உள்ளூராட்சி அதிகாரங்கள் பறிப்பு; குற்றச்சாட்டை நிராகரிக்கிறது அரசு | தினகரன்

உள்ளூராட்சி அதிகாரங்கள் பறிப்பு; குற்றச்சாட்டை நிராகரிக்கிறது அரசு

 

கட்டடங்களை அகற்றும் அதிகாரங்களே தற்காலிகமாக எடுக்கப்பட்டன

நகர அபிவிருத்தி அதிகார சபையினூடாக உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை பறித்துள்ளதாக மாகாண முதலமைச்சர்கள் சிலர் தெரிவிக்கும் குற்றச்சாட்டை மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க நிராகரித்துள்ளார்.

சட்டத்தினூடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையே பயன்படுத்துவதாக குறிப்பிட்ட அவர் சட்டவிரோத கட்டடங்களை அகற்றுவதற்காக மாத்திரம் தற்காலிகமாக உள்ளூராட்சி சபைகளின் சிறு அதிகாரத்தை பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஊடக நிறுவன முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின் போதே அவர், இதனை தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையினூடாக அமைச்சு பறித்துள்ளதாக மேல் மாகாண முதல் அமைச்சர் இசுரு தேவப்பிரிய குற்றஞ்சாட்டியிருந்தார்.

சகல மாகாண முதலமைச்சர்களுடன் இணைந்து இதற்கு எதிராக மாகாண சபைகளின் அதிகாரத்தை பிரயோகிக்கப் போவதாகவும் அவர் எச்சரித்திருந்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர்:

இந்தக் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் கிடையாது. நாம் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை பறிக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவின் காலத்தில் இருந்து சட்டத்தினூடாக வழங்கப்பட்ட அதிகாரங்களையே நகர அபிவிருத்தி அதிகார சபை பயன்படுத்தி வருகிறது.

சட்டவிரோத கட்டடங்களை அகற்றுவதற்காகவே உள்ளூராட்சி சபைகளின் சிறு அதிகாரம் பெறப்பட்டது. உள்ளூராட்சி தேர்தல் நடந்து புதிய தலைவர்கள் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அந்த அதிகாரத்தை மீள வழங்க முடியும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம் 


Add new comment

Or log in with...