தீர்மானத்திற்கு அமையவே எழுக தமிழில் அனந்திக்கு வாய்ப்பு வழங்கவில்லை | தினகரன்

தீர்மானத்திற்கு அமையவே எழுக தமிழில் அனந்திக்கு வாய்ப்பு வழங்கவில்லை

 
எழுக தமிழ் மேடையில் ஏறுவதற்கு அனந்தி சசிதரன் வேண்டுகோளை முன்வைத்திருந்தார் ஆயினும் எமது தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவின் தீர்மானத்தின்படி தமிழ் மக்கள் பேரவையிலுள்ள அங்கத்தவர்களைத் தவிர வேறு எவரும் எழுக தமிழ் மேடைப் பேச்சுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதாலேயே அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என, அதன் இணைத் தலைவர் தம்பிப்போடி வசந்தராஜா தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு எழுக தமிழ் நிகழ்வில் பெண்களுக்குப் மேடையில் பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், நேற்று (12) இக்கருத்தை அவர் தெரிவித்தார்.
 
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,
 
எழுக தமிழோடு இணைந்து கொள்வதற்கு பெண்கள் அமைப்புக்கள் துணிவோடு முன்வரவில்லை.
 
சிங்களத் தலைவர்கள் உட்பட வேறு கட்சித் தலைவர்களும் மட்டக்களப்பு எழுக தமிழ் மேடையில் உரையாற்றுவதற்கு வேண்டுகோள் விடுத்துக்  கொண்டிருந்தார்கள். அவர்களில் எவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
 
அனந்தி யாழ்ப்பாணத்தில் வைத்தே தான் மட்டக்களப்பு எழுக தமிழ் மேடையில் உரையாற்றுவதற்கு வாய்ப்பளிக்குமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் ஆனால் அதற்கு தாங்கள் மறுத்து விட்டதாகவும் தமிழ் மக்கள் பேரவை வடக்குப் பிரிவால் எனக்கு அறிவிக்கப்பட்டது.
 
அனந்தி மட்டக்களப்புக்கு வருகை தருகின்றார்,  மேடைப் பேச்சுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார் ஆனாலும், 
அவையின் தீர்மானத்திற்கு அமைவாக, மட்டக்களப்பு எழுக தமிழ் மேடையில் உரையாற்றுவதற்கான அனுமதியை அனந்திக்கு வழங்க முடியாது என்று தெளிவுபடுத்தியுள்ளோம். அதனை அவர் ஏற்றுக் கொண்டுதான் மட்டக்களப்புக்கு வந்து எழுக தமிழ் நிகழ்வுகளில் பங்குபற்றுகின்றார் என்பதையும் எனக்கு அறிவித்தார்கள்.
 
அனந்தி தனது அமைப்பை தமிழ் மக்கள் பேரவையில் இணைத்துக் கொண்டிருந்தால் அவருக்குப் பேசுவதற்கு வாய்ப்பளித்திருக்க முடியும்.
தமிழ் மக்கள் பேரவையில் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் என்பன இணைந்து கொண்டுள்ளன.
 
தமிழ் மக்கள் பேரவை உருவாகி இப்பொழுது ஒன்றரை வருடங்கள் கழிந்து விட்டது. ஆனால், இதிலே அனந்தி ஏன் தனது அமைப்பை இணைத்துக் கொள்ளவில்லை என்பதற்கான காரணம் நமக்குத் தெரியாது.
 
பெண்கள் தங்களுக்கான குரலாக தாங்களே நேரடியாக எழுக தமிழில் உரையாற்ற வேண்டும் என்கின்ற கோரிக்கையை எவரும் முன் வைத்திருக்கவுமில்லை. அப்படி ஏதேனும் கோரிக்கைகள் வந்திருந்தால் அதனைப் பரிசீலித்திருக்கலாம்.
 
மேலும், மட்டக்களப்பிலுள்ள எத்தனையோ பெண்கள் அமைப்புக்களை தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து கொள்ளுமாறு நேரில் சென்று அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தோம். ஆனால், அந்த பெண்கள் அமைப்புக்கள் எவையும் துணிச்சலோடு முன்வரவில்லை.
 
இந்த அமைப்பில் சேர்ந்து கொள்வதற்கு அவர்கள் அச்சத்தோடு இருக்கின்றார்கள்.
 
தமிழ் மக்கள் பேரவையை ஓர் ஆயுதக் குழு என்று நினைத்து இந்த அமைப்போடு இணைந்து கொள்வதற்கு அச்சப்படுவது போல் தெரிகின்றது. இந்த அமைப்பில் எந்த அமைப்பையும் நாங்கள் வலிந்திழுத்து வந்து இணைத்துக் கொள்ள முடியாது.
 
எமது எழுக தமிழ் பிரகடனத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுகச்கு வாழ்வாதாரத்திற்கு வழிவகை கண்டாக வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. பெண்களை நாம் புறக்கணிக்கவில்லை  என்றார், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான மட்டக்களப்பு பிரதிநிதி தம்பிப்போடி வசந்தராஜா தெரிவித்தார்..
 
(பெரியபோரதீவு தினகரன் நிருபர் - வ.சக்திவேல்)
 

Add new comment

Or log in with...