எடப்பாடி கே. பழனிச்சாமி அடுத்த முதல்வராகிறார்? | தினகரன்

எடப்பாடி கே. பழனிச்சாமி அடுத்த முதல்வராகிறார்?

 
 
கைது செய்யப்பட்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவால் முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட அமைச்சர் (எடப்பாடி தொகுதி) கே. பழனிச்சாமி இன்னும் சில மணித்தியாலங்களில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவுள்ளதாக இந்திய ஊடகங்கள் அறிவித்துள்ளன.
 
குறித்த விடயம் தொடர்பில் தமிழ்நாட்டின் ஆளுநர் வித்யாசாகர் ராவ், தன்னை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
இதையடுத்து இதுவரை நிலவி வந்த பெரும் அரசியல் குழப்பத்துக்கு இன்று விடை கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
 
இதனால் தற்போது அ.தி.மு.க. எம்.எல்.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கூவத்தூரில் பெரும் கொண்டாட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
 
ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி உள்பட 4 மூத்த அமைச்சர்களும் தலைவர்களும் அவரை சந்திக்க கூவத்தூர் விடுதியில் இருந்து புறப்பட்டு ஆளுநர் மாளிகை நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
எடப்பாடி பழனிச்சாமியிடம் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு ஆட்சியமைக்குமாறு ஆளுநர் உத்தரவிடுவார் என தெரிவிக்கப்படுகின்றது. 
 
ஆயினும், தற்போதைய காபந்து முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இதே போன்ற ஒரு வாய்ப்பை ஆளுநர் வழங்குவார் என தெரிவிக்கப்படுகின்றது.
 
அவர் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டாலோ அல்லது போதுமான ஆதரவு தனக்கு இல்லை எனத் தெரிவித்து, பதவியை இராஜினாமா செய்தாலோ, எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க அழைப்பு விடுப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
 
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆளுநருக்கு வழங்கியுள்ள யோசனையின்படி, பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை ஒரே நேரத்தில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் உத்தரவிடலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
ஆயினும் இது குறித்தான சர்ச்சைக்கு இன்று (16) தீர்வு கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
 
 

Add new comment

Or log in with...