ஆஸி- இலங்கை உறவுகளை பலப்படுத்தும் ஒப்பந்தங்கள்;இரு தரப்பும் கைச்சாத்து | தினகரன்

ஆஸி- இலங்கை உறவுகளை பலப்படுத்தும் ஒப்பந்தங்கள்;இரு தரப்பும் கைச்சாத்து

 

அவுஸ்திரேலியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு நேற்று வியாழக்கிழமை இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் பல முக்கிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டன.

இரு நாடுகளுக்கிடையிலான அபிவிருத்தி பொருளாதாரம், மற்றும் விளையாட்டுத் துறை உள்ளிட்ட முக்கிய அம்சங்களைக் கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கைகள் இதன்போது கைச்சாத்திடப்பட்டன.

இந்த உடன்படிக்கைகள் நேற்று அவுஸ்திரேலிய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கைச்சாத்தாகின.

இரு நாடுகளுக்குமிடையிலான விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கான உடன்படிக்கையில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் அவுஸ்திரேலிய சுகாதாரத் துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆகியோர் கைச்சாத்திட்டனர். இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார்.

இதேவேளை விக்டோரியா மாநில தொழில் முகவர்கள் அமைப்பு வழங்கிய பகல் போஷன விருந்துபசாரத்தில் பிரதமர் உரையாற்றினார்.

இலங்கை மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் உயர் கல்வியை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் குடிவரவு குடியகல்வுச் சட்டங்களை விரிவுபடுத்தித் தருமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்நாட்டு அரச உயர் மட்டத்திடம் கோரிக்கை விடுத்தார். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் வழங்கியுள்ள சட்ட விரிவாக்கலை அவுஸ்திரேலியாவும் செய்வதற்கு கவனம் செலுத்துமாறும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தூதுக் குழுவுக்கு விக்டோரியா மாநில சிறு வியாபார, புதிய உற்பத்தி மற்றும் வர்த்துகத் துறை அமைச்சர் பிலிப் டெலிக்கிட்ஸ் தலைமையிலான பிராந்திய தொழில் முகவர்கள் அளித்த பகல் போஷன விருந்துபசாரத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு அனைத்து வழிகளையும் எடுத்துள்ளதாகவும் இந்து சமுத்திரத்தின் முத்து எனப்படும் இலங்கையை ஆசியாவின் பொருளாதார மத்திய நிலையமாக மாற்றுவதே தமது நோக்கமெனவும் பிரதமர் இங்கு தெரிவித்தார். அதற்கான ஒத்துழைப்பை பெற விக்டோரியா பிராந்தியத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறு இலங்கையின் அவுஸ்திரேலிய தூதுவரையும் அவர் கேட்டுக் கொண்டார். இலங்கையில் முதலீடு செய்வதற்கு கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் முதலீடு செய்ய அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு நாடுகளும் இணைந்து வேலை செய்தால் எந்தவொரு சவாலையும் வெற்றிகொள்ள முடியுமென விக்டோரியா மாநில அமைச்சர் பிலிப்ஸ் டெலடகிஸ் கூறினார்.

இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எடுத்த நடவடிக்கைகளால் பொருளாதார சவால்களை இலகுவாக வெற்றிகொள்ளக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையேயான உறவுகளை பொருளாதார, கலாசார, தேசிய கல்வி மற்றும் விவசாய துறைகளை முன்னேற்றுவதன் மூலமே பலப்படுத்த முடியுமென மேலும் அவர் கூறினார்.

வியாபார நடவடிக்கைகளுக்காக கொழும்புத் துறைமுகம் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இதனைப் பயன்படுத்த விக்டோரியா பிராந்தியம் முன்வருவதற்கு பிரதமரின் இவ்விஜயம் வழிகோலியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...