Home » மனித உயிர்களுக்கு உரிய மதிப்பளிப்பது அவசியம்!

மனித உயிர்களுக்கு உரிய மதிப்பளிப்பது அவசியம்!

by Rizwan Segu Mohideen
September 30, 2023 7:04 am 0 comment

வாகனங்களின் பெருக்கம் அதிகரித்து விட்டதனால், வீதிகளில் இன்று பயணம் செய்வதே சிரமமாக இருக்கின்றது. நகரப்பகுதிகளில்தான் வாகன நெருக்கடி மிகவும் அதிகம். வீதிகளை வாகனங்கள் முற்றாக ஆக்கிரமித்துக் கொண்டதனால், பயணங்கள் தாமதமாகின்றன. உரிய இடத்தை திட்டமிட்ட நேரத்தில் சென்றடைய முடிவதில்லை. வீதியில் வாகனங்களுக்குள் நீண்ட நேரம் காத்துக் கிடப்பதே பெரும்பாடாகப் போய்விட்டது.

சனத்தொகை அதிகரித்து வருவதைப் போன்று, மக்களின் தேவைக்ேகற்ப வாகனங்களின் எண்ணிக்ைகயும் அதிகரித்து வருகின்றது. நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவுவதாகக் கூறினாலும், வாகனங்களின் பெருக்கத்துக்கு அளவேயில்லை. புதுப்புது வாகனங்கள் வீதிக்கு வந்து கொண்டேயிருக்கின்றன.

எரிபொருளுக்கும் கியூ.ஆர் கோட்டா முறைமை தற்போது நடைமுறையில் இல்லை. வாகனங்களுக்குரிய எரிபொருளை தாராளமாகவே நிரப்பிக் கொள்ள முடிகின்றது. எனவே வீதிகளில் வாகனங்களுக்குக் குறைவில்லை. நகரங்களில் காலையிலும், மாலையிலும் வாகனநெருக்கடியைப் பார்க்கின்ற போது, நடந்து செல்வதே பரவாயில்லை என்று நினைக்கத் தோன்றுகின்றது. அதுமாத்திரமன்றி, பொருளாதார நெருக்கடியென்பது உண்மையிலேயே எமது நாட்டில் உள்ளதா என்ற சந்தேகமும் எழுகின்றது.

வீதிகளில் வாகன நெருக்கடி என்பது ஒருபுறமிருக்க, விபத்துகள் அதிகரித்து வருவது மற்றொரு பாரிய பிரச்சினையாக உள்ளது. நாட்டில் பாரிய விபத்துகள் இடம்பெறாத நாள் கிடையாது. தினந்தோறும் நாட்டில் எங்காவது ஓரிடத்தில் பாரிய விபத்துகள் இடம்பெறுவதும், மக்கள் உயிரிழப்பதும் வழமையாகிப் போயுள்ளன. இலங்கையில் தினந்தோறும் சராசரியாக எட்டு தொடக்கம் பத்துப் பேர் வரை வீதிவிபத்துகளில் உயிரிழப்பதாகவும், மேலும் பலர் படுகாயமடைவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீதிவிபத்துகளில் படுகாயமடைபவர்களில் பலர் நிரந்தரமாகவே மோசமான உடல் ஊனங்களுக்கு ஆளாகின்றனர். வாழ்நாள் முழுவதுமே அவர்கள் வெளியே நடமாட முடியாத நிலைமைக்கும் உள்ளாவதுண்டு. வீதிவிபத்துகளில் காயமடைகின்றவர்களுக்கு மருத்துவ சிகிச்சையளிப்பதற்காக அரசாங்கம் அதிகளவு பணத்தைச் செலவிட வேண்டியுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை வாகனவிபத்துகளால் பொருளாதாரத்துக்கும் மறைமுகமாக பாதிப்பு ஏற்படுகின்றது எனலாம்.

நாட்டில் வாகனவிபத்துகள் அதிகரித்து வருவதற்குக் காரணங்கள் உள்ளன. வாகனங்களின் பெருக்கம் அதிகரித்து வருவது முதலாவது காரணமாகும். நாட்டின் வீதிகள் யாவும் சீராக உள்ளது இரண்டாவது காரணம். முன்னரைப் போன்று இல்லாமல் வாகனங்கள் மிகவும் விரைவாகச் செல்வதற்கு இன்றைய நவீன வீதிகளே காரணமாகும். இந்த அதிகரித்த வேகமே மிகமோசமான வாகனவிபத்துகளை ஏற்படுத்துகின்றது.

இவற்றுக்கு அடுத்த காரணங்களாக சாரதிகளின் கவனயீனம், பேருந்துகளுக்கிடையிலான போட்டிகள் போன்ற பல விடயங்களைக் குறிப்பிடலாம். தனியார் பஸ்கள் நாட்டில் அதிகரித்து விட்டன. அதுவும் தூரஇடங்களுக்கான சேவையில் ஈடுபடும் பஸ்கள் அதிகரித்து விட்டன. தனியார் பஸ்கள் அதிகரித்து விட்டதனால் அவற்றுக்கிடையில் போட்டாபோட்டிகளும் அதிகரித்து விட்டன. அடுத்த பயணத்துக்குரிய இடத்தைப் பிடித்து விடுவதற்காக அதிவேகமாக பஸ்ஸைச் செலுத்திச் செல்லும் போது விபத்துகள் தவிர்க்க முடியாதவையாகி விடுகின்றன.

தனியார் பஸ்களின் சாரதிகளில் பலர், வீதியில் பயணம் செய்கின்றவர்களை மனிதர்களாகக் கருதுவதில்லை. மக்களை சாதாரண பிராணிகளாகக் கருதியே வாகனங்களை அலட்சியமாகச் செலுத்துகின்றனர். வீதிக்கடவைக் கோடுகளைக் கூட தனியார்பஸ் சாரதிகள் பலர் கவனத்தில் கொள்வதில்லை. பாதசாரிகள் சமிக்ைஞ விளக்குகளைப் பார்த்து வீதியைக் கடக்க முற்படும் போது, வாகனங்களில் மோதுண்டு பலியான சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளன.

போக்குவரத்து விதிமுறைகளை அலட்சியம் செய்யும் விதத்திலேயே தனியார்பஸ் சாரதிகள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் பலர் நடந்து கொள்வதைக் காண முடிகின்றது. நாட்டில் இடம்பெறுகின்ற விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு தனியார் பஸ்களும் முச்சக்கரவண்டிகளுமே அதிகளவில் காரணமாக இருப்பதாக வெளிவருகின்ற தகவல்களில் உண்மை இல்லாமலில்லை.

வாகன விபத்துகள் அதிகரித்து வருவது குறித்து போக்குவரத்துப் பொலிசார் அதிகூடிய கவனம் செலுத்த வேண்டுமென்று மக்கள் நீண்ட காலமாகவே கோரிக்ைக விடுத்து வருகின்றனர். வீதிச்சமிக்ைஞ விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள சந்திகளில் கடமையில் நின்று கொண்டு, சமிக்ைஞ விளக்குகளை அலட்சியம் செய்கின்ற சாரதிகளுக்கு அபராதம் விதிப்பது மாத்திரமே போக்குவரத்துப் பொலிசாரின் கடமையல்ல. மற்றைய இடங்களில் தவறிழைக்கின்ற சாரதிகள் மீதும் உரிய சட்டநடவடிக்ைக மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் மக்களின் கருத்தாகும்.

மனித உயிர்கள் பெறுமதியானவை. மனித உயிர்களுக்கு மதிப்பளிக்கத் தவறுகின்ற சாரதிகளுக்கு மன்னிப்பு அளிக்கப்படலாகாது!

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT