முதலமைச்சர் பதவி பூரிப்பு தொடருவதில் சந்தேகம்! | தினகரன்

முதலமைச்சர் பதவி பூரிப்பு தொடருவதில் சந்தேகம்!

 

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா இன்றோ நாளையோ தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்பதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்பதற்கு எதிராக கையெழுத்து இயக்கம் ஒன்று ஒன்லைனில் நடத்தப்பட்டு வருகின்றது.

சசிகலாவுக்கு எதிராக change.org என்ற இணையதளத்தில் ஒன்லைன் மூலம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன. பெப்ரவரி 05 இந்த கையெழுத்து இயக்க தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை 75,000 க்கும் அதிகமான கையெழுத்துக்கள் சசிகலா முதல்வராவதற்கு எதிராக பெறப்பட்டுள்ளன. இந்த கையெழுத்து தளம் தொடங்கப்பட்ட 15 நிமிடத்திற்குள் 10,000 பேர் தங்களின் கையெழுத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

ஒன்லைன் மூலம் பெறப்படும் இந்த கையெழுத்துக்களை ஜனாதிபதி, தமிழக கவர்னர் மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையகத்துக்கு அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா முதல்வராக பொறுப்பேற்றால் நாடு தாங்காது' என பல தரப்பினரும் தங்களின் கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

சுப்பிரமணிய சுவாமி, தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின், கமலஹாசன், பாமக நிறுவனர் ராமதாஸ், தி இந்து பத்திரிக்கை குடும்பத்தாரும், அதன் இயக்குனருமான மாலினி பார்த்தசாரதி ,காங். செய்தித் தொடர்பாளர் குஷ்பூ, பஞ்சாப் அரசியல் விமர்சகர் சாத்வி கோஷ்லா ,இயக்குநர் தங்கபச்சன் உட்பட ஏராளமானோர் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

"போயஸ் கார்டனில் இருந்து சசிகலா உடனே வெளியேற வேண்டும். அவரை முதல்வராக தேர்ந்தெடுத்த முடிவை அ.தி.மு.க -எம்.எல்.ஏக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்,'' என, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

கார்த்தி சிதம்பரம் : சொந்தக் காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக பன்னீர்செல்வம் கூறி இருக்கும் முதுகெலும்பு இல்லாத்தனம் வேதனை அளிக்கிறது. தமிழக சட்டசபையை கலைத்து விட்டு, புதிதாக தேர்தல் நடத்தலாம். இது தமிழகத்திற்கே அவமானம். இனி தமிழகத்தின் தலைவிதி என்ன? அரசியல் சார்பற்ற இளைஞர்கள் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இவ்வாறு அரசியல் முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர்.

அ.தி.மு.கவின் சட்டசபைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா, தமிழக முதல்வராக இன்று 7 அல்லது எதிர்வரும் 9ம் திகதி பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சசிகலா புஷ்பா பிரதமர் மோடி மற்றும் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ்வுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

சசிகலா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. அவர் அடிப்படையில் எந்த கட்சி பணியும் செய்தது கிடையாது. சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்றால், தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பிரதமர், கவர்னர் தலையிட்டு சசிகலா முதல்வர் பதவியில் அமர்வதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

தமிழக மக்கள் கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஒரு வாக்குதான் போட்டார்கள். ஆனால் தற்போது அவர்கள் 4-வது முதல்வரை சந்திக்கப் போகிறார்கள். இது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் முதல்- அமைச்சர் பதவிக்கு போட்டி போடுவது கேலிக்கூத்தாக உள்ளது. ஜெயலலிதா, சசிகலா சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் அடுத்த வாரம் உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இதில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 100 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தீர்ப்புக்கு பின்னர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் முதல்- அமைச்சர் ஆவார்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட சசிகலா முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவது தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுஒருபுறமிருக்க, ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கும் பங்குள்ளதாக மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இறந்த போதிலும் மற்ற மூவர் மீதான குற்றச்சாட்டுக்கு தீர்ப்பு தரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்துள்ள நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் இன்று அறிவித்தது.

முதல்வர் பதவியில் உட்கார்ந்து விட தயாராகிவிட்ட சசிகலாவுக்கு டெல்லியில் இருந்து இன்று வந்துள்ள செய்தி பேரிடியாக உள்ளது.

சசிகலா முதல்வராகப் போகிறாரே என்ற கொந்தளிப்பில் தமிழகமே ஆவேசத்தில் இருக்கிறது. தற்போது சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு போனால் மன்னார்குடி திவாகரனுக்குதான் முதல்வராகும் வாய்ப்புகள் 50% இருப்பதாக அதிர்ச்சிச் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயலலிதாவின் உதவியாளர் என்பதை பயன்படுத்தி அதிமுகவை கபளீகரம் செய்தவர் சசிகலா.

அவரை தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்க முடிவு செய்திருக்கிறது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 'கூட்டம்'. சசிகலாவின் இந்த பேராசைக்கு ஆப்பு வைக்கும் வகையில் சொத்து குவிப்பு வழக்கில் ஒருவாரத்துக்குள் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க இருக்கிறது. இதனால் சசிகலாவுக்கு பதில் அடுத்த முதல்வர் யார் என விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறது மன்னார்குடி கும்பல்.

இதேவேளை, அமைச்சரவை மாற்றத்தை கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். யாருக்கு எந்தப் பதவி என்பது குறித்த விவாதம்தான் தலைதூக்கியுள்ளது. மீண்டும் அவை முன்னவராகவும் நிதியமைச்சராகவும் பன்னீர்செல்வம் தொடர்வதற்கு வாய்ப்பு அதிகம். முதலமைச்சரிடம் உள்ள துறைகளில், காவல்துறையை தவிர்த்து வேறு சில துறைகளை பன்னீர்செல்வம் பக்கம் ஒதுக்குவது குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருகிறார் சசிகலா.

புதிய அமைச்சரவைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது போயஸ் கார்டன். சுபயோக சுப தினத்தில் கோட்டையை நோக்கிப் பயணமாக இருக்கிறார் சசிகலா. அதற்குள், 'சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு வாரத்திற்குள் தீர்ப்பு' என அதிர வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். 'பொதுச் செயலாளருக்கு எதிராக தீர்ப்பு வந்தாலும், இன்னொரு முறை தற்காலிக முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தை அமர வைக்க மாட்டார் சசிகலா' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில்.

காக்கைக் கூட்டத்தை விரட்டியடிப்பேன்' என்று தீபா சொன்னது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தீபாவின் ஆதரவாளர்கள் கூறுகையில், "சசிகலா, முதல்வராவதை தீபா விரும்பவில்லை. இதனால்தான் காக்கைக் கூட்டத்தை ஒழிப்பேன் என்று பாடல் வரி மூலம் எங்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளார்.

இது எங்களுக்கு புதுத்தெம்பை கொடுத்துள்ளது.

மக்களின் ஆதரவு ஜெயலலிதாவுக்குப் பிறகு தீபாவுக்குத்தான் கிடைத்துள்ளது. நிச்சயம் சசிகலாவை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

தீபாவின் அரசியல் வருகை சசிகலாவுக்கு கடும் நெருக்கடியைத் தரும் என்பதால் அவசர அவசரமாக சசிகலாவை முதல்வராக்க அவரது தரப்பினர் முயல்கின்றனர்"என்றனர்.

இந்நிலையில், சசிகலாவை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார். "சொத்துக்குவிப்பு வழக்கில் விரைவில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வர உள்ளது.

இதனால் மறுபடியும் பன்னீர்செல்வம்தான் முதல்வர் ஆவார்" என்று அன்புமணி கூறினார். சென்னையில் பிறந்து வளர்ந்தவர் இந்திய ராப் பாடகி சோபியா அஷ்ரப். இவர் சசிகலா முதல்வராகத் தேர்வானதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தன் குழுவினர் நான்கு பேருடன் இணைந்து நேற்றுமுன்தினம் நள்ளிரவு போயஸ் தோட்டத்துக்கு வெளியே கோபமாக ராப் பாடல் இசைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார். ’நான் உங்களுக்கு வாக்கு போடவில்லை, நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல’ என்று கடும் கோபத்துடன் ராப் செய்துள்ளார்.

சசிகலா தற்போது எம்எல்.ஏவாக இல்லை. 6 மாதத்துக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதி மட்டுமே தற்போது காலியாக உள்ளது.

அங்கு சசிகலா போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இங்கு நின்றால் கடும் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால் எளிதில் வெற்றி பெறுவதற்கு வசதியாக தென் மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலா போட்டியிடுவதற்கு வசதியான தொகுதிகள் பட்டியலை அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தயாரித்து வருகிறார்கள். அதில் உசிலம்பட்டி தொகுதி முதலிடத்தில் உள்ளது.

ஆண்டிப்பட்டி, திருமங்கலம் தொகுதிகளும் பட்டியலில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. சசிகலாவுக்கு எதிரான உணர்வலைகள் அதிகரித்து வருவது ஒருபுறமிருக்க, பன்னீர்செல்வம் முதல்வராக நீடிக்க வேண்டும் என பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடப்பது நடக்கட்டும் என சசிகலா இன்றைய தினம் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று பதவியேற்பதாக தகவல்கள் வெளிவந்தமுள்ளன.

இதற்காக விழா மண்டபத்தில் உள்அலங்காரப் பணிகள் புயல்வேகத்தில் நடைபெற்று வருகின்றன. 


There are 2 Comments

endha oru thagudhiyum illadha sasikala yappadi atchiai ala mudiyum sothu kuvipu valakil kutravaliyum kuda

endha thagudhiyum illa dha sasikala yappadi atchiai alamudiyum sothu kuvipu valakil kutravaliyum kuda

Pages

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...