3, enter 4.

Or log in with...