தமிழக முதல்வராக எடப்பாடி பதவியேற்பு | தினகரன்

தமிழக முதல்வராக எடப்பாடி பதவியேற்பு

 

15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் நிபந்தனை

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி நேற்று( 16) பதவியேற்றுக் கொண்டார். தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர ராவ், அவருக்கு முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். சட்டப்பேரவையில் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அ.தி.மு.கவின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்ட சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து சட்டப்பேரவை உறுப்பினராக எடப்பாடி பழனிச்சாமியைத் தெரிவுசெய்தனர். இவர் நேற்று முன்தினம் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைப்பதற்கான அனுமதியைக் கோரியிருந்தார். மறுபக்கத்தில் பன்னீர்ச்செல்வம் சார்பில் மைத்திரேயன் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை இருப்பதாகக் கூறியுள்ளார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்புவிடுத்தார். இந்த அழைப்பையேற்று மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகை சென்றிருந்த எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் 21ஆவது முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அவருடன் புதிய அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

கடந்த காலத்தில் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பலர் சசிகலாவின் பின்புலத்துடன் அமையவிருக்கும் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக செங்கோட்டையன் உள்ளிட்டவர்கள் இதில் உள்ளடங்குகின்றனர். அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட பன்னீர்ச்செல்வம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தவிர்ந்த ஏனைய அமைச்சர்கள் பழைய பொறுப்புக்களையே வகிக்கின்றனர்.

இதற்கிடையில், சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டமை மற்றும் பன்னீர்ச்செல்வம் உள்ளிட்ட பலரை கட்சியிலிருந்து நீக்கியமைக்கு எதிராக மைத்ரேயன் தலைமையிலான 9 எம்பிக்கள் நேற்று புதுடில்லி சென்று தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்தனர். அ.தி.மு.கவின் 'இரட்டை இலை' சின்னத்தைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும், சசிகலாவின் நியமனம் செல்லாது என்பதால் பொதுச் செயலாளருக்கான தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதேநேரம், ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சியும் ஆட்சியும் செல்வதை தடுப்போமென சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்த பின்னர் தனது வீட்டில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது பன்னீர்ச்செல்வம் இதனைத் தெரிவித்தார். அப்போது மக்கள் விரும்பும் ஆட்சி தொடரும் வரை தர்ம யுத்தம் தொடரும் எனவும் அவர் அங்கு கூறினார்.

முதலமைச்சராகப் பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி, இன்று(17) கர்நாடக அக்ரஹார சிறைச்சாலைக்குச் சென்று சசிகலாவைச் சந்திக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. 


Add new comment

Or log in with...