சர்வாதிகாரத்தின் மொத்த வடிவம் சசி | தினகரன்

சர்வாதிகாரத்தின் மொத்த வடிவம் சசி

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு முற்றிலும் எதிரானவர் சசிகலா என்பதை விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகுதான் அவரது முழுமையான சுயரூபம் வெளியுலகுக்குத் தெரிய வந்து ஒவ்வொரு செயலையும் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர்.

ஜெயலலிதா மருத்துவமனைக்குப் போனது முதல் சசிகலா ஆட்சி தொடங்கியது. கட்சியை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து விட்டார். அவர் செய்து வரும் ஒவ்வொரு செயலும் முழுமையாக ஜெயலலிதாவுக்கு எதிரானதாகவே இருக்கிறது. ஜெயலலிதா செய்து வந்த ஒவ்வொரு செயலையும் அவர் ஒதுக்கி ஓரம் தள்ளிக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதா நேசித்தவர்களை தூக்கி எறிந்து வருகிறார். ஜெயலலிதாவுக்குப் பிடிக்காததை மட்டுமே தேடித் தேடி செய்கிறார்.

இதுவரை அடிமைகளாக இருந்து வந்த அதிமுகவினரை கொத்தடிமைகளாக்கும் முயற்சியில் சசிகலா இறங்கியுள்ளதாகவே தெரிகிறது. காரணம், அவர் வைத்ததுதான் சட்டம் என்ற நிலைக்கு கட்சியினரை கொண்டு சென்று விட்டார். அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் அதைத்தான் நிரூபித்து வருகிறது.

ஜெயலலிதாவுக்கு எதெல்லாம் பிடிக்குமோ அதெல்லாம் சசிகலாவுக்குப் பிடிப்பதில்லை. பன்னீர்செல்வம் இதற்கு நல்ல உதாரணம். ஜெயலலிதாவிடம் கூட இவ்வளவு அசிங்கப்பட்டிருக்க மாட்டார் ஓ.பி.எஸ். ஆனால் சசிகலா குடும்பத்திடம் போதும் போதும் என்று கூறும் அளவுக்கு அவர் அவமானப்படுத்தப்பட்டு விட்டார் அவர்.

அடுத்து தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை ஏதோ 'அடிமைப் பெண்' படத்தில் வரும் அடிமைகள் போல கொண்டு போய் அடைத்து வைத்திருக்கும் செயல். அவர்கள் தனக்கு ஆதரவாக இருப்பவர்கள் என்று சொன்னால் அவர்களை சுதந்திரமாக நடமாட விட்டிருக்கலாம். ஆனால் அதைச் செய்யாமல், குடும்பம் குட்டிகளுடன் கூட பேச விடாமல் அடைத்து வைத்திருக்கும் செயல் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

ஜெயலலிதா கட்சியின் அடிப்படைத் தொண்டர்களை மதிப்பார். அவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் செயல்படுவார். ஆனால் சசிகலா நேர்மாறாக இருக்கிறார். தனக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டுமே போதும் என்ற முடிவுக்கு அவர் வந்து விட்டார். சில குறிப்பிட்ட தலைவர்களை மட்டுமே அவர் தன்னுடன் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதாவைப் பொறுத்தவரை தனது குடும்பத்துக்கு வேண்டியவர்களை அவர் தூரவே வைத்திருந்தார். தீபக்கோ, தீபாவோ நெருங்க விடவில்லை. சொந்த அண்ணனைக் கூட நெருங்காதவர் அவர். ஆனால் சசிகலா முழுமையாக தனது குடும்பத்தினரை வைத்துக் கொண்டுதான் அரசியல் செய்கிறார். சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தைத் தாண்டி அதிமுக செயல்படக் கூடாது என்றும் அவர் விரும்புகிறார்.

அதிமுக தலைவர்களும் கூட தாங்கள் சேர்த்து வைத்தப் பணத்தைக் காப்பதற்காகவும், புதிதாக சேர்ப்பதற்காகவும் அடிமை நிலைக்கு மாறத் தயாராக இருக்கின்றனர். இதனால் சசிகலா குடும்பம் என்ன சொன்னாலும் வாயை மூடிக் கொண்டு கேட்கவும் அவர்கள் தயாராகி விட்டனர். கொத்தடிமை வாழ்க்ைக என்றாகி விட்டது அதிமுகவினர் நிலை.

சுயமரியாதை இழந்த அடிமைகளாக உள்ளனர் அ.தி.மு.க சட்ட மன்ற உறுப்பினர்கள்.


Add new comment

Or log in with...