6 மாதத்தில் கட்சியை தினகரனிடமும் ஆட்சியை திவாகரனிடமும் வழங்குவதே சசிகலாவின் திட்டம் | தினகரன்

6 மாதத்தில் கட்சியை தினகரனிடமும் ஆட்சியை திவாகரனிடமும் வழங்குவதே சசிகலாவின் திட்டம்

 

அ.தி.மு.க.வை நிர்வகிக்கும் பொறுப்பு தினகரனுக்கும் அடுத்த ஆறு மாதத்தில் திவாகரனை முதல்வராக்கவும் திட்டம் வகுத்து கொடுத்து சசிகலா போயஸ் கார்டனில் இருந்து சிறைக்கு கிளம்பியுள்ளார்.

ஜெ. மறைவுக்குப் பின், கட்சி, ஆட்சி, ஜெ. சொத்து என அனைத்தையும் வளைத்தது மன்னார்குடி கும்பல். சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 7ஆம் திகதி இரவு ஓ.பி.எஸ். தனியாக பிரிந்து சசிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.

இருப்பினும் அன்று இரவே அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களை கார்டனுக்கு வரவழைத்து கூவத்துாரில் அடைத்தனர். தப்பிய 10 எம்.எல்.ஏக்கள் மட்டும் ஓ.பி.எஸ். பக்கம் சென்றனர்.

சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு பாதகமாக வந்தால் என்ன செய்வது என கடந்த ஒரு வாரமாக பல திட்டங்களை வகுத்தனர். முதல்வர் பதவியில் சசிகலாவுக்கு பதில் தினகரன் அல்லது திவாகரனை அமர வைக்க ஆலோசித்தபோது மக்களிடம் மேலும் எதிர்ப்பு வரும் என்பதால் எடப்பாடி பழனிச்சாமியையும் தேர்வு செய்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை வந்த தீர்ப்பில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதும், குடும்ப அளவில் சசிகலா, நடராஜன், தினகரன், திவாகரன் உள்ளிட்டோர் ஆலோசித்தனர். அதில் மக்களிடமும் கட்சி நிர்வாகிகளிடமும் பெரிய அளவில் புகார் இல்லாத மற்றும் அறிமுகமான தினகரனை கட்சியின் துணைப் பொதுச் செயலராக ஆக்கி கட்சி பணியை கட்டுக்குள் வைப்பது என்றும் முடிவானது.

கூடவே எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் முதற்கட்டமாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சியை அமைத்து அரசின் பாதுகாப்புடன் திவாகரனை ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட செய்து அடுத்த ஆறு மாதத்துக்குள் முதல்வராக்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

பரம எதிரிகளான தினகரன் - திவாகரன்சசிகலாவின் தம்பியான திவாகரனும் சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மூத்த மகனான தினகரனும் ஜெயின் நம்பிக்கையை பெற்றவர்கள். மிகவும் முரட்டு குணம் கொண்ட திவாகரன், 1998 முதல் கார்டனுக்குள் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டார்.

ஆனால் கட்சியினருடன் இணக்கமாக செயல்படுவதால் தினகரனை, 1999ல் பெரியகுளம் லோக்சபா தொகுதியில் ஜெ. நிறுத்தி வெற்றி பெற செய்தார். 2004ல் அதே தொகுதியில் தினகரன் தோல்வியடைந்தாலும் ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுக்கப்பட்டு டில்லி அரசியலை தினகரன் கவனித்தார்.

ஆனால் 2006 முதல் தினகரனும் கார்டனுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு 2011ல் சசிகலா கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டபோது தினகரனும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு முற்றிலும் வெளியேற்றப்பட்டார். இருப்பினும் இவரது மனைவி அனு, ஜெயா 'டிவி' இயக்குனராக கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்கிறார்.

ஆரம்ப காலம் முதல் தினகரன் மற்றும் திவாகரனுக்கு இடையே எப்போதும் ஏழாம் பொருத்தமாக தான் இருக்கும். சிறிய விஷயத்துக்கு கூட அடிக்கடி மோதிக்கொள்வது வழக்கம். தினகரனுக்கு எம்.பி. பதவி கொடுத்தது முதல் அத்தனை செயல்பாட்டிலும் சசிகலாவிடம் திவாகரன் எதிர்த்து வந்தார்.

இந்நிலையில் கட்சியை தினகரனிடமும் ஆட்சியை திவாகரனிடமும் வழங்க சசிகலா திட்டமிட்டுள்ளதால் அவர்களே மோதி உடைவர் என கட்சியினர் கூறுகின்றனர். 


Add new comment

Or log in with...