3 பொலிஸ் குழுக்கள் விசாரணை | தினகரன்

3 பொலிஸ் குழுக்கள் விசாரணை

 

* தொடர்ந்தும் கொலை அச்சுறுத்தல் இருப்பதாக டொக்டர் சமீர தெரிவிப்பு

* சைட்டம் கற்கை நெறி சர்வதேச மருத்துவ கற்கைகளுக்கு நிகரானது தலைவர் நெவில் பெர்னாண்டோ

மாலபே சைட்டம் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி டாக்டர் சமீர சேனாரத்னவின் கார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

இதற்கிணங்க முல்லேரியா பொலிஸார் மற்றும் மிரிஹானை விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மிரிஹானைப் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை நேற்று நண்பகல் அரச இரசாயன பகுப்பாய்வாளர் சம்பவ இடத்திற்குச் சென்று பரிசீலனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மாலபே சைட்டம் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி டாக்டர் சமீர சேனாரத்னவின் கார் மீது நேற்று முன்தினம் இரவு 08.30 மணியளவில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றதாக அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சைட்டம் நிறுவனத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை  என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, 'நான் இந்த நிறுவனத்தின் ஒரு தனியாள் மட்டுமே. நான் பதவி விலகினால் அந்தப் பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்படுவார். என்னைக்கொல்ல நினைப்பதால் கொலையாளிகள் எதை எதிர்பார்க்கிறார்களோ தெரியாது' என்றும் டாக்டர் சமீர சேனாரத்ன தெரிவித்தார்.

சைட்டம் மாணவர்கள் தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்பு வெளியான மறுநாளிலிருந்தே எனக்கு தொலைபேசியினூடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக முல்லேரியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தேன். அத்துடன் கடந்த 3ஆம் திகதி கொலை அச்சுறுத்தல் கடிதம் வந்தது. இந்நிலையிலேயே, நேற்று முன்தினமிரவு என்மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது. எமது வளர்ச்சியை சகித்துக்கொள்ள முடியாதவர்களே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்றும் கூறினார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்பத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் பிரதம நிறைவேற்றதிகாரி டாக்டர் சமீர சேனாரத்ன மேலும் கருத்து தெரிவிக்கையில், சாதாரண குடும்பத்திலிருந்து வந்த நான் மருத்துவக் கல்வியை ரஷ்யாவில் தொடர்ந்தேன். சைட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அங்கு கடமையாற்றி வருகிறேன்.

மாலபே மருத்துவக் கல்லூரியின் ஸ்தாபகரான டாக்டர் நெவில் பெர்னாண்டோ வைத்தியக் கல்லூரியை ஆரம்பிப்பதற்கு முன்னதாக சுகாதார அமைச்சு, மருத்துவ பேராசிரியர்கள், இலங்கை மருத்துவ சங்கம் உட்பட அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அப்போது எவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அப்போது மருத்துவர்கள் சங்கம் அரச வைத்தியத்துறையுடன் இணைந்து செயற்படுமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்றே அவர் இத்திட்டத்தை முன்னெடுத்தார்.

பேராசிரியர் லலிதா மெண்டிஸ் வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பல தடவைகள் நாம் அவரை சந்தித்து பேசினோம். அவரும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கேற்றவாறு சில ஆலோசனைகளை எமக்கு வழங்கினார்.

பெருந்தொகைப் பணத்தை செலவு செய்து ரஷ்யா செல்லும் இலங்கை மாணவர்கள் அங்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறார்கள். ஆறு வருடங்களில் கற்கை நெறியை முடித்துவிட்டு திரும்புவோர் வைத்தியர்களாக தம்மை பதிவுசெய்துகொள்ள இங்கு நடைபெறும் பரீட்சையில் சித்தியடைய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எமது கல்லூரி மாணவர்களின் பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருக்குமாயின் அவற்றை அலுவலகத்திற்கு வந்து பார்த்துக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த சைட்டம் ஸ்தாபகரும் தலைவருமான டாக்டர் நெவில் பெர்னாண்டோ:

மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இலங்கை மருத்துவ சபையில் பட்டதாரிகளை பதிவு செய்யுமாறு வழங்கப்பட்ட தீர்ப்பை நான் வரவேற்கின்றேன். இலங்கையின் மருத்துவத் துறையின் தரத்தை மேம்படுத்துவதற்கு மாலபே மருத்துவக் கல்லூரி தனது பங்களிப்பை வழங்கும். இதற்காக சகல தரப்பினருடனும் இணைந்து உயர்தரம் வாய்ந்த வைத்தியர்களை உருவாக்குவதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க நான் உறுதிபூண்டுள்ளேன்.

இலங்கையில் காணப்படும் சட்ட விதிமுறைகளின் பிரகாரம் 1988ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்ட மருத்துவ விதிமுறைகள் சட்டத்தின் 29(1) (டி) (i) பிரிவின் பிரகாரம் இலங்கை மருத்துவ சங்கத்தினால் அரச பல்கலைக்கழகங்களில் தமது பட்டப்படிப்பை பூர்த்தி செய்த மாணவர்களை பதிவு செய்வதைப் போன்று மருத்துவம் மற்றும் சத்திர சிகிச்சையில் இளமாணி பட்டம் பெற்ற மாணவர்களை பதிவு செய்ய வேண்டிய பொறுப்பு குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. என்றபோதும் சைட்டம் பட்டதாரிகளுக்கு பதிவுகளை வழங்க அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழங்குத் தாக்கல் செய்யப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியதன் மூலம் சைட்டம் பட்டதாரிகளுக்கு நீதி கிடைத்துள்ளது. இவர்கள் தற்போது இடைக்கால மருத்துவர்களாக இணைந்துகொள்ள முடியும். பாரிய எதிர்ப்புகளால் கடுமையான உளைச்சல்களுக்கு ஆளாகியிருந்த மாணவர்களுக்கு நீதி கிடைத்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு எதிராக சில தரப்பினரால் முன்னெடுத்துச் செல்லப்படும் மருத்துவ பட்டதாரிகளின் தரம் மற்றும் நியமங்களை பேணுவது குறித்த பிரச்சினைகளை எழுப்புவது வேதனையளிக்கிறது. நாட்டில் உயர்தரம் வாய்ந்த தனியார் மருத்துவ கல்வி காணப்பட வேண்டுமானால் ஒழுங்குபடுத்தல்கள், மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு செயற்பாடுகளை மேற்கொண்டு குறித்த நிறுவனங்களுக்கு உதவிகளை வழங்க வேண்டியது இலங்கை மருத்துவ சங்கத்தின் பொறுப்பாகும். இதுபோன்ற செயற்பாடுகளை சைட்டம் வரவேற்கிறது.

சைட்டத்தினால் வழங்கப்படும் பட்ட கற்கைநெறியானது சர்வதேச மருத்துவ கல்வியகங்களினால் வழங்கப்படும் கற்கைகளுக்கு நிகரானதாகவும் அவற்றைவிட சிறந்ததாகவும் அமைந்துள்ளது. அத்துடன் பட்டதாரிகளுக்கு வழங்கும் தொழிற்பயிற்சி போதுமானதாக அமைந்துள்ளதுடன் அவர்கள் இடைக்கால மருத்துவர்களாக தெரிவாவதற்கு போதிய தகைமைகளைக் கொண்டுள்ளனர்.

பொறுப்பு வாய்ந்த வகையில் முன்னெடுக்கப்பட்ட இறுதிப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பரீட்சை இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் வழிமுறைகளின் பிரகாரம் அமைந்துள்ளதுடன் அரச பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்படும் பரீட்சைகளுக்கு நிகரானதாக அமைந்துள்ளன.

(பெ.வீரசிங்கம்)


Add new comment

Or log in with...