சுமந்திரன் எம்.பியை கொல்ல சதி; சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

 
சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தமை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐந்து பேரையும் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இதேவேளை இரண்டாவது சந்தேக நபரை வெளியில் கொண்டு சென்று விசாரணை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
சட்டவிரோதமாக அபாயகரமான ஆயுதங்கள் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியது போன்ற குற்றச்சாட்டுக்களில் சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
 
குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில், நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதோடு, குறித்த ஐவரையும் இன்று (13) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்டப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் ஐந்து பேரையும் இன்றைய தினம் (13) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தனர்.
 
இன்று குறித்த நான்கு வழக்குகளையும் 85 எனும் இலக்கத்தின் கீழ், நான்கு வழக்குகளையும் ஒரு வழக்குகளாக பதிவு செய்யப்பட்டது.
 
இதன்போது குறித்த நபர்கள் மேற்படி குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டிருப்பதாகவும் இவர்களிடம் மீளவும் வாக்குமூலங்கள் பதிவுசெய்ய வேண்டியிருப்பதாகவும் பயங்காரவாத தடுப்புப் பொலிசார் அனுமதிகோரியிருந்தனர்.
 
இதனை கவனத்தில் எடுத்த மன்று எதிர்வரும் 14, 15, 16ஆம் திகதிகளில் குறித்த ஐந்து பேரும் அநுராதபுரம் சிறைச்சாலையில் வைத்து வாக்குமூலங்களை பெறுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இதேவேளை இரண்டாவது சந்தேகநபரை வெளியிடங்களுக்குக்கொண்டு சென்று சில விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அதற்கான அனுமதியை வழங்குமாறு பொலிஸார் கோரியிருந்தனர்.
 
குறித்த சந்தேகநபரை 20, 21, 22 ஆகிய திகதிகளில் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து வெளியில் அழைத்துச்சென்று விசாரணைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
 
இதேவேளை குறித்த சந்தேகநபரை வெளியில் அழைத்துச் சென்று விசாரிக்கப்படும் நிலையில், அவர்களுக்கு உரிய பாதுகாப்பில்லை என்றும், இவை சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களாகவே இருக்கின்றன எனவும் தெரிவித்த சந்தேகநநபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளான திருமதி எஸ்.விஜயராணி, சட்டத்தரணி அர்ச்சுனா ஆகியோர், இவர்களது பாதுகாப்பு உறுதிபபடுத்தப்படவேண்டும் என்று  மன்றில் தெரிவித்திருந்தனர்.
 
(பரந்தன்குறுப்நிருபர் - யது பாஸ்கரன்)
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...